வெள்ளம் – பேரிடர் மேலாண்மை

அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரினையையே நாம் வெள்ளம் என்கிறோம். இது மிக பெரிய அழிவை ஏற்படுத்தும் ஓர் பேரிடராகும்.

வடகிழக்கு பருவ காலங்களில் குறைந்த நேரத்தில் பெய்யும் மிக அதிக மழையினால் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஒரிஸா ஆகிய மாநிலங்களிலும, தென்மேற்கு பருவ காலங்களில் மும்பைப் பகுதிகளிலும் பொதுவாக வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன.

வெள்ளத்திற்கான கால அளவு, இடைவெளி மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை வரையறுத்து கூற இயலாது. பொதுவாக வெள்ளத்தினால் தாழ்வான பகுதிகளே பாதிக்கப்படுகின்றன.

 

வெள்ளத்திற்கான காரணிகள்

மிகஅதிக மழைப்பொழிவு, புயல், பனிஉருகுதல், சுனாமி மற்றும் அணைக்கட்டுகள் உடைதல் ஆகிய காரணங்களால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

நீர் தேக்கிவைக்கும் இடங்களின் கொள்ளளவை விட அதிகமாக மழைபொழிவு ஏற்படும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

மிக குறைந்த நேரத்தில் அதிக மழைப்பொழிவு வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும். நீண்ட நாட்களுக்கு மழை தொடர்ந்து குறைந்த அளவில் பெய்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

கடல்களில் தோன்றும் புயல்கள் மற்றும் சூறாவளிகள் காரணமாக அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு தோன்றுகிறது.

நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்படும் சுனாமி வெள்ளத்தை உண்டாக்கும்.

அணைக்கட்டிலிருந்து திடீரென அதிக அளவு தண்ணீர் திறக்கும்போது வெள்ளமானது ஏற்படுகின்றது.

உயரமான மலைப்பகுதிகள் பனிகளால் மூடப்பட்டிருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது பனி உருகி வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

இன்றைய காலத்தில் மழைப்பொழிவு மட்டுமல்லாமல் காடழிப்பு மற்றும் புவிவெப்பமயமாதல், நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுதல் ஆகியவையும் வெள்ளம் ஏற்பட‌ முக்கிய காரணமாகும்.

 

வெள்ளத்தின் வகைகள்

வெள்ளத்தினை பொதுவாக திடீர் வெள்ளப்பெருக்கு, விரைவான வெள்ளப்பெருக்கு, மெதுவான வெள்ளப்பெருக்கு என மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம்.

திடீர் வெள்ளப்பெருக்கு

இவ்வகை வெள்ளப்பெருக்கு மிகக்குறுகிய காலஅளவில் ஏற்படுகின்றது. அதாவது வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலஅளவு சில நிமிடங்களிலிருந்து 2-6 மணிநேரம் வரை இருக்கும்.

இவ்வகை ஏற்பட அதிக மழைப்பொழிவு, அணைக்கட்டு உடைதல், பனிஉருகுதல் போன்றவை காரணிகள் ஆகும். மெதுவாக நகரும் புயலினால் கூட இவ்வகை சிலநேரங்களில் ஏற்படலாம்.

இவ்வகையில் உயிர் மற்றும் பொருட் சேதம் அதிக அளவு ஏற்படும். இவ்வகை வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது எச்சரிக்கை செய்வது மற்றும் மாற்றுவழி கண்டுபிடிப்பது என்பது கடினமான செயல் ஆகும்.

 

விரைவான வெள்ளப்பெருக்கு

இவ்வகை வெள்ளப்பெருக்கு ஏற்பட ஒன்று முதல் இரண்டு நாட்கள் ஆகும். இவ்வகை வெள்ளப்பெருக்கு அழிவை ஏற்படுத்தினாலும் திடீர் வெள்ளப்பெருக்கைப் போல் அதிகம் ஏற்படுத்துவதில்லை.

இவ்வகைப் பெருக்கினால் ஏற்படும் உயிர் சேதத்தைத் தடுக்க முடியும்.

 

மெதுவான வெள்ளப்பெருக்கு

நீர்நிலைகள் நிரம்பி வழிதலினால் இவ்வகை வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இவ்வகை ஏற்பட வாரங்கள் ஆகும். இவ்வகை வெள்ளப்பெருக்கில் மக்கள் நோய்வாய்படுதல், பாம்புக்கடி போன்றவற்றிற்கு உட்படுகின்றனர்.

வெள்ளப் பெருக்கினால் கழிவுநீர் வடிகால் அமைப்பு அழிக்கப்படுதல், நீர் மாசுபடுதல், மண் அரிப்புகள், வண்டல் படிதல், நீர் தேங்குதல், வேளாண்மை நிலங்கள், கால்நடைகள் அழிக்கப்படுதல், மீன்பிடிச் சாதனங்கள் சேதப்படுதல் மற்றும் உயிர்சேதங்கள் ஏற்படுகின்றன.

வெள்ளப் பெருக்குகள் மற்றும் வறட்சி ஆகிய இரண்டும் பருவ கால மாறுபாட்டினால் ஏற்படுகின்றன.

 

பேரிடர் தணித்தல்

நீர் வழிந்தோடலைத் தவிர்க்க பல கால்வாய்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக வேளாண்மை நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளிலிருந்து நீர்வழிந்தோட கால்வாய்கள் தேவை.

ஆற்றின் கரைகளை உயர்த்த வேண்டும். குறிப்பாக குளங்கள் மற்றும் ஏரிகளை தூர் எடுத்தல் வேண்டும். தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு முன்னால் நீர் புகாமல் இருக்க மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.

காடுகளை வளர்க்க ஊக்கப்படுத்த வேண்டும்.

மழைநீர் சேமிப்பு முறைகளில் ஏதேனும் ஒரு முறையின் மூலம் மழை நீரைச் சேகரிக்க வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான பகுதிகளுக்கு இடம் பெயர்தல் வேண்டும்.

வெள்ளப் பெருக்கின் போது மீட்புப் பணிகளில் பங்கு கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.