வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி

வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி அளவிட முடியாதது. ஆனால் அவற்றின் வரலாறு இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய பழைய வரலாற்று ஆசிரியர்கள் முதல் இன்று எழுதும் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் வரை தாம் எழுதிய வரலாற்றில், முன்னோர் எழுதிய துறைகளை மட்டுமே தாமும் எழுதி விட்டுச் சென்று விடுகின்றனர்.

பழையவர்கள் எழுதாத துறைகள் பற்றி எழுதுவதில்லை. முன்னோர் பார்வையில் அத்துறை சார்ந்த நூல்கள் கவனப் படாமல் போயிருக்கலாம். அல்லது முன்னோர் அத்துறைக்கு எதிரான கோட்பாடு உடையவராக இருந்திருக்கலாம் இல்லது இந்நூல்களைத் தரம் குறைந்தவையென மதிப்பிட்டு இருக்கலாம். ஏதோ ஒன்று.

அவ்வாறான இலக்கிய வரலாற்றைப் பின்பற்றிப் பிற்காலத்தில் எழுதுவோர், முன்னவர் விட்டுச் சென்ற துறைகள் குறித்த செய்திகளையும், நூல்களையும் எழுதினால்தானே இலக்கிய வரலாறு சரியாக முழுமை பெறும்.

ஆனால், பெரும்பகுதி தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள், சில துறை சார்ந்த நூல்களைப் பதிவு செய்யாமல் விட்டுள்ளனர்.

அவ்வாறான துறைகளில் ஒன்றானது வேதாந்தத் துறை அதனின் ஒன்றான அத்வைதச் சமயம் சார்ந்த செய்திகள் மற்றும் நூல்கள்.

ஆதிசங்கரர்

தமிழ்நாட்டில், வேதாந்த மடங்கள் பல இருந்தன. அவை மக்களிடம் உடல், உயிர், கடவுள், உலகம் குறித்தான தத்துவார்த்தமான கருத்துக்களை, ஆதிசங்கரரின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கின.

அக்காலகட்டத்தில் (கி.பி.7ஆம் நூற்றாண்டு) இந்து சமயமானது ஆறு பிரிவுகளாகத் திரிந்து கிடந்தது. அவைகளை ஒன்று கூட்டி சண்மதம் எனும் பெயரிட்டு ஒன்றிணைத்து மதம் பிளவுபடாமல் காத்தார் ஆதிசங்கரர்.

சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் எனும் ஆறு சமயங்கள் பிரிந்து தனித்தனியாக இருந்திருந்தால், இந்து மதம் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கும். அதைத் தடுத்தாண்டவர் ஆதிசங்கரர்.

பிரம்மசூத்திரப் பேரூரை மற்றும் ஆதிசங்கரரின் நூல்கள் பெரும் மாற்றத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தின. ‘கடவுள் யார்?’ என்பதற்கான விடையைத் தேடித் தந்தார்.

முன்பிருந்த தத்துவங்கள் கடவுளை இனம் காட்டியதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு அறிவார்த்தமான கருத்துக்களைக் கூறினார் அவர்.

இவை, பெரும் மனஎழுச்சியை மக்களிடம் கொண்டு வந்தன. அக்காலத்தில் தான் தமிழகத்தில் வேதாந்த மடங்கள் நிறுவப்பட்டன.

சைவ மடங்கள், வீரசைவமடங்கள், வேதாந்த மடங்கள் என மூன்று மடங்கள் இருந்தன.

முதலிரண்டு மடங்களும் செய்த ஆன்மீக மற்றும் தமிழ்ப் பணியைப் போல் இல்லாமல், வேதாந்த மடங்கள் மாறுபட்டுக் கல்வி நிலையங்களாகவும், பிறமொழிகளிலுள்ள வேதாந்த நூல்களைத் தமிழ்ப்படுத்தியும் அரும்பணி ஆற்றி வந்தன என்கிறார் எழுத்தாளரும் நூலகருமான திரு. ரெங்கையா முருகன்.

தமிழகத்தின் பல ஊர்களில் வேதாந்த மடங்கள் சிறப்பாகச் செயல்பட்டன. அம்மடங்களில் பல முக்கியமான தமிழ்ப் பணிகளும், கல்விப் பணிகளும் நடந்தன.

அறிவுப் புரட்சியைத் தத்துவார்த்தான கேள்வி-பதில்களில் நிறைத்து புதிய தேடல்களை ஆன்மீகத்தில் தேட ஆரம்பித்தனர் இம்மடத்தைச் சேர்ந்த சாதுக்கள்.

அவ்வாறான மடங்களின் வரலாறுகள் தமிழக வரலாற்றில் தற்போது இல்லை என்பது வருத்தமான செய்தியாகும்.

பல்வேறு மடங்களின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு வேறு திசையை நோக்கிய ஆன்மீகப் பயணத்தை அவை இன்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

வேதாந்த மடங்கள் மூலம் ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கைகள் தமிழில், ஆயிரம் ஆயிரம் நூல்களாக எழுதப்பட்டன.

அவை குறித்த வரலாறுகளை இன்று சில மடங்கள் மட்டுமே பாதுகாத்து வந்துள்ளன; வெளிப்படுத்தவும் செய்துள்ளன. பிற மடங்களில் செய்யப்பட்டவைகள் ஏன் வெளிவரவில்லை என்பதற்கு விடை உலகம் அறிந்ததே.

தமிழகத்தில் எழுதப்பட்ட வேதாந்த நூல்களுக்கு எதிராகச் சைவ மடங்களில் இருந்து எதிர்ப்பு நூல்கள் பல வந்தன. அதற்குப் பதில் அளிக்கும் வகையிலும் வேதாந்த மடங்கள் நூல்களை வெளியிட்டன. ஆனால், அவை குறித்த செய்திகள் பெருமளவு எங்கும் பதிவு செய்யப்படவில்லை.

பெருவழக்காக மாற்றி ஒட்டு மொத்த சமூகமும் பின்பற்றும் வகையில், அத்வைதத் தத்துவங்களைப் போதனைகள் மற்றும் நூல்கள் மூலமாக மக்களிடம் வேதாந்த மடங்கள் கொண்டு சென்றன.

ஆன்மீகப் புரட்சி என்னும் நிலையில் மக்களிடம் பெரும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. அது போன்ற மாபெரும் புரட்சியைச் செய்த மடம் தான் கோவிலூர் மடம்.

வேதாந்த மடங்கள் பட்டியல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகாமையில் உள்ள திருத்தலம் தான் கோவிலூர்.

இவ்வூரில் ஸ்ரீலஸ்ரீ முத்துராமலிங்க ஞானத் தேசிகர், ஞானத்தைப் போதிக்கும் பல்கலைக்கழகம் போன்று கோவிலூர் மடாலயத்தைத் தோற்றுவித்தார்.

கோவிலூர் மடத்தில் சாதுக்கள் பல நூறு பேர் வேதாந்தப் பாடம் பயின்றனர். பலநூறு வேதாந்த நூல்களை மொழிபெயர்த்துத் தமிழில் சுயமாக வேதாந்த நூல்களின் சாரத்தை எழுதியும் வந்தனர். இம் மடம் சிருங்கேரி மடத்தை குரு பீடமாகக் கொண்டு இயங்குவதாகும்.

கோவிலூர் மரபு” என்று அழைத்துக் கொண்டு பல சாதுக்கள் பல ஊர்களில் சிறுசிறு மடாலயத்தைக் கட்டி வேத நூல்களைப் பயிற்றுவித்து, நூல்களை எழுதியும் வந்தனர்.

இம்மடத்தின் கீழ் வந்த மரபுசார்ந்த மடாலயங்களில் சிறந்த வகைகளாக, திருச்சி வேதாந்த தேசிகர் மடம், காளையார்கோவில் செல்லப்ப சுவாமிகள் வேதாந்த மடம், தஞ்சை பால்சாமி மடம், மதுரை குட்டைய சுவாமிகள் மடம், குன்னங் கோட்டை நாட்டார் மடம் போன்றவற்றைக் கூறலாம்.

இம்மடங்களின் இன்றைய செயல்பாடுகள் தனித்தனியாக ஆய்விற்கு உரிய ஒன்றாகும். இவற்றைக் குறித்த செய்திகள் இலக்கிய வரலாற்றில் பதிவாகவில்லை என்பதே உண்மையாகும்.

தமிழ்நாடு முழுவதும், வேதாந்த மடங்களாக நிறைய மடங்கள் இருந்தன.

அவற்றில் குறிப்பாகச் சிக்கல் உகந்தலிங்க ஞானதேசிகர் சுவாமிகள் மடம், சிதம்பரம் மௌனகுரு சுவாமிகள் மடம், திருவண்ணாமலை கந்தப்பத் தேசிகர் (ஈசான்ய ஞானத் தேசிகர்) மடம், பெரம்பலூர் வீரசுப்பையா மடம், ஆரணி அருணகிரிநாத சுவாமிகள் மடம், வண்ணாரப்பேட்டை நாராயணசாமி நாயக்கர் மடம், மதுரை நித்யானந்தாம்மாள் மடம் போன்றவை சிறப்பான தமிழ்ப் பணியையும், வேதாந்த கல்விப் பணிகளையும் செய்த வேதாந்த மடங்கள் ஆகும்.இவை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியது மிக முக்கியமான பணியாகும்.

வேதாந்த மடங்களின் பட்டியல் இன்னும் நீளமானதாகச் செல்லுகிறது. தொடர்ந்து தமிழ் பணியாற்றிய வேதாந்த மடங்களைப் பதிவு செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

கோவிலூர் மடாலயத்தில் ஸ்ரீலஸ்ரீ முத்துராமலிங்க ஞானதேசிகரிடம் பாடம் கற்றுத் தனியாகக் கண்டனூர் எனும் திருத்தலத்தில், வேதாந்த மடம் கட்டிப் பல சாதுக்களுக்கு வேதாந்தம் கற்பித்தும், பல அரிய தமிழ் நூல்களைப் படைத்தவர்கள் தான் கண்டனூர் நாகலிங்கய்யாவும் அவரது மகனார் முத்துராமலிங்க ஐயாவும் ஆவர்.

இவர்கள் இருவரும் வடமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்தியும், தமிழில் புதிதாகப் பல வேதாந்த நூல்களை எழுதியும் பணி செய்தவர்கள் ஆவர்.

கண்டனூர் வேதாந்த மடம் வந்து பாடம் கேட்ட பல சாதுக்கள் தமிழகம் முழுவதும் சென்று வேதாந்த மடம் அமைத்திருக்கின்றனர்.

கண்டனூர் நாகலிங்கய்யா வாழ்வில், பல அரிய ஆச்சர்யமான நிகழ்ச்சிகளையெல்லாம் செய்து காட்டி அருள் தருகின்ற சான்றோராகத் திகழ்ந்தார்.

இவர்களது சிறப்புகளையும் அருளையும் அவர்கள் எழுதிய நூல்களையும் எந்தத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூறப்படவில்லை.

நாம் அவர்களின் தமிழ்ப் பணியை உலகறியச் செய்வோம். சிறப்புடைய அவர்களைக் குறித்துக் காண்பதற்கு அடுத்த வாரம் வரை காத்திருப்போம்.

புதையல் தேடுவோம்…

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

2 Replies to “வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி”

 1. அருமையான கட்டுரை. மடங்கள் பற்றியான கேள்வியும் நியாயமானது. மடங்கள் உண்மையிலேயே தமிழுக்கு தொண்டு செய்தன.

  ஆதிசங்கரரின் கோட்பாட்டை முன்னிறுத்துவது நிச்சயம் கவனிக்கத்தக்க ஒன்று. அதுகுறித்த விவரத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

  மடம் என்பது பெரும் பேசுபொருளாக அமைய வேண்டும்.

  மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா.

 2. வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப் பணியை பாரதி சந்திரன் இங்கே வரலாற்று ஆவணமாகத் தந்துள்ளார்.

  பல்வேறு தமிழ் பணிகளை செய்த மடங்கள் பற்றிய விபரங்களை ஏற்கனவே வரலாற்றை எழுதியவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது அது திரித்து எழுதப்பட்டிருக்கலாம் என்றெல்லாம் நினைக்கக்கூடிய ஒரு கோணத்தில் ஆசிரியர் எழுதியுள்ளார்.

  வரலாற்றை மறைப்பதும் அதை திருத்தி எழுதுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இந்த உலகத்தில் யாராவது ஒரு ரட்சகன் உண்மையை வெளிக்கொண்டு வந்து வெட்ட வெளிச்சமாக்கி எல்லோருக்கும் தெரியப்படுத்துவார்.இதுவும் வாடிக்கையான ஒன்றுதான்.

  வரலாற்று செய்திகள் மறைக்கப்பட்டு கிடந்தால் என்ன? மறந்துவிட்டால் என்ன?

  அதுதான் பாரதிசந்திரன் இருக்கிறாரே ஒளிபாய்ச்சி வெளிக்கொண்டு வந்து உலகத்திற்கு தெரியப் படுத்த…

  தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!

  இடம் கொடுத்த இனிதுக்கு நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.