வெள்ளை சோள மசாலா பூரி அருமையான சிற்றுண்டி ஆகும். இதனை அப்படியேவோ, தொட்டுக்கறியுடன் இணைத்தோ உண்ணலாம். மாலை நேரச் சிற்றுண்டியாகவும் இதனை குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கலாம்.
வெள்ளைச் சோளம் சிறுதானிய வகைகளுள் ஒன்று. சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலம் மேம்படுவதோடு உடலுக்கு உறுதி கிடைக்கும்.
குழந்தைகளுக்கு கட்டாயம் அடிக்கடி சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
இனி சுவையான வெள்ளை சோள மசாலா பூரி செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை சோள மாவு – 1 கப் (1 பங்கு)
கோதுமை மாவு – 1 கப் (1 பங்கு)
உளுந்தம் பருப்பு – 1/2 கப் (1/2 பங்கு)
பொரிகடலை – 1 1/2 டேபிள் ஸ்பூன்
ஓமம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணெய் – பூரி பொரிக்கத் தேவையான அளவு
அரைக்க
புதினா இலை – ஒரு கைபிடி அளவு
கொத்த மல்லி இலை – 2 கொத்து
கறிவேப்பிலை – 2 கீற்று
கொத்த மல்லி விதை – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 எண்ணம்
மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
செய்முறை
பொரிகடலையை அடித்து சலித்துக் கொள்ளவும்.
உளுந்தம் பருப்பினை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
20 நிமிடங்கள் கழித்து தண்ணீரை வடித்துவிட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றை சுத்தம் செய்து அலசிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் ஆகியவற்றை கழுவி காம்பு நீக்கிக் கொள்ளவும்.
கொத்த மல்லி இலை, புதினா, கறிவேப்பிலை, கொத்த மல்லி விதை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, வெள்ளை சோள மாவு, பொரிகடலை மாவு, உளுந்த மாவு, மல்லி விழுது ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அதனுடன் ஓமமத்தை கைகளுக்கு இடையே வைத்து லேசாகக் கசக்கிச் சேர்க்கவும்.
கை பொறுக்கும் சூட்டில் உள்ள தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு போல் திரட்டவும்.
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை திரட்டிய மாவில் சேர்த்து மீண்டும் ஒரு சேரத் திரட்டவும்.
திரட்டிய மாவு உள்ள பாத்திரத்தினை மூடி போட்டு மூடி அரை மணி நேரம் வைத்திருக்கவும்.
சப்பாத்தி மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.
பூரி தேய்க்கும் கல்லில் எண்ணெய் தேய்த்து சிறுஉருண்டையை வைத்து சற்று கனமாக விரிக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து சூடானதும் விரித்த மாவினை போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான வெள்ளை சோள மசாலா பூரி தயார்.
இதற்கு தேங்காய் சட்னி, சுண்டல் குருமா, உருளைக் கிழங்கு மசாலா தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பொரிகடலை மாவிற்குப் பதிலாக கடலை மாவினைச் சேர்த்து பூரி தயார் செய்யலாம்.
மறுமொழி இடவும்