வெள்ளருகு – மருத்துவ பயன்கள்

வெள்ளருகு முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நோய் நீக்கி உடலைத் தேற்றும்; பசியை அதிகமாக்கும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.

வெள்ளருகு சிறுசெடி வகையைச் சார்ந்தது. நிமிர்ந்த வளரியல்பு கொண்ட, பல்லாண்டுகள் உயிர்வாழும் தாவரம். வெள்ளருகு தண்டுகள் 4 கோணமானவை, வெளிறிய இலைகளை மாற்றடுக்கில் கொண்டவை.

வெள்ளருகு இலைகள், ஈட்டி போல நீண்டு உருண்டை வடிவமானவை. வெள்ளருகு பூக்கள் 5 இதழ்களுடன் கூடியவை, வெண்மையானவை, தொகுப்பானவை, கணுக்களில் அமைந்தவை. ஆண்டு முழுவதும் மலர்கள் காணப்படும்.

வெள்ளருகு கரிசல் நிலத்தில் இயல்பாக வளர்கின்றது. தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகளில், தரிசு நிலங்களில், ஆற்றுப் படுகைகளில் பரவலாகக் காணப்படுகின்றது. வெள்ளருகு முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

விஷக்கடி நஞ்சு வெளியாக வெள்ளருகு முழுத்தாவரத்தையும் இடித்து, சாறு எடுத்து, 50 மி.லி. அளவு உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். இரண்டு முறைகள் வரை, 3 மணி நேர இடைவெளியில் தரலாம். கடுமையான வாந்தி ஏற்பட்டு நஞ்சு வெளியாகும். உப்பு இல்லாத உணவையே உட்கொள்ள வேண்டும்.

ஒரு கைப்பிடி அளவு வெள்ளருகு முழுத்தாவரம், 3 மிளகு, ஒரு பல் பூண்டு, இவற்றை ஒன்றாக அரைத்து, பசையாக்கி, ஒரு டம்ளர் மோருடன் கலந்து, காலையில் மட்டும் குடிக்க வேண்டும். 10 நாட்கள் தொடர்ச்சியாக சாப்பிட வெள்ளைபடுதல் குணமாகும்.

சொறி, சிரங்கு, தோல் நோய்கள், ஊறல் ஆகியவை கட்டுப்பட வெள்ளருகு முழுத்தாவரத்தையும் தேவையான அளவு அரைத்து, பசையாக்கி, வெந்நீரில் குழைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, ஒரு மணி நேரம் வரை வைத்திருந்து, கழுவ வேண்டும்.