வெயிலின் அருமை – சிறுகதை

மழை காலம். நவம்பர் மாத மூன்றாவது வாரம் ஆரம்பமாகி விட்டது. கடந்த வாரத்தின் இறுதியில்தான் தீபாவளி முடிந்தது. ஆனால் இதுவரையில் ஓரிரு நாட்கள் வரை மட்டுமே மழை பெய்துள்ளது.

“இந்த வருடம் மழை அவ்வளவுதான். தீபாவளியும் முடிந்து விட்டது. குடிதண்ணீருக்கே கஷ்டம் தான்” என்று அவ்வூரில் பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள்.

முருகனுக்கு மட்டும் மழை இவ்வருடம் கட்டாயம் பெய்யும் என்றே தோன்றியது.

காரணம் ஓரிரு நாட்களின் மழைக்கு வெட்டுங்கிடங்குகளில் மட்டுமே தண்ணீரைக் கொண்டு நின்றது குவளைக்கண்ணி குளம்.

ஆனால் அக்குளத்தின் கரையில் உள்ள மரங்களில் ஏராளமான கொக்குகள், நாரைகள், செம்பருந்துகள் போன்ற பறவைகள் அதிகளவில் மரங்களின் உட்புறக்கிளைகளில் கூடு கட்டியிருந்தன.

பொதுவாக மழை பெய்து குளங்கள் நிரம்பும் காலங்களில் தான் நீர்ப்பறவைகள் அதிகளவு கூடுகட்டி இனத்தை பெருக்கும். பறவைகளின் கூடுகள் மரங்களின் உட்புறக்கிளைகளில் அதிகளவு தண்ணீர் புகாதவாறு கட்டப்பட்டிருக்கும் என்று மாமா கூறுவதை முருகன் கேட்டிருக்கிறான்.

நவம்பரின் மூன்றாவது வார திங்கள் கிழமை. அதிகாலையில் கருமேங்களைக் கொண்டிருந்த வானத்தில் சூரியன் உதித்து சோம்பலாக வெளிச்சத்தைத் தந்தது. இந்நிகழ்வு முருகனுக்கு மழை தொடங்குவதற்கான அறிகுறியாகவே பட்டது.

முருகன் காலை உணவை உண்ணும்போது டி.வியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. டி.வியின் அறிவிப்பாலும், வானத்தின் அறிகுறியாலும் முருகன் பைக்கை விடுத்து பஸ்ஸில் அலுவலகம் சென்றான்.

அலுவலகத்தில் நுழைந்ததும் மழை பெய்யத் தொடங்கியது. காற்று, இடி, மின்னல் ஏதுமின்றி மழை மிதமான அளவில் சீராக தொடர்ந்து பெய்தது. மழையை ரசிக்கும் எண்ணம் தோன்றிய போதும் அலுவலக வேலை முருகனை துரத்தியதால் அதில் மூழ்கினான்.

மதிய உணவு இடைவெளியின் போதும் மழை இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. அம்மாவுக்கு போன் செய்த போது அங்கும் காலையில் இருந்து மழை பெய்வதாக சொன்னார்.

‘நன்றாக பெய்யட்டும். மழை இல்லாது போனால் விவசாயம் இல்லாமல் போவதோடு தண்ணீருக்கும் கஷ்டம் வந்துவிடும்’ என்று எண்ணியபடி மறுபடியும் வேலையில் மூழ்கினான்.

வேலை முடித்து வெளியே வந்தபோதும் மழை பெய்து கொண்டிருந்ததை பார்த்த முருகன் ‘அப்பாடா, மழை நிற்கவில்லை. இப்போது மழைப் பார்த்து ரசிப்பேன்.’ என்றெண்ணியவாறு அலுவலகத்திற்கு இடப்பக்கத்தில் இருந்த தோட்டத்தைப் பார்வையிட்டான். அரை மணி நேரம் சென்றது தெரியாமல் அங்கே நின்று மழையை ரசித்தான்.

சுயநினைவு வந்ததும் பஸ்ஸில்தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது முருகனின் ஞாபத்திற்கு வந்தது. அங்கு வந்த அலவலக மேலாளர் முருகனை காரில் கொண்டு வந்து பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார்.

பேருந்து நிறுத்தத்தில் இருந்து நனைந்தபடி வீட்டிற்கு வந்ததும் அம்மா “ஏன்டா, இப்படி நனைஞ்சிக்கிட்டு வந்திருக்க? குடைய எடுத்திட்டு போயிருக்கக் கூடாதா? காலையில பிடிச்ச மழை விட்ட பாடயில்ல.” என்றபடி துண்டை நீட்டினாள்.

இரவு உணவை உண்டுவிட்டு முருகன் உறங்கச் சென்ற போது வெளியில் மழை பெய்வது நன்றாகவே கேட்டது. மறுநாள் காலையிலும் மழை விடாது பெய்து கொண்டிருந்தது.

குடையைப் பிடித்துக் கொண்டு தோட்டத்திற்குள் சென்ற போது சூரியனைக் காணவில்லை.

மரங்களில் இலைகள் சோர்ந்திருந்தன. காகமும், மைனாவும் தென்னங்கீற்றில் நனைந்தபடி அமர்ந்திருந்தன. கோழிகள் மரத்தடியில் ஒடுங்கிப் போய் நின்றிருந்தன. வராந்தாவில் நாய் சுருண்டு படுந்திருந்தது.

“முருகா, மாடியின் உள்வராந்தாவில் நேத்து காயப் போட்ட துணியெல்லாம் கிடக்குது. குளிச்சிட்டு அதுல இருந்து தேவையானத எடுத்துப் போட்டுட்டு ஆபிஸ்க்கு கிளம்பு. இந்த அடைமழை காலத்துலதான் வெயிலின் அருமை நமக்கு தெரியுது” என்றாள் அம்மா.

அன்று முழுவதும் மழை விடாது பெய்தது. புதன் கிழமை அதிகாலையில் முருகன் கண் விழித்த போது மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது.

காலை ஏழு மணி அளவில் மழை நின்றிருந்தது. வெளியில் சென்று பார்த்தபோது சூரியன் பளிச்சிட்டது. வானம் வெளுத்திருந்தது.

மேற்கே திரும்பிப் பார்த்த போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் மேற்குத் தொடர்ச்சி மலை, கழுவி விட்டால் போல் பளிச்சென்று இருந்தது.

மலையில் ஆங்காங்கே அடர்த்தியான வெள்ளைக் கோடுகள் தெரிந்தன. மலையில் மழை பெய்ததால் காட்டாற்றில் வெள்ளம் உண்டாகி உள்ளதை வெள்ளைக் கோடுகள் உணர்த்தின.

மலையின் ஓரிடத்தில் விண்ணைத் தொடும் கரும்பழுப்பு நிற மலைமுகட்டின் உச்சியில் இருந்து நீர் அருவியாக வழிந்தது. பார்ப்பதற்கு விண்ணிலிருந்து இறங்கி வந்த கங்கை நதியை நினைவுப்படுத்தியது.

சூரிய ஒளியில் மரங்களின் இலைகளில் உள்ள நீர்த்துளிகள் பளபளத்தன. மாதுளை, கொய்யா, வேப்பமரங்களின் இலைகள் புத்துணர்வோடு கண்களை குளுமையாக்கின.

மைனா, சிட்டுக்குருவி, காகம், கொண்டைக்குருவி, தவிட்டுப்புறா சுறுசுறுப்பாக இயங்கின. கோழிகளும் இங்கும் அங்குமாகக் குதுகாலித்தன. தெருவில் ஆட்டுக்குட்டி ஒன்று துள்ளி ஓடியது.

இயற்கையை ரசித்துவிட்டு வீட்டிற்குள் வந்த போது “மலையில ஒரே வெள்ளக்காடு. மேற்க இருந்து கிழக்க வரைக்கும் உள்ள கண்மாய் எல்லாம் நிறைச்சிருச்சாம். இந்த வருசம் விவசாயத்துக்கும், குடிதண்ணீருக்கும் கஷ்டமில்ல” என்று அம்மாவிடம் கூறிக் கொண்டிருந்தார் அப்பா.

முருகன் குளித்து சாப்பிட்டு அலுவலகத்திற்கு பைக்கில் தயாரானான். “அண்ணே, டவுண் பக்கம் வேல இருக்கு. என்னையும் உங்ககூட கூட்டிட்டுப் போங்களேன்” என்றான் பக்கத்து வீட்டு கந்தசாமி.

கந்தசாமியை பைக்கில் உட்கார வைத்து செல்லும் போது வழியில் குவளைக்கண்ணி குளம் நீரால் தளும்பியது. ஆண்டாள் தோப்பிற்கு அருகில் வந்தபோது தோப்பிற்குள் முழங்கால் அளவுக்கு தண்ணீர் கெட்டியிருந்தது. புளியமரங்களின் நிழல் தண்ணீரில் தெளிவாக பிரதிபலித்தது.

அந்த நேரத்திலும் தவளைகள் கத்திக் கொண்டிருந்தன. ‘தண்ணீரைக் கண்டாலே தவளைகளுக்கு கொண்டந்தானே’ என்று மனதிற்குள் முருகன் எண்ணினான்.

மெயின் ரோட்டிற்கு வந்த போது நாய் ஒன்று நடுரோட்டில் படுத்திருந்தது. ஹார்ன் அடித்த போதும் அசையவில்லை.

“ரெண்டு நாளா அடைமழை பெய்ச்சு இன்னிக்குத்தான் வெயில் அடிக்குது. காஞ்ச ரோட்ல வெயிலுக்கு சுகமா படுத்திருக்கு. பாவம் விடுங்கண்ணே. ஓரமா போங்க” என்றான் கந்தசாமி.

“நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது பழமொழி. வெயிலின் அருமை அடைமழையில் தெரியும் புதுமொழின்னு வைச்சிருவோம்.” என்றபடி சிரித்தான் முருகன்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.