வெண்ணைப் பழம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இப்பழத்தின் சதைப்பகுதியானது வெண்ணை போன்று வழுவழுப்பாக உள்ளது. இப்பழம் அவகோடா, ஆனைக்கொய்யா, முதலைபேரி, பால்டா என்றெல்லாம் வழங்கப்படுகிறது.
இப்பழம் வணிக ரீதியாக தற்போது அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இப்பழமானது தனிப்பட்ட மணம் மற்றும் சுவையினை உடையது.
இப்பழத்தின் தாயகம் மெக்ஸிகோ என்று கருதப்படுகிறது.
இப்பழமானது பூக்கும் மரவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இலவங்கம், கற்பூரம், புன்னைமரம் ஆகியவை இப்பழமரத்துடன் நெருங்கிய உறவுகளாகும். இவை அனைத்தும் லௌரசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை.
இப்பழமரம் பொதுவாக வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டலங்களில் காணப்படுகிறது. இம்மரம் செழித்து வளர காற்றோட்டமான வளமான மண்ணும், நீர்பாசனமும் தேவைப்படுகிறது.
இம்மரம் 20 முதல் 30 அடி உயரம் வளரும். இம்மரத்தில் பச்சை நிறப் பூக்கள் குளிர் காலத்தில் தோன்றுகின்றன. பூக்கள் தோன்றி 8-10 மாத இடைவெளியில் பச்சை நிறக் காய்கள் மரமெங்கும் தோன்றுகின்றன.
வெண்ணைப் பழமானது உருண்டையாகவோ அல்லது பேரிக்காய் வடிவிலோ காணப்படும். இதன் வெளிப்புறத் தோலானது அடர் பச்சை வண்ணத்தில் தடிமனாக இருக்கும். பழுக்கும்போது பழுப்பு அல்லது அடர்ஊதா நிறத்திற்கு மாறும்.
இப்பழம் வெளிப்புறத்தோல் முதலையின் தோலினை ஒத்து இருப்பதால் இப்பழம் முதலைபெரி என்று அழைக்கப்படுகிறது.
இப்பழத்தின் சதைப்பகுதியானது காயாக இருக்கும்போது வெளிர் மஞ்சள் நிறத்திலும், பழுக்கும் போது அடர் நிறத்தில் வெண்ணை போன்று வழுவழுப்பாக இருக்கும்.
இப்பழத்தின் நடுவில் அடர் பழுப்பு நிற விதை ஒன்று காணப்படும். பொதுவாக இப்பழம் 300-700 கிராம் எடை இருக்கும்.
இப்பழமரங்கள் தென்னாப்பிரிக்கா, பெரு, சிலியின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகள், வியட்நாம், இந்தோனேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, தென்இந்தியா, மலேசியா, பிலிபைன்ஸ், மத்திய அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
அவகோடா நன்கு விளைந்தவுடன் காயாகவே மரத்திலிருந்து பறிக்கப்பட்டு பழுக்க வைக்கப்படுகிறது.
வெண்ணைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வெண்ணைப் பழத்தில் விட்டமின்கள் ஏ,சி,இ,கே, பி1(தயாமின்), பி2(ரிஃபோபுளோவின்), பி3(நியாசின்), பி5(ஃபேண்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுக்கள் ஆகியவை காணப்படுகின்றன.
இப்பழத்தில் தாதுஉப்புக்களான கால்சியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகள் காணப்படுகின்றன.
பைட்டோ-நியூட்ரியன்களான ஆல்பா கரோடீன், பீட்டா கரோடீன், பீட்டா கிரிப்டோசாக்தின், லுடீன் ஸீக்ஸாத்தைன் ஆகியவை இப்பழத்தில் காணப்படுகின்றன. கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள், நார்சத்து போன்றவைகளும் இப்பழத்தில் காணப்படுகின்றன.
வெண்ணைப்பழத்தின் மருத்துவப் பண்புகள்
நல்ல செரிமானத்திற்கு
இப்பழத்தில் கரைக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை உணவினை நன்கு செரிக்கச் செய்வதோடு நச்சுப் பொருட்களை கழிவாகவும் வெளியேற்றுகின்றன.
உணவில் உள்ள நுண்ஊட்டச்சத்துகளை குடல் உறிஞ்சுவதை இப்பழத்தில் உள்ள நார்சத்தானது ஊக்குவிக்கின்றது. மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு தொடர்பானவற்றையும் நார்ச்சத்து சரிசெய்கிறது.
நமது அன்றாட நார்ச்சத்துத் தேவையில் 40 சதவீதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு செரிமான பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.
சுவாச புத்துணர்விற்கு
அவகோடா வாய்துர்நாற்றத்தினைத் தடுக்கிறது. உணவினை இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து நன்கு செரிக்கச் செய்வதால் செரிமானமின்மை காரணமாக ஏற்படும் வாய்துர்நாற்றம் தடுக்கப்படுகிறது.
இப்பழத்தில் காணப்படும் பிளவனாய்டுகள் மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு பொருட்கள் வாயில் கிருமிகளின் வளர்ச்சியைத் தடைசெய்து வாய்துர்நாற்றத்தைத் தடுத்து சுவாச புத்துணர்ச்சி கிடைக்கச் செய்கிறது.
கண்கள் பாதுகாப்பிற்கு
இப்பழத்தில் காணப்படும் பைட்டோ-நியூட்ரியனான லுடீன் ஸீக்ஸாத்தைன் கண்புரைநோய், கண்தசை அழற்சி நோய் மற்றும் வயதோதிகத்தினால் ஏற்படும் பார்வைக் குறைபாடுகள் ஆகியவற்றைச் சரிசெய்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு கண்களைப் பாதுகாக்கலாம்.
இதயப் பாதுகாப்பிற்கு
இப்பழத்தில் காணப்படும் பீட்டா சைடோஸ்டெரால் உடலின் கொலஸ்ட்ரால்; அளவினை சரியான விகிதத்தில் பராமரிக்கிறது. மேலும் இப்பழம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கிறது.
இப்பழத்தில் உள்ள பொட்டாசியமானது இரத்தத்தில் சோடியத்தின் அளவினை சரிசெய்து உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு வருவது தடைசெய்யப்படுகிறது. எனவே இப்பழத்தினை உண்டு இதயப் பாதுகாப்பினைப் பெறலாம்.
வாதநோய் சரியாக
இப்பழத்தில் காணப்படும் கரோடினாய்டுகள், ஃப்ளவனாய்டுகள், பைட்டோ-நியூட்ரியன்கள், ஒமேகா-3 அமிலம் ஆகியவை திசுக்கள், தசைகள், மூட்டுகளில் வாதத்தினால் ஏற்படும் வீக்கங்களை குறைக்கக் கூடிய பண்புகளைப் பெற்றிருக்கின்றன. எனவே இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்தால் வாதநோய் குணமாகும்.
புற்றுநோய் வராமல் தடுக்க
இப்பழத்தில் காணப்படும் கரோடினாய்டுகள், நிறைவுறாக் கொழுப்புகள் நம்மை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன.
இப்பழத்தில் காணப்படும் குளுதாதயோன் என்ற ஆன்டிஆக்ஸிஜென்ட் வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் ப்ரீரேடிக்கல்களிலிருந்து செல்களை காப்பதோடு புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
சரும பாதுகாப்பிற்கு
இப்பழத்தில் கரோடினாய்டுகள் சூரிய கதிர்வீச்சிலிருந்து வெளியாகும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
இப்பழத்திலிருந்து தயார் செய்யப்பட்ட எண்ணெயானது சூரிய கதிரினால் ஏற்படும் சரும எரிச்சலுக்கு சரியான நிவாரணத்தை தருகிறது. எனவே இப்பழத்தினை உண்டு சருமப் பாதுகாப்பினைப் பெறலாம்.
கர்ப்பிணிகளின் நலத்திற்கு
கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம் இப்பழத்தில் ஏனைய பழங்களைவிட அதிகளவு கிடைக்கிறது. ஃபோலிக் அமிலம் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகளை சரிசெய்ய இன்றியமையாதது.
மேலும் இப்பழத்தில் காணப்படும் விட்டமின் கே இரத்தம் உறைதலுக்கு துணை புரிந்து தாய் மற்றும் சேய்க்கு பாதுகாப்பினை அளிக்கிறது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் வாந்தியை இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி6 கட்டுப்படுத்துகிறது. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தினை உண்டு உடல்நலம் பேணலாம்.
எலும்புகளின் பலத்திற்கு
இப்பழத்தில் காணப்படும் தாதுஉப்புக்களான துத்தநாகம், பாஸ்பரஸ், காப்பர், கால்சியம் ஆகியவையும், பைட்டோ-நியூட்ரியனான லுடீன் ஸீக்ஸாத்தைனும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு எலும்புகளை வலுப்படுத்துகிறது. எனவே இப்பழத்தினை உண்டு எலும்புகளை பலப்படுத்தலாம்.
விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியத்திற்கு
விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான சக்தியை இப்பழம் கொடுப்பதோடு அவர்களின் உடலினை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே விளையாட்டு வீரர்கள் இப்பழத்தினை உண்டு சக்தியோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.
வெண்ணைப் பழத்தினை தேர்வு செய்யும் முறை
நல்ல மணமுள்ள கைகளில் வைத்து அழுத்தினால் மென்மையாகவும், வெளிப்புறத்தில் காயங்கள் ஏதும் இல்லாத மீடியம் சைஸ் பழத்தினை தேர்வு செய்யவும். தொட்டால் மிகவும் கடினமாகவோ, மிகவும் மெதுவாகவோ உள்ள பழத்தினை தேர்வு செய்ய வேண்டாம்.
பழுக்காத வெண்ணைப் பழங்களை அறையின் வெப்பநிலையில் வைத்து பழுத்தபின் அதனை குளிர்பதனப் பெட்டியில் வைக்கலாம்.
பழுக்காத வெண்ணைப் பழங்களை ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்களுடன் சேர்த்து பையில் கட்டி வைத்து பழுத்த பின் பிரித்து வைத்து விடவும்.
பால்பொருட்கள் ஒவ்வாமை உள்ளவர்கள் இப்பழத்தினை தவிர்த்தல் நலம்.
இப்பழமானது அப்படியேவோ, சாலட்டாகவோ, பழக்கலவையாகவோ உண்ணப்படுகிறது. மேலும் இப்பழம் ஐஸ்கிரீம், பழச்சாறு, பழக்கூழ் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
இப்பழமானது பெரும்பாலும் ஓடும் தண்ணீரில் அலசப்பட்டு, நீளவாக்கில் கீறப்பட்டு கரண்டியைப் பயன்படுத்தி இழைத்து உண்ணப்படுகிறது.
உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் வெண்ணைப் பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நலமோடு வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!