வெஜ் பிரைட் ரைஸ் ஹோட்டல்களில் கிடைக்கும் கலவை சாதம். இதனை பெரும்பாலானோர் விரும்புவர்.
ஹோட்டலில் தயார் செய்யப்படும் வெஜ் பிரைட் ரைஸின் சுவையிலேயே இதனை வீட்டில் செய்து அசத்தலாம்.
பிரைட் ரைஸில் வெஜ் பிரைட் ரைஸ், சிக்கன் பிரைட் ரைஸ், எக் பிரைட் ரைஸ் என பல்வேறு வகைகள் உள்ளன.
இப்பதிவில் சுவையான வெஜ் பிரைட் ரைஸ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 1 கப் (தோராயமாக 250 கிராம்)
முருங்கை பீன்ஸ் – 25 கிராம்
கேரட் – 25 கிராம்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 25 கிராம்
முட்டை கோஸ் – 25 கிராம்
மல்லி இலை – 15 கிராம்
மிளகுப் பொடி – 2 ஸ்பூன்
சீரகப் பொடி – 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப்பூண்டு – 2 பற்கள் (பெரியது)
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
வெண்ணெய் – 2 ஸ்பூன்
கடலை எண்ணெய் – உருளைக்கிழங்கு பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
பாசுமதி அரிசியை கழுவி வடித்துவிட்டு அரைமணி நேரம் வைத்திருக்கவும்.
காரட் மற்றும் முருங்கை பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை மிகவும் பொடியாகவும் மெல்லிசாகவும் நறுக்கவும்.
பெரிய வெங்காயத்தை நேராக மெல்லிசாக வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சியையும் வெள்ளைப்பூண்டினையும் சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.
மல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் மஞ்சள் பொடி, காஷ்மீரி மிளகாய் பொடி, உப்பு சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.
வாணலியில் தேவையான அளவு கடலை எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் ஊறிய உருளைக்கிழங்கினைச் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசியைப் போல் இரண்டரை மடங்குத் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பாசுமதி அரிசியைச் சேர்த்து, அரைவேக்காட்டிற்கும் சற்று அதிகமாக வேக வைத்து, தண்ணீரை வடித்து சாதத்தை தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் மற்றும் வெண்ணை சேர்க்கவும்.
வெண்ணெய் உருகியதும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய முருங்கை பீன்ஸ், கேரட் சேர்த்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
ஒருநிமிடம் கழித்து நறுக்கிய முட்டைக்கோஸைச் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதனுடன் மிளகு பொடி, சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து சோயா சாஸ் சேர்த்துக் கிளறவும்.
30 விநாடிகள் கழித்து தக்காளி சாஸ் சேர்த்து ஒருசேரக் கிளறி 30 விநாடிகள் வதக்கவும்.
அடுப்பினை சிம்மில் வைத்து வடித்த சாதத்தைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
அடுப்பிலிருந்து இறக்கி அதனுடன் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கினைச் சேர்த்துக் கிளறவும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்துக் கிளறவும்.
சுவையான வெஜ் பிரைடு ரைஸ் தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் குடைமிளகாயைச் சேர்த்து வதக்கி பிரைடு ரைஸ் தயார் செய்யலாம்.
அரிசியை கொதிதண்ணீரில் சேர்க்கும்போது அதனுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைத்து வடித்தால் சாதம் பொல பொலவென இருக்கும்.