வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் வாட்டி எடுக்கும் கோடை வெப்பத்திற்கு குறைந்த செலவில் நிவாரணம் அளிக்கும் இயற்கையின் அற்புதக் கொடையாகும்.

இது காய் என்றே பொதுவாக அறியப்பட்டாலும் விஞ்ஞானிகள் இதனை பழம் என்றே கூறுகின்றனர்.

இது பெரும்பாலும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது. பச்சை, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு உள்ளிட்ட வண்ணங்களில் இது கிடைக்கிறது.

கடுமையான வெப்பத்திலும் இதனைத் தொட்டவுடன் குளிர்ச்சியை நாம் உணரலாம். இதுவே இக்காயின் சிறப்பாகும். இக்காயினை எல்லாதரப்பு மக்களும் விரும்பி உண்ணுவர்.

வெள்ளரிக்காயின் தாயகம் இந்தியாவின் இமயமலைப் பகுதியாகும்.

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே இக்காய் கண்டறியப்பட்டு பயிர் செய்யப்பட்டது. எகிப்து, கிரேக்க, ரோமானிய நாகரிகங்களிலும் இக்காய் பயன்படுத்தப்பட்டது.

சீனா உலகின் வெள்ளரிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. உலகில் மொத்த வெள்ளரிக்காய் உற்பத்தியில் சீனா மூன்றில் இரண்டு பங்கினை உற்பத்தி செய்கிறது.

ஈரான், துருக்கி, ரஷ்யா, ஜப்பான், எகிப்து, ஸ்பெயின், மெக்ஸிகோ, உக்ரைன், இந்தோனேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெள்ளரிக்காயை பணப்பயிராக உற்பத்தி செய்கின்றன.

ஈரான், மெக்ஸிகோ, ஸ்பெயின் ஆகியவையே அதிக அளவு வெள்ளரியை ஏற்றுமதி செய்கின்றன. உலகில் அதிக அளவு பயிர் செய்யப்படும் உணவுப்பொருட்களில் வெள்ளரி நான்காம் இடத்தைப் பெறுகிறது.

வெள்ளரியின் அறிவியல் பெயர் குக்குமிஸ் சட்டைவஸ் என்பதாகும். இது கொடி வகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இக்கொடியானது எல்லா இடங்களிலும் எளிதில் வளரும் தன்மையுடையது.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய்

 

பொதுவாக வெள்ளரி உருளை வடிவில் அடர் பச்சை முதல் வெளிர் பச்சை வரை உள்ள வண்ணங்ளில் காணப்படுகிறது. இக்காயின் உட்புறம் வெளிர் பச்சைநிற தண்ணீர் சத்து நிறைந்த சதைப்பகுதியையும் அதனுள் வெள்ளை நிற உண்ணக்கூடிய விதைகளையும் கொண்டுள்ளது. பொதுவாக வெள்ளரியானது இளங்காயாக இருக்கும்போதே பறித்து உண்ணப்படுகிறது.

 

வெள்ளரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வெள்ளரியில் விட்டமின்கள் ஏ, சி, கே, பி1 (தயாமின்), பி2(ரிபோஃளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

தாதுஉப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவைகளும் பொட்டாசியம், சோடியம் போன்ற எலக்ரோட்டுகளும் காணப்படுகின்றன.

இக்காயில் பைட்டோநியூட்ரியன்களான பீட்டா கரோடீன், லுடீன் ஸீன்தாக்ஸைன், கிரிப்டோ பீட்டா ஸாந்தைன் ஆகியவை உள்ளன. புரதம், கார்போஹைட்ரேட், நார்சத்து, குறைந்த எரிசக்தி ஆகியவற்றை வெள்ளரி கொண்டுள்ளது.

 

வெள்ளரியின் மருத்துவ பண்புகள்

மூளையின் பாதுகாப்பிற்கு

வெள்ளரியில் பிஸ்டின் என்ற அழற்சி எதிர் ஃபிளவினால் உள்ளது. இந்த ஃபிளவினால் மூளையின் செயல்திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வயதோதிகத்தினால் ஏற்படும் நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மூளை செயல்பாட்டின் குறைபாடு ஆகியவற்றை பிஸ்டின் நிவர்த்தி செய்கிறது.

மேலும் பிஸ்டின் அல்சீமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் புலனுணர்வு செயல்பாடுகளை பராமரிக்கவும் உதவுகிறது. எனவே பிஸ்டினை உடைய வெள்ளரியை அடிக்கடி உணவில் சேர்த்து மூளையினைப் பாதுகாக்கலாம்.

 

உடலில் உள்ள நீர்சத்தின் அளவினைப் பாதுகாக்க

வெள்ளரியில் 96 சதவீதம் நீர்சத்து உள்ளது. எனவே உடலில் உள்ள நீர்சத்தின் அளவினை வெள்ளரியை உண்டு பாதுகாக்கலாம். மேலும் வெள்ளிரியின் நீர்சத்தானது தூய்மையானதும், சத்தானதும் ஆகும்.

வெள்ளரியில் உள்ள நீர்சத்து மற்றும் எலக்ரோடுகள் கோடைகாலத்தில் உடலின் நீர் சத்தினைப் பராமரிப்பதோடு உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

 

சீரான இரத்த அழுத்தத்தைப் பெற

வெள்ளரியானது அதிக அளவு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்சத்தினைக் கொண்டுள்ளது. இவை உடலில் சீரான இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கின்றன. எனவே குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் வெள்ளரியை உண்டு சீரான இரத்த அழுத்தத்தைப் பெறலாம்.

 

சருமப் பாதுகாப்பு

சரும எரிச்சல், அரிப்பு, வேனற்கட்டிகள், வீக்கம் ஆகியவற்றிற்கு வெள்ளரிச்சாறு குளிர்ச்சியையும், நிவாரணத்தையும் அளிக்கிறது.

வெள்ளரித்துண்டுகளை கண்ணின் மேல்பட்டையில் வைக்க உடல்சூட்டினால் கண்களில் ஏற்படும் காலை வீக்கம் குறைந்து கண்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.

சூரிய வெப்பத்தினால் ஏற்படும் சருமப்பாதிப்புகள் மற்றும் வேனற்கட்டிகளுக்கு வெள்ளரியை அரைத்து பூசி நிவாரணம் பெறலாம்.

 

கேசப் பாதுகாப்பு

வெள்ளரியில் சிலிக்கா மற்றும் கந்தகம் என்னும் தாதுஉப்புகள் காணப்படுகின்றன. இவை கேசத்தை பெலிவுறச் செய்வதோடு உறுதியானதாவும் மாற்றுகிறது.

மேலும் இக்காயில் காணப்படும் சிலிக்காவானது நகங்களை உறுதியானதாகவும், பளபளப்பானதாகவும் மாற்றுகிறது. எனவே வெள்ளரியை உண்டு கேசம் மற்றும் நகங்களைப் பாதுகாக்கலாம்.

 

வாய்துர்நாற்றம் நீங்க

வாய்துர்நாற்றத்திற்கு வாயில் உள்ள பாக்டீரியா முக்கிய காரணமாகும். வெள்ளரியில் உள்ள நீர்சத்து மற்றும் நார்சத்தானது உமிழ்நீர் சுரப்பினை அதிகரிக்க செய்கிறது. இதனால் வாயில் பாக்டீயாவின் வளர்ச்சி தடைப்பட்டு வாய்துர்நாற்றம் நீங்குகிறது.

எளிய முறையில் வாய்துர்நாற்றம் நீங்க வெள்ளரித்துண்டினை வாயில் போட்டு மேல் அன்னத்தில் ஐந்து நிமிடங்கள் வைத்திருக்க வெள்ளரியில் உள்ள பைட்போ நியூட்ரியன்கள் பாக்டீரியாவை தடுத்து வாய்துர்நாற்றத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

 

எலும்புகளின் பாதுகாப்பிற்கு

வெள்ளரியில் உள்ள விட்டமின் கே அதிகம் உள்ளது. விட்டமின் கே-வானது எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. விட்டமின் கே குறைபாடால் எலும்பு முறிவு ஏற்படும்.

மேலும் விட்டமின் கே-வானது கால்சியத்தினை உடல் உட்கிரகிக்க துணைபுரிகிறது. எனவே வெள்ளரியை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.

 

நல்ல செரிமானத்திற்கு

வெள்ளரியானது அதிக அளவு நீர்சத்தினையும், நார்சத்தினையும் கொண்டுள்ளது. இந்த நீர்சத்தும், நார்சத்தும் செரிமானம் நன்கு நடைபெற உதவிபுரிகிறது.

வெள்ளரியின் தோலில் கரையாத நார்சத்து அதிகம் உள்ளது. இது குடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்ற‌ உதவி புரிவதோடு மலச்சிக்கலையும் தடுக்கிறது. எனவே வெள்ளரியை உண்டு நல்ல செரிமானத்தைப் பெற்று மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.

 

கீல்வாதம் மற்றும் மூட்டுவலி பிரச்சினைகள் நீங்க

வெள்ளரியில் காணப்படும் சிலிக்காவானது தசைகள், தசைநார்கள், தசைநாண்கள், குறுத்தெலும்பு, எலும்பு ஆகியவற்றில் காணப்படும் இணைப்புத்திசுக்களை வலுப்பெறச் செய்வதோடு மூட்டினை சரிவர இயங்கச் செய்கிறது.

மேலும் வெள்ளரியில் காணப்படும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை கீல்வாதத்திற்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கின்றன.

 

சர்க்கரை நோயாளிகளுக்கு

வெள்ளரியானது குறைந்த அளவு எரிசக்தியினைக் கொண்டுள்ளது. மேலும் கணையத்தில் இன்சுலின் சுரப்பிற்கு அவசியமான ஹார்மோனானது வெள்ளரியில் உள்ளது. எனவே வெள்ளரியை உண்டு இன்சுலின் சுரப்பினை அதிகரிச் செய்து சர்க்கரை நோயாளிகள் நிவாரணம் பெறலாம்.

 

வெள்ளரியைத் தேர்வு செய்யும் முறை

வெள்ளரியை வாங்கும்போது அடர் பச்சை முதல் மிதமான பச்சை நிறத்தில் உள்ள இளமையான வெள்ளரியைத் தேர்வு செய்யவும். சுருங்கிய, குழிவிழுந்த மஞ்சள் நிற வெள்ளரியைத் தவிர்க்கவும்.

மேற்பரப்பில் வெட்டுக்காயங்கள், புள்ளிகள் உள்ளவற்றையும், முற்றிய வெள்ளரிக்காய்களைத் தவிர்க்கவும்.

வெள்ளரி சீக்கிரம் உலர்ந்து விடும். ஆதலால் இதனை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பலநாட்கள் பயன்படுத்தலாம். அறையின் வெப்பநிலையில் இவற்றை ஓரிரு நாட்கள் மட்டுமே வைத்திருந்து பயன்படுத்த முடியும்.

வெள்ளரியானது அப்படியேவோ, சாறாகவோ, சாலட்டாகவே உண்ணப்படுகிறது. சூப்புகள், ஊறுகாய்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. சமையலிலும் வெள்ளரிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

சத்துகள் அதிகம் கொண்டு எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கையின் படைப்பான வெள்ளரியை உண்டு மகிழ்வான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.