வெள்ளைப் பாஸ்தா செய்வது எப்படி?

வெள்ளைப் பாஸ்தா சுவையான சிற்றுண்டி ஆகும். இதனைச் சிறுவர்கள் விரும்பி உண்பர். இதனுடைய சுவையும் அலாதி.

இதனைத் தயார் செய்ய பால் பயன்படுத்தப்படுவதால் இது வெள்ளைப் பாஸ்தா என்றழைக்கப்படுகிறது.

அவசரத் தேவையின் போதும், விருந்தினர்களின் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம்.

இனி சுவையான வெள்ளைப் பாஸ்தா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாஸ்தா – 1 கப் (100 கிராம்)

பால் – 200 கிராம்

மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 3 எண்ணம்

தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

பேசில் லீஃப் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவின் அளவினைப் போன்று ஒன்றரைப் பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

அதில் தேவையான உப்பு சேர்த்து கரைந்ததும் பாஸ்தாவைச் சேர்க்கவும்.

பாஸ்தாவைச் சேர்க்கும் போது

அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.

எண்ணெய் சேர்த்ததும்

பின்னர் அடுப்பினை அணைத்து விட்டு பாஸ்தாவை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த பாஸ்தா

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து உருகியதும் அதில் மைதா மாவினைச் சேர்த்து வறுக்கவும்.

மைதாவை வறுக்கும்போது

வாசனை வந்ததும் அதில் காய்ச்சி ஆறிய பாலைச் சேர்க்கவும்.அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

பாலைச் சேர்க்கும்போது

பாலை அவ்வப்போது கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும்.

பால் கொதிக்கும் போது

பாலில் 1/3 பகுதி வற்றி கெட்டியானதும் அதில் பாஸ்தாவைச் சேர்த்து கிளறி விடவும்.

பாஸ்தாவைச் சேர்க்கும்போது

ஓரிரு நிமிடங்களில் பாஸ்தா கெட்டியாகத் தொடங்கும்.

கெட்டியாகும் போது

அப்போது ஒன்றிரண்டாக பொடித்து வைத்துள்ள மிளகாய் வற்றல் பொடி மற்றும் பேசில் லீஃப் சேர்த்து ஒருசேரக் கிளறி இறக்கவும்.

பொடிவகைகளைச் சேர்த்ததும்

சுவையான வெள்ளைப் பாஸ்தா தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றல் பொடியையோ அல்லது மிளகுப் பொடியையோ சேர்த்து பாஸ்தா தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.