வெந்தயக் கீரை பொரியல் என்பது சுவையான மற்றும் ஆரோக்கியமான தொட்டுக்கறி ஆகும்.
லேசான கசப்பு சுவையை உடைய இக்கீரையை எவ்வாறு எளிய முறையில் சுவையாக சமைப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெந்தயக் கீரை – 2 கட்டு


பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
நிலக்கடலை – 25 கிராம் (வறுத்தது)
மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெள்ளைப் பூண்டு – 4 பற்கள் (பெரியது)
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெந்தயக் கீரை பொரியல் செய்முறை
வெந்தயக் கீரையை அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கிச் சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டவும்.
நிலக்கடலையை தோல் நீக்கி ஒன்று இரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

வெள்ளை பூண்டினை தோல் நீக்கி வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்ல எண்ணெய் ஊற்றவும்.
நல்ல எண்ணெய் காய்ந்ததும் அதில் வட்டமாக நறுக்கி வைத்துள்ள வெள்ளை பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.

இரண்டு நிமிடங்கள் கழிந்த பின்னர் சீரகம், ஒன்றிரண்டாக ஒடித்த மிளகாய் வற்றல் சேர்க்கவும்.

சீரகம் பொரிந்தவுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வதங்கியதும் பொடியாக நறுக்கி அலசிய கீரையைச் சேர்க்கவும்.

பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பினைச் சேர்த்து ஏழு நிமிடங்கள் வதக்கவும்.
கீரை நன்கு வதங்கியதும் அதனுடன் பொடித்த நிலக்கடலைப் பொடியைச் சேர்த்து ஒரு சேரக் கிளறி அடுப்பினை அணைத்து விடவும்.

சுவையான வெந்தயக்கீரை பொரியல் தயார்.

இதனை எல்லா வகை சாதங்களுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் நிலக்கடலைப் பொடிக்குப் பதிலாக தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!