வேர்முடிச்சுகளாய் ஊட்டிவிடுவேன் – கவிதை

ஒரு ரோஜாவை
உனக்கு தருவதற்காக
கையில் பிடித்தபடி
காத்திருக்கிறேன்.

அதன் மீதான
மாவு பூச்சிகளிடம்
தப்பி பிழைத்து
வளர்ச்சியுற்றாலும்
இப்போது
என் விரல் ரேகையில்
அதே மாவுபூச்சியின்
வழித்தடம் இருப்பதாக
உணர்ந்திருக்கும்.
பழிக்கு
தனக்கு வந்த
இலை சுருட்டல் நோயை
என் வார்த்தைகளுக்கு
பரப்பி விடுகிறது.

விரல்களை தண்டித்துவிடும்
முட்களின் மீதான
அலட்சியங்கள்
பிடிமானத்தின் பாடத்தில்
விளக்கப்பட்ட பக்குவத்தை
உன் விரல்களோடு
நான்
பழகிக்கொண்டிருப்பேன்.
ரேகைகளின்
வேர்பகுதியில்
ஒரு நுண்ணுயிராக
ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு
அனுமதி இருந்தால் போதும்.

நைட்ரஜன் சேமிக்கப்பட்ட
வேர்முடிச்சுகளாய்
உருவாக்கி வைத்து
ஊட்டிவிடுவேன்
உனக்கான ஊட்டமாக
என் அன்பை

 சிதவி.பாலசுப்ரமணி