வெந்தயம் – மருத்துவ பயன்கள்

வெந்தயம், கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இது, குளிர்ச்சியை உண்டாக்கும்; காய்ச்சல், சீதக் கழிச்சல், வெள்ளைபடுதல், உடல் எரிச்சல், இளைப்பு நோய் ஆகியவற்றைக் குணமாக்கும்; மலமிளக்கும். மேலும், கல்லீரல் நோய்கள், வயிற்று உப்புசம், மந்தம், குடல்வாயு போன்றவற்றையும் குணமாக்கும்; ஆண்மையையும் பெருக்கும்.

வெந்தயம் சிறுசெடி. நேராக வளரும். உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்காக இது ஆண்டு முழுவதும் பெருமளவில் பயிரிடப்படுகிறது.

மெந்தியம், மேதி, வெந்தை, வெந்தயக்கீரை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. வெந்தயக் கீரையைத் தொட்டிகளிலும் வளர்த்துப் பயன் பெறலாம். வெந்தயம் காய்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். பொதுவாக வெந்தயம் எனக் குறிப்பிடப்படுவது அனைத்தும் அதன் காய்ந்த விதைகளையே குறிக்கும்.

வெந்தயத்தைத் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை வேளைகளில், 10 நாட்கள் வரை வெந்நீருடன் உட்கொள்ள வெள்ளைபடுதல் குணமாகும்.

5 கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்து, கடைந்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து, சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னரும் செய்யலாம்.

10 கிராம் வெந்தயத்தை, நெய்யில் வறுத்து, ½ தேக்கரண்டி அளவு பெருங்சீரகமும், சிறிதளவு உப்பும் சேர்த்து, அரைத்து, மோரில் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

வெந்தயத்தை ஊறவைத்து, அரைத்து, பசையாக்கி, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் இளஞ்சூடான நீரில் தலை குளிக்க தலைமயிர் கருத்துவளரும்.

வெந்தயத்தை அரைத்து, தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.

வெந்தயத்தைப் பொன் வறுவலாக வறுத்து, பொடித்து, சலித்து, தினமும் காலை, மாலை ஒரு டீஸ்பூன் வீதம் வாயில்போட்டு தண்ணீர் குடித்து வர நீரழிவு நோய் கட்டுப்படும்.

வெந்தயத்தை, தோசை மாவு தயாரிக்கும் போது சேர்த்து அரைத்து, உபயோகப்படுத்திவர (வெந்தய தோசை ) உடல் பலம் பெறும்.

வெந்தயத்தைக் கொண்டு, மெல்பா ரொட்டி என்கிற உணவு எகிப்து நாட்டில் தயாரிக்கப்படுகின்றது. இது ஒரு பாரம்பரியமான, சத்து நிறைந்த உணவாக எகிப்து மன்னர்கள் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.

Comments are closed.