விரைவாக எழுந்து சமையல் வேலை எல்லாம் முடிச்சு விட்டு, சாப்பிடுவதற்கு தூக்கு வாளியில் ரசஞ்சோறும் உருளைக்கிழங்கையும் எடுத்துகிட்டு போகும்போது, “தம்பி சாப்பாடு பண்ணி வச்சிருக்கேன் அம்மா!சாப்பிட்டு பள்ளிக்கூடத்துக்கு போ தம்பி! அம்மா போயிட்டு வரேன் வியாபாரத்துக்கு” என்று தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய மகன் செல்லமுத்துவிடம் சொல்லிக்கொண்டே அவசரமா ரெண்டு கட்டப்பையை எடுத்துக்கிட்டு பஸ் ஸ்டாண்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் அன்னலட்சுமி.
‘இன்னைக்கு, கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு. ராத்திரி நல்ல தூக்கம். உடம்பு அடித்துப் போட்டது போல ஒரே வலி. அங்கேயும் இங்கேயும் அலைந்து வியாபாரம் பார்க்கிறதுக்குள்ளயும் என்ன நோன்னு ஆயிடுது!’
பாவம் என்ன செய்ய? அவளுக்கு இதை விட்டா வேற பொழப்பு இல்லை.
அஞ்சு மணி வண்டியை விட்டு விட்டு 5:30 மணி வண்டிக்கு காத்திருந்தாள்.
வண்டி ஒலியெழுப்பிக் கொண்டே வந்து கொண்டிருந்தது. ஒரு வழியா வண்டியில ஏறி உட்கார்ந்தாள்.
‘சீக்கிரமா போனாதான் பார்த்து வாங்க முடியும். இல்லாட்டி மத்தவங்க எல்லாம் நல்ல காயா பொறுக்கிட்டு போயிருவாங்க.
நமக்கு ஏதோ வத்தலோ தோத்தலோ தான் கிடைக்கும். ரெண்டு நாளைக்கு முன்னாடி வாங்கின காய்கூட கொஞ்சம் சரியில்லாம இருந்ததுனால லாபமே இல்ல” என்று எண்ணிக் கொண்டே வந்தாள்.
ஒருவழியா பஸ் ஸ்டாண்ட் வந்துருச்சு. அவசரமா இறங்கி சந்தை இருக்கும் திசையை நோக்கி ஓடி வந்தாள்.
அங்கே பார்த்தால் அத்தனை பெண்களும் பையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். உடனே அவளுக்கு ஒரே வியப்பு!
“என்னக்கா இப்படி உட்காந்து இருக்கீங்க! காய் வாங்கலையா?
“காய் ஏத்திட்டு வர வண்டி ஏதோ பஞ்சர் ஆயிடுச்சாம்! வேற வண்டில மாத்தி விட்டு இருக்காங்களாம். அதனாலதான் உட்கார்ந்து இருக்கோம்”
“நீ ஏன் இவ்வளவு அவசரமா வர்ற?”
சிறிது நேரத்துக்கு பிறகு வண்டி வந்தது. எல்லோரும் தாங்கள் கொண்டு வந்த பையில் வெள்ளரிக்காய்களை கிலோ கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
இவளும் இன்று 15 கிலோ வெள்ளரிக்காயை வாங்கி பையில் போட்டுக் கொண்டாள்.
எல்லா வெள்ளரிக்காய்களும் பிஞ்சாக இருந்ததால் அவளுக்கு மிகவும் சந்தோசம். ஒவ்வொரு நாளைக்கு முத்திப்போன வெள்ளரிப்பிஞ்சு கிடைத்தால் விற்பனை செய்வது மிகவும் கடினம்.
சந்தையில் இருந்து தலையில் வெள்ளரிக்காய் மூட்டையை சுமந்து கொண்டே பஸ்டாண்டில் ஒரு ஓரத்தில் நல்ல இடத்தில் தான் கொண்டு வந்த சாக்குப்பையை விரித்து அமர்ந்தாள்.
வெள்ளரிக்காயை கை பார்க்கத் தொடங்கினாள். ஒவ்வொரு கட்டிலும் ஐந்து வெள்ளரிக்காய் வைத்து கட்டி கூடையில் வைத்தாள்.
பிறகு அந்த இடத்தில் சாக்குப் பையை வைத்து மீதமுள்ள வெள்ளரிக்காய் மூட்டையை மூடி வைத்து விட்டு, கையில் வெள்ளரிப்பிஞ்சுகளை கூடையில் ஏந்திக் கொண்டு பேருந்தை நோக்கி ஓடினாள்.
“அக்கா வெள்ளரிப்பிஞ்சு! வெள்ளரிப்பிஞ்சு! வாங்கிக்கோங்க. வெயிலுக்கு நல்லா இருக்கும். இந்தாங்க 20 ரூபாய் தான்.”
“அக்கா எனக்கு 15 ரூபாயினு குடுங்க அக்கா”
“இல்லக்கா எனக்கு கட்டாதுக்கா. 20 ரூபா குடுத்தா தான் எனக்கு கொஞ்சமாவது லாபம் கிடைக்கும்”
“சரிங்க ரெண்டு கட்டு 30 ரூபாய்னு கொடுங்க வண்டி கிளம்புது”
“சரி இந்தாங்க வச்சுக்கோங்க; 30ரூபா குடுங்க”
“இந்தாங்க காசு. கொஞ்சம் உப்பு மிளகாய்ப்பொடி போடுங்க அக்கா”
“இந்தா போட்டுத்தாரேன் அக்கா” ஒருவழியாக முப்பது ரூபாய்க்கு ஒத்துக்கிட்டாள் பாவம்.
அப்படி ஓரமா நடந்து வந்தாள்.
பக்கத்துல தான் டீ கடை இருந்தது. இங்க ஏதாவது டீ குடிச்சா மட்டும் தான் தண்ணீர் குடிக்க விடுவாரு.
அந்த அளவுக்கு ஒரே கட்டுப்பாடாக இருக்கும். அந்த கடையில ஒரு பச்சை தண்ணியை கூட குடிச்சா திட்டுவார்.
அவரு பொழப்பு ஓடுவதற்காக வேண்டி ஒரு டீ வாங்கி குடிக்க எண்ணினாள்.
சூடா உளுந்த வடை ஆவி பறக்க தட்டுல வந்து விழுந்துச்சு. அதைப் பார்த்த போதுதான் ‘காலையில் சாப்பிடவில்லை!’ என்ற எண்ணம் வந்தது.
கடைக்குச் சென்று இரண்டு உளுந்த வடை சாப்பிட்டு டீயைக் குடித்தாள். அவளுக்கு வயிறு நிரம்பியதைப் போன்று இருந்தது.
இதுதான் அவளுக்கு எப்போதும் காலை உணவாக இருக்கும். கடையிலிருந்து மறுபடியும் பேருந்து நோக்கி சென்று பேருந்தின் ஜன்னல் வெளியில் நின்று கொண்டு வெள்ளரிப்பிஞ்சுகளை கூவி கூவி விற்பனை செய்து கொண்டிருந்தாள்.
ஒருசில பேர் அவளுடைய பேச்சைக் கேட்டும் கேட்காதது போல் இருந்தனர். சிலர் எந்த ஒரு பதிலும் கூறாமல் இருந்தனர். ஒரு சிலராவது “வேண்டாம்” என்று வாய் திறந்து சொன்னார்கள். மற்றவர்கள் செல்போனை பார்த்தபடியே அவளை கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
பேருந்து மெல்ல நகரத் தொடங்கியது. அப்பொழுது ஒரு முதியவர் மட்டும் 20 ரூபாய் கொடுத்து ஒரு வெள்ளரிப்பிஞ்சு கட்டை வாங்கினார்.
வாங்கிவிட்டு அந்த பணத்தை கொடுக்கும் போது பணம் கீழே தவறி விழுந்தது. பேருந்து மெல்ல மெல்ல நகன்றது. அந்த பணத்தை விரைவாக ஓடிப்போய் எடுத்தாள்.
அந்த பணத்தில் நடுவில் ஒட்டுப் போட்டு இருந்தது போன்று தெரிந்தது. அவளுக்கு முகத்தில் ஏமாற்றம் வந்தது.
‘இது செல்லுமா? செல்லாதா?’ என்று அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அதனை தன்னுடைய மணிபரசில் வைத்துப் பூட்டி விட்டாள்.இவ்வளவு நேரம் கூவி கூவி விற்பனை செய்ததற்கு 90 ரூபாய்க்கு விற்பனையானது.
வெயில் சுட்டெரித்தது. நெற்றியில் இருந்து வியர்வையானது அவள் உதட்டின் வழியே வந்தது. அதனை தன்னுடைய முந்தானையால் துடைத்துக் கொண்டு இருந்தாள்.
சூரியன் உச்சியில் வந்து நின்று கொண்டிருந்தது. அவள் அணிந்திருந்த ஜாக்கெட் முழுவதும் வியர்த்து விறுவிறுத்துப் போனாள்.
அன்னலட்சுமிக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. காலையில் கொண்டு வந்த தூக்குவாளியில் இருந்து ரசஞ்சோறும், உருளைக்கிழங்கையும் சாப்பிட்டு முடித்தாள்.
மறுபடியும் தன்னுடைய வியாபாரத்தை எப்பொழுதும் போல செய்யத் தொடங்கினாள். பேருந்து நிலையத்தில் ஒரு சில பேருந்துகள் வந்து நின்று கொண்டிருந்தன.
ஒருசில பேருந்துகள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன. பேருந்து வரும் திசையை நோக்கி ஓடினாள். அங்கும் இங்குமாக அலைந்து ஒரு வழியாக பாதி வெள்ளரிப்பிஞ்சுகளை விற்று விட்டாள்.
சூரியன் மெல்ல மறைய தொடங்கியது. பேருந்தின் ஜன்னல் வெளியில் நின்று கையில் ஏந்தி கொண்டு வெள்ளரிப்பிஞ்சுகளை விற்றதால் கை முழுவதும் ஒரே வலியாக இருந்தது
அவள் சரியாக சாப்பிடாமல் இருப்பாள்.அவள் மெலிந்த தோற்றத்திலேயே காணப்படுவாள். பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் என்ன செய்வது?
அவளுடைய கணவனும் திருமணமான இரண்டு வருடத்திலேயே, தன்னுடைய குழந்தை பிறந்து ஒரு வயது நடக்கும் போது, குடிப்பழக்கத்தால் இறந்து விட்டான்.
அவளுக்கு இந்த வெள்ளரிப் பிஞ்சுகளை விற்கும் பிழைப்பை விட்டால் வேறு வழி எதுவும் கிடையாது. இப்படி வெள்ளரிப் பிஞ்சுகளை விற்று தன்னுடைய மகனை வளர்த்து வருகிறாள்.
‘இன்று விற்பனை போதும்!’ என்று முடிவெடுத்து விட்டாள். வீட்டுக்குப் போவோம் என்று முடிவெடுத்து தன்னுடைய தோழியான செல்வி அக்காவையும் அழைத்துக் கொண்டு இருவரும் பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.
அப்போது இருவரும் வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே விற்பனையைப் பற்றி பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தனர்.
“என்ன லட்சுமி இன்னைக்கு எப்படி போச்சு உனக்கு?”
“என்னக்கா பொழப்பு! ஒரே நாய் பொழப்பு தான்! ஒரு வழியா அசல் எடுத்தது போக ஒரு 200 ரூபா கிடைச்சிருக்கு! இப்படி லாபம் கிடைக்கிற பணத்த வச்சுதான் வீட்டு வாடகை கொடுக்கணும். வீட்டுக்கு தேவையான காய்கறி எல்லாத்தையும் வாங்கி போடணும். விதவை பணம் 1000 ரூபாய் பத்த மாட்டேங்குது அக்கா”
“விடு லட்சுமி எல்லாம் ஒரு காலம் மாறும் ஒன்னும் கவலைப்படாதே சரி வீட்டுக்கு போயிட்டு வரேன் நாளைக்கு பார்ப்போம்”
வீட்டுக்குள் நுழையும் போது செல்லமுத்து தன்னுடைய வீட்டு பாடங்களை படித்துக் கொண்டிருந்தான். அம்மா வந்தவுடன் ஒரே மகிழ்ச்சி. “அம்மா பசிக்குது!” என்று கேட்டான்.
“அம்மா இப்பதான் வந்திருக்கேன். கொஞ்ச நேரம் உட்கார்ந்துகிறேன். கை, கால் எல்லாம் ஒரே வலியா இருக்குது தம்பி”
“அம்மா இன்னிக்கி உனக்கு ரொம்ப வேலையா இருந்துச்சா?”
“ஆமா டா செல்லமுத்து!அம்மாவ பாரு! நான் தான் படிக்கல இப்படி கஷ்டப்படுறேன். நீயாச்சும் நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும் ராசா!”
“சரிங்கம்மா! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீட்டு வாடகை கேட்டு முனியாண்டி மாமா வந்தாங்க. மாச கடைசி ஆயிருச்சுன்னு வாடகை கேட்டுட்டு போனாங்கம்மா. சரியா வாடகை கொடுக்கிறாப்ல இருந்தா நீங்க வீட்டில் இருங்க. இல்லைனா இன்னும் நாலு நாள்ல வீடு காலி பண்ணிடுங்கணு சொன்னாரும்மா”
“ சரிடா தம்பி! இன்னும் ஒரு ரெண்டு நாளைக்கு வியாபாரத்துக்கு போனால் வீட்டு வாடகை கொடுக்க சரியா வரும். வர்ற வருமானம் வீட்டு வாடகைக்கும், சாப்பாடுக்குமே சரியா போகிறது. கொஞ்சம் மிச்சம் பிடிக்கிறது கஷ்டமா தான் இருக்கு!”
பேசிக்கொண்டே உணவை சமைக்கத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் உணவை சமைத்து முடித்து செல்லமுத்துக்கு உணவை பரிமாறி இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
பாயை விரித்து இருவரும் தூங்க ஆரம்பித்தனர். இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது லட்சுமி கைவலியால் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
அதனைப் பார்த்துக் கொண்டே செல்லமுத்து வேதனை பட்டுக் கொண்டிருந்தான். பிறகு கண்களை மூடி அவனும் படுத்து உறங்கி விட்டான். காலையில் சேவல் கூவியது.
இன்று வழக்கம் போல் சந்தைக்கு செல்வதற்கு லட்சுமி எழுந்திருக்கவில்லை. அவளுக்கு அன்று உடம்பு சரியில்லை. கை ,கால் வலியால் படுத்து கிடந்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மெல்ல எழுந்து இரவில் பானையில் ஊற்றி வைத்த தண்ணீர்ச் சோற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அலமாரியில் செல்லமுத்துவின் பள்ளிக்கூடத்து பை கிடப்பதை பார்த்து இவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ‘இவனுடைய பை இங்கே எதற்கு கிடைக்கிறது’.என்று அவள் ஒரே யோசனையில் இருந்தாள்.
‘அவன் இன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கு போனானா? போகலையா?’ என்று அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது.
ஒருவேளை இன்று பள்ளிக்கு செல்லாமல் குளத்துக்கு குளிக்க போயிருப்பானோ?’ என்று அவள் மனதிற்குள் ஒரே நினைப்பாகவே இருந்தது.
‘சரி பள்ளிக்கூடத்துக்குப் போய் பாப்போம்!’ என்று மெதுவாக நடந்து பள்ளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். ஒரே தலைவலியோடு தன்னுடைய மகனைத்தேடி பள்ளிக்குச் செல்கிறாள்.
அங்கு பள்ளி வகுப்பறையில் மெல்ல நுழைந்து ஆசிரியரைப் பார்த்து “வணக்கம் மேடம்! நான் செல்லமுத்து அம்மா.இன்னைக்கு அவன் பள்ளிக்கூடத்துக்கு வந்தானா?”
“இல்லைங்கம்மா வரலையே! மத்த பசங்க கிட்ட கேட்டதுக்கும் தெரியலன்னு சொல்லிட்டாங்க! என்னைக்கும் லீவு போட மாட்டான். இன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையம்மா!
“வீட்டில் ஆள் இல்லைங்க மேடம் “
“சரிங்கமா. நல்லா தேடி பாருங்க!”
அப்படியே மெல்ல நடந்து கால் வலியுடன் ஊரில் உள்ள குளத்தங்கரைக்கு சென்று ஒரு நோட்டமிட்டாள். அங்கேயும் யாரும் இருப்பதாக அவளுக்கு தென்படவில்லை.
‘தென்னந்தோப்பு பக்கத்தில குண்டு விளையாடிக்கிட்டு இருப்பானோ?’ என்று எண்ணி அங்கேயும் சென்று பார்க்க தொடங்கினாள் .
அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. அப்படியே நடந்து வந்து கொண்டிருந்தாள். வரும் வழியில் பெண்கள் களையெடுத்துக் கொண்டிருந்தார்கள் .
“ஏ….லட்சுமி எங்கடி போற. மூஞ்சி வாடி போய் இருக்கு! இன்னைக்கு வியாபாரத்துக்குப் போகலையா?”
“உடம்புக்கு முடியல அதான் போகலக்கா”
“என்னடி இந்தப்பக்கம் நடந்து போற”
“என் மகனத் தேடிட்டு போறேன் அக்கா”
“பள்ளிக்கூடத்துக்கு போயிருப்பான்டி”
“பள்ளிக்கூடத்துல வரலைன்னு சொல்லிட்டாங்க அக்கா டீச்சர்”
“சின்ன பையன் எங்கேயாவது விளையாட போயிருப்பான். விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்துருவான்.
எதுக்கு இப்படி முடியாத உடம்போட அலைஞ்சுக்கிட்டு இருக்க. வீட்டுக்குப் போடி”
“சரிங்க அக்கா என்று சொல்லிவிட்டு மெல்ல நகர்ந்தாள்.
இவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவளுக்கு ஒரே குழப்பமாகவே இருந்தது.
‘இவன் எங்கு சென்றிருப்பான்?’ என்று யோசனை செய்து கொண்டே உடம்பு வலியுடன் ஊரைச் சுற்றி வந்து ஒரு வழியாக மிகுந்த கலைப்புடன் வீட்டை நோக்கி வந்து செல்லமுத்துவின் வரவை எதிர்பார்த்துக் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
‘ஒருவேளை பக்கத்து ஊரு கம்மாயில் மீன் பிடிக்கப் போயிருப்பானா?
போன வாரத்துக்கு முன்னாடி மீன் பிடிச்சிட்டு வந்தேனு கொண்டு வந்து கொடுத்தான்.
அந்த மீனை குழம்பு வச்சு சாப்பிட்டோம். ஆனால் பள்ளிக்கூடத்துக்கும் போகாம எங்க போனானு தெரியலையே!’ இந்த எண்ணத்திலேயே ஆழ்ந்து போனாள்.
ஆனால் லட்சுமியின் எண்ணம் விதிவிலக்கைப் போனது. ஏனென்றால் செல்லமுத்து இன்று தன்னுடைய அம்மாவின் பைகளை எடுத்துக்கொண்டு சந்தைக்கு புறப்பட்டான்.
சந்தையில் லட்சுமியின் தோழி செல்விஅக்காவிடம் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாததைப் பற்றி கூறி தனக்கு இன்று வெள்ளரிப்பிஞ்சுகளை வாங்கித் தருமாறு கேட்டான்.
அவளும் சரி என்று வெள்ளரிப்பிஞ்சுகளை வாங்கி கொடுத்தாள்.
“இன்று நான் விற்பனை செய்யப் போகிறேன்”
“உன்னுடைய அம்மாவுக்கு தெரிந்தால் திட்டுவாள்” என்று அவனிடம் கூறினாள்.
அதனை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு “நீங்கள் வாங்கி கொடுங்கள் செல்வி அம்மா!” என்று அடம் பிடித்து அவளிடம் கேட்டு ஒரு வழியாக வெள்ளரிப்பிஞ்சுகளை விற்பனைக்காக வாங்கி விட்டான்.
லட்சுமியின் தோழி செல்வி அக்கா அந்த வெள்ளரிப் பிஞ்சுகளை கட்டாக பிரித்து அவனுக்குத் தனியாக ஒரு கூடையில் போட்டுக் கொடுத்தாள்.
அவன் பேருந்து வரும் திசையை நோக்கி ஓடி அன்று வெள்ளரிப்பிஞ்சுகளை விற்பனை செய்யத் தொடங்கினான்.
செல்லமுத்து பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். பார்ப்பதற்கு குள்ளமாக ‘துருதுரு’வென்று இருப்பான்.
கையில் வெள்ளரிப்பிஞ்சு கூடையை வைத்துக்கொண்டு “அக்கா வெள்ளரிப்பிஞ்சு வாங்கிக்கோங்க! அண்ணே வெள்ளரிப்பிஞ்சு வாங்கிக்கோங்க!” என்று கூவி கூவி விற்பனை செய்து கொண்டிருந்தான்.
“தம்பி வெள்ளரிப்பிஞ்சு எனக்கு ஒரு கட்டு கொடு”
“இந்தாங்கம்மா 20 ரூபாய் கொடுங்க”
“இந்தா தம்பி காசு. ஏன் பள்ளிக்கூடம் போகலையா தம்பி?”
“பள்ளிக்கூடம் போகல அக்கா. எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதனாலதான் நான் இன்னைக்கு இந்த வியாபாரத்துக்கு வந்தேன். நான் இங்க வந்தது, எங்க அம்மாவுக்குத் தெரியாது!”
“ஐயோ பாவம்!”
பேருந்தில் அவனைப் பார்த்த சில நபர்கள் அவனுக்கு ஏதாவது உதவி செய்ய எண்ணி வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்கினார்கள்.
கிடைக்கும் பணத்தை தன்னுடைய டவுசர் பையில் பத்திரமாக வைத்துக் கொண்டான்.
அவனுக்கு பசி எடுத்தது. அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்று இட்லி சாப்பிட்டுவிட்டு மீண்டும் விற்பனையைத் தொடங்கினான்.
இப்படி பல பேருந்துகளுக்குள் சென்று வெள்ளரிப்பிஞ்சுகளை விற்று தனக்கு கிடைத்த பணத்தை பத்திரமாக தன்னுடைய டவுசர் பையில் வைத்தான்.
மாலை நேரமானது.
ஊருக்குச் செல்லும் பேருந்து வந்தது. அதில் தன்னுடைய பைகளை எடுத்துக் கொண்டு பேருந்தில் அமர்ந்திருந்தான்.
‘தான் இன்று வெள்ளரிப்பிஞ்சுகளை விற்று சம்பாதித்த பணத்தை அம்மாவிடம் கொடுத்தால் குடும்பச் செலவுக்கு வச்சுக்குவாங்க.
அவங்களும் பணம் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்குனு நேற்று புலம்பிக்கிட்டு இருந்தாங்க.
இந்த பணத்தைக் கொண்டு போய் கொடுத்தா அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க!’ என்று எண்ணிக் கொண்டே வந்து கொண்டிருந்தான்.
தன்னுடைய ஊர் வந்தது. அப்படியே மெதுவாக வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். வீட்டினுள் நுழைந்தான் செல்லமுத்து.
அவனே எதிர்பார்த்து காத்திருந்த லட்சுமி “எங்கடா போன இன்னைக்கு பள்ளிக்கூடம் போகலையா? “
“இல்லம்மா வெள்ளரிப்பிஞ்சு விற்கப் போனேன்” என்று மகிழ்ச்சியுடன் அம்மாவிடம் தான்
வெள்ளரிப்பிஞ்சுகள் விற்று கிடைத்த பணத்தை தன்னுடைய டவுசர் பையில் இருந்து எடுத்து கையில் கொடுத்தான்.
அதனை வாங்கிய லட்சுமி, அந்த பணத்தை அவன் முகத்திலேயே விட்டெறிந்தாள்.
“ஏன்டா செல்லமுத்து உனக்கு அறிவில்லையா? நீ எதுக்காக இப்படி வியாபாரத்துக்கு போற இது உனக்கு தேவையில்லாத வேலை!”
“இருக்கட்டுமா பரவால்ல! உனக்குத்தான் இன்னைக்கு உடம்பு சரியில்லை! இத்தனை நாள் நீதான் வியாபாரத்துக்குப் போன இன்னைக்கு ஒரு நாள் தானே நான் போனேம்மா”
“நீ யாரை கேட்டுடா போன! உன்னை நான் போகச் சொன்னேனா? நான்தான் இப்படி கஷ்டப்படுறேன்.
நீ படிச்சு நல்ல நிலைமைக்கு போவேன்னு பார்த்தா நீயும் இப்படி என்னைப் போல வியாபாரத்துக்கு போயிட்டு இருக்கயடா!
எனக்கு உடம்பு சரியில்லைன்னா ரெண்டு நாள் கழிச்சு நான் போவேன். நீ இந்த மாதிரியெல்லாம் வேலை பார்த்து என்ன கஷ்டப்படுத்த வேண்டாம்” என்று தன்னுடைய ஆதங்கத்தை செல்லமுத்துவிடம் வெளிக்காட்டினாள்.
தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. தன்னுடைய மகன் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவள் தான் லட்சுமி.
தன்னுடைய அம்மா இப்படி கோபப்பட்டதே இல்லை. இன்று அதிக கோபம் வந்ததற்கான காரணம் அவனுக்குப் புலப்படவில்லை.
அம்மாவின் பேச்சைக் கேட்டு செய்வதறியாது திகைத்துப் போய் நின்றது அந்த வெள்ளரிக்காய் விற்ற பிஞ்சு.
பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) இரண்டாமாண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com