விடாமுயற்சி வெற்றி தரும்

விடாமுயற்சி வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

உண்மையைச் சொன்னால் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசமே விடாமுயற்சிதான்.

எல்லோருக்குமே கனவுகள் இருக்கின்றன. எல்லோருமே அவற்றை நனவாக்க உழைக்கின்றோம். ஒரு சிலர் வெற்றி பெறுகின்றார்கள். பலர் தோல்வியை தழுவின்றோம்.

தோல்வி என்பது நம் மனதைக் கலங்கடித்து விடுகிறது.

நமக்கு தெரிந்த வரையில் நன்கு திட்டமிட்டுத்தான் ஓர் இலக்கை நிர்ணயித்திருப்போம்.

நம்மால் திரட்ட முடிந்த அளவில் எல்லா வளங்களையும் (பணம், நேரம் முதலியவை) திரட்ட முயற்சி செய்திருப்போம்.

நம்முடைய முழு உழைப்பையும் கொடுத்திருப்போம். வெற்றி நிச்சயம் என்றே நினைத்திருப்போம்.

வெற்றி எனும் சிகரத்தில் ஏறுவோம் என்று நினைத்திருக்கும் போது, தோல்வி என்னும் பள்ளத்தாக்கில் வாழ்க்கை நம்மைத் தள்ளியிருக்கும்.

 

அப்போது நம் மனதில் நம்பிக்கையின் இடத்தைப் பயம் எடுத்துக் கொள்ளும். எங்கும் இருள் சூழ்ந்திருப்பதாகவே தோன்றும்.

உயர்ந்த இலக்கோடு வாழத் துவங்கிய நம்மை வாழத் தெரியாதவன் என்று நம் மனமே சொல்லும். பெரிய இலக்குகள் இல்லாதவர்கள் மகிழ்வாய் இருப்பது போல் தோன்றும்.

பெரிய இலக்குகளை அடைந்தவர்களை அதிர்ஷ்டம் உடையவர்கள் என்றும் நமக்கு அத்தகைய அதிர்ஷ்டம் இல்லை என்றும் நம்மனம் சொல்லும்.

மொத்தத்தில் இந்த முயற்சி வேண்டாம் விட்டுவிடு என்ற எண்ணம் தோன்றும்.

 

இத்தகைய சூழ்நிலையை அனைவரும் தங்கள் வாழ்வில் எதிர்கொள்கிறார்கள்.

இந்த நிலையில் எடுக்கும் முடிவுதான் அவர்கள் வெற்றியாளர்களா? இல்லை தோல்வியாளர்களா? எனத் தீர்மானிக்கின்றது.

தோல்வி என்பது தற்காலிகமானது ஆனால் இலக்கைக் கைவிட்டு விடுவது என்பது நிரந்தரமானது.

தோல்வியடைந்தற்காக இலக்கைக் கைவிட்டு விட வேண்டிய அவசியமில்லை.

தோல்வியடையாமல் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவு. பலமுறை கீழே விழுந்துதான் ஒரு குழந்தை நடக்கப் பழகுகிறது. பலமுறை கீழே விழுந்துதான் நாம் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டோம்.

கீழே விழுந்தவற்காக வருத்தப்பட்டு ஒரு குழந்தை நடக்க முயற்சிக்காமல் இருந்தால் அது வாழ்க்கை முழுவதும் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

தோல்வி என்பது வெற்றி என்பதற்கான எதிர்ச் சொல் என்றே நாம் நினைக்கிறோம். தோல்வி என்பது வெற்றிக்கான அடிப்படை என்பதே உண்மை. வெற்றியை விட நாம் தோல்வியிலிருந்தே அதிகம் கற்றுக் கொள்கிறோம்.

நாம் வெற்றி பெறுவதற்கான ஆயுதம் விடாமுயற்சி என்பதைத் தோல்வி நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றது.

 

நாம் தோல்வி அடைந்த போது செய்த தவறுகளை எல்லாம் நீக்கி விட்டுப், பொறுமையுடன் புதிதாய் முயற்சி செய்யும் போது வெற்றி நமக்கு அருகில் வரும்.

நமது பயணத்தில் நாம் கீழே விழமாட்டோம் என்பது கிடையாது. ஆனால் கீழே விழும்போதெல்லாம் உடனே எழுந்து விடுவோம் என்பதுதான் விடாமுயற்சி.

விடாமுயற்சி என்பது நமது இலக்கைக் காதலிப்பது ஆகும். எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றைத் தாண்டி இலக்கை அடைய முயற்சி செய்வதாகும்.

விடாமுயற்சி என்பது உயர்ந்த இடத்தை அடைவதற்கு உதவி செய்யும். அதே போல் உயர்ந்த இடத்திலிருந்து கீழே விழாமலும் நம்மைப் பாதுகாக்கும்.

விடாமுயற்சி என்பதே வெற்றியின் ரகசியம் ஆகும்.

நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை கூர்ந்து கவனியுங்கள்

அறிவாளிகள் தோற்றிருப்பார்கள்!

திறமையுள்ளவர்கள் தோற்றிருப்பார்கள்!

பணக்காரர்கள் தோற்றிருப்பார்கள்!

ஆனால் விடாமுயற்சி உள்ளவர்கள் வென்றிருப்பார்கள்!

நீங்களும் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் இணைய விடாமுயற்சியைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.

வ.முனீஸ்வரன்

 

3 Replies to “விடாமுயற்சி வெற்றி தரும்”

Comments are closed.