வேர்க்கடலை கார உருண்டை அருமையான சைடிஷ். இதனை வேர்க்கடலை துவையல் என்றும், வேர்க்கடலை பொடி என்றும் சொல்லலாம்.
இது எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட கலவை சாத வகைகளுக்கும் இட்லி தோசை போன்றவைகளும் பொருத்தமாக இருக்கும்.
பயணங்களின் போது இட்லி மற்றும் கலவை சாதத்திற்கு இதனை தொட்டுக் கொள்ளலாம்.
வேர்க்கடலை பிரியர்கள் மட்டுமல்லாது இதனை அனைவரும் விரும்பி உண்பர். இதனை செய்து வைத்து ஒருவாரம் வரை பயன்படுத்தலாம்.
கோடைகாலத்தில் தண்ணீர் ஊற்றிய பழைய சாதத்தினை தயிர் மற்றும் வேர்க்கடலை கார உருண்டை சேர்த்து உண்ண மிகவும் அருமையாக இருக்கும்.
இனி சுவையான வேர்க்கடலை கார உருண்டை செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை (வறுக்காதது) 1/2 டம்ளர்
மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (பெரியது)
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)
கறிவேப்பிலை – 4 கீற்று
பெருங்காயப் பொடி – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கல், தூசி இல்லாத வேர்க்கடலையைச் சேர்த்து அடுப்பினை மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.

ஓரு நிமிடம் கழித்து அதில் காம்பு நீக்கிய மிளகாய் வற்றலை சேர்த்து வறுக்கவும்.
ஐந்து நிமிடங்களில் வேர்க்கடலை வறுபட்டுவிடும்.
அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.

பின்னர் வாணலியில் வெள்ளைப்பூண்டினைச் சேர்த்து வறுக்கவும்.
மூன்று நிமிடங்கள் கழித்து அதனை வெளியே எடுத்து விடவும்.

பின்னர் கறிவேப்பிலையை சேர்த்து வறுக்கவும்.
கறிவேப்பிலை தண்ணீர் சத்து நீங்கி மொறுமொறு என்றானதும் வாணலியில் இருந்து எடுத்து விடவும்.

வறுத்த பொருட்களை ஆற விடவும்.
மிக்ஸியில் வறுத்து ஆறிய பொருட்களைச் சேர்த்து அதனுடன் பெருங்காயப் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.


பின்னர் அரைத்தவற்றை சிறுஉருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.
சுவையான வேர்க்கடலை கார உருண்டை தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் வறுத்த வேர்க்கடலைப் பயன்படுத்தி உருண்டை தயார் செய்யலாம்.
வறுத்த வேர்க்கடலையை உபயோகிக்கும் போது வேர்க்கடலையை லேசாக சூடாக்கி பயன்படுத்தவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!