வேர்க்கடலை சாதம் சுவைமிக்க கலவை சாதம் ஆகும். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் அலுவலகம் செல்பவர்களுக்கும் மதிய வேளை உணவாக, டிபன் பாக்ஸ் சாதமாக செய்து கொடுத்து அனுப்பலாம்.
சில நேரங்களில் வீட்டில் மீந்து போயிருக்கும் சாதத்திலும் வேர்க்கடலை சாதம் செய்யலாம்.
இது தென்னிந்தியாவில் செய்யப்படும் பிரபலமான கலவை சாத வகைகளுள் ஒன்று. இதில் வேர்க்கடலையைப் பொடி செய்தும், முழுவதாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இனி எளிய வகையில் சுவையான வேர்க்கடலை சாதம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சாதம் செய்ய
சாப்பாட்டு அரிசி – 1 உழக்கு (சுமார் 400 கிராம் அளவு)
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
வேர்க்கடலை பொடி செய்ய
வேர்க்கடலை (வறுத்தது)- சுமார் 150 கிராம் (அரிசியின் அளவில் மூன்றில் ஒரு பங்கு)
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
எள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (பெரியது)
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை (வறுத்தது)- ஒரு கைபிடி அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
வேர்க்கடலை சாதம் செய்முறை
முதலில் சாப்பாட்டு அரிசியை கழுவி, உதிரி உதிரியாக இருக்குமாறு சாதம் தயார் செய்து கொள்ளவும்.
வேர்க்கடலையை தோல் நீக்கி இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் வெள்ளை உளுந்தம் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

எள்ளினை வாணலியில் போட்டு, அதனுடன் மிளகாய் வற்றலை காம்பு நீக்கி சேர்த்து எள் பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும்.

தேங்காய் துருவலை வாணலியில் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

வாணலியில் தோல் நீக்கிய வேர்க்கடலையைச் சேர்த்து லேசாக சூடாக்கிக் கொள்ளவும்.

வறுத்த பொருட்களை நன்கு ஆற விடவும்.

பின்னர் அப்பொருட்களில் (வேர்க்கடலை நீங்கலாக) மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் தேவையான உப்பு போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
வேர்க்கடலையை தனியாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வேர்க்கடலையைப் பொடியை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பருப்புக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

வேர்க்கடலையை மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கும் போது, வேர்க்கடலையிலிருந்து எண்ணெய் வெளியேறும். ஆதலால் வேர்க்கடலையை மட்டும் தனியாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்து தாளிதம் செய்யவும்.


வாயகன்ற பாத்திரத்தில் தயார் செய்த சாதத்தில் இருந்து இரண்டு கரண்டி அளவுக்கு எடுத்துப் போடவும்.
அதில் தாளிதம் செய்ததில் சிறிதளவைச் சேர்த்து, அரைத்து வைத்துள்ள நிலக்கடலைப் பொடியில் சிறிதளவைச் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

இவ்வாறாக சாதம், தாளிதம், பொடி என மூன்றையும் சிறிது சிறிதாகச் சேர்த்து ஒருசேர கிளறவும்.

சுவையான வேர்க்கடலை சாதம் தயார்.
குறிப்பு
காரத்தை விரும்புபவர்கள் மிளகாய் வற்றலின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் தாளிதம் செய்யும்போது, வேர்க்கடலைக்குப் பதிலாக முந்திரிப் பருப்பினைச் சேர்த்து தாளிதம் செய்யலாம்.