வேர்க்கடலை சட்னி வித்தியாசமான சுவையினைக் கொண்டிருக்கும் அசத்தலான சட்னி ஆகும். இது தோசை, இட்லி, சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு ஏற்றது.
இனி எளிதான முறையில் சுவையான வேர்க்கடலை சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலைப் பருப்பு – 100 கிராம் (வறுத்தது)
சின்ன வெங்காயம் – 8 எண்ணம் (மீடியம் சைஸ்)
மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
புளி – நெல்லிக்காய் அளவு
இஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (மீடியம் சைஸ்)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
சீரகம் – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
வேர்க்கடலை சட்னி செய்முறை
வேர்க்கடலைப் பருப்பினை தோல் நீக்கிச் சுத்தம் செய்யவும்.
புளியை அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து நேராகக் வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சி தோல் சீவி சிறுதுண்டுகளாக நறுக்கவும்.
வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின் அதனுடன் நேராக வெட்டி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து துண்டுகளாக்கப்பட்ட இஞ்சி, வெள்ளைப் பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அடுப்பினை அணைத்து விடவும்.
முதலில் மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் சுத்தம் செய்த வேர்க்கடலைப் பருப்பினை அரைத்துக் கொள்ளவும்.
வதக்கிய வெங்காயக் கலவை, ஊற வைத்த புளி, தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும்.
பின் அதனுடன் பொடியாக்கியுள்ள வேர்க்கடலைப் பருப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டவும். சுவையான வேர்க்கடலைச் சட்னி தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பச்சை வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்தும் சட்னி தயார் செய்யலாம்.