வெற்றிலை – மருத்துவ பயன்கள்

வெற்றிலை விறுவிறுப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது.உணவுக்குப் பின்னர் 2 வெற்றிலைகளை வாயில் இட்டு மென்று, சாற்றை விழுங்க செரிமானத் தன்மை அதிகரிக்கும்.

வெற்றிலை வெப்பத் தன்மையானது. இது, கோழையை இளக்கும்; காணாக்கடி, நீரேற்றம், தலைபாரம், மாந்தம், வயிற்றுவலி, வயிற்று உப்புசம் போன்றவற்றைக் குணமாக்கும்.

வெற்றிலைக் காம்பை ஆமணக்கெண்ணெய்யில் தோய்த்து ஆசன வாயில் வைக்க குழந்தைகளுக்கு எளிதில் மலங்கழியும்; தொப்புள் பகுதியில் பற்றிட நன்கு சிறுநீர் இறங்கும்.

வெற்றிலை கொடி வகையைச் சார்ந்தது. வெப்பப் பகுதிகளிலும், சதுப்பான நிலப் பகுதிகளிலும் சாதாரணமாக வளரும் தாவரம். இதன் இலைகளின் பரவலான உபயோகத்திற்காகப் பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது.

தாம்பூலம், தாம்பூலவல்லி, திரையல், நாகவல்லி, மெல்லிலை, வெள்ளிலை, மெல்லடகு ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்கள் வெற்றிலை தாவரத்திற்கு உண்டு.

கடையில் வெற்றிலை பச்சையாகக் கிடைக்கும். பொதுவாக வெற்றிலை எனக் குறிப்பிடப்படுவது வெற்றிலைக் கொடியின் இலைகளையே ஆகும்.

2 தேக்கரண்டி அளவு வெற்றிலை சாறு, உணவு சாப்பிட்ட பின்னர் குடிக்க அஜீரணம் தீரும்.

தீப்புண் குணமாக வெற்றிலையை, நெய் தடவி, இலேசாக வதக்கி, புண்ணின் மீது பற்றாகப் போட வேண்டும்.

தலைவலி குணமாக வெற்றிலை சாற்றுடன், சிறிதளவு கற்பூரம் சேர்த்துக் குழைத்து, வலியுள்ள இடத்தில் பூச வேண்டும்.