வேற்றுலக நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 30

இரவு பத்து மணி இருக்கும்.

பெருமளவில் செயற்கை மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த நிலையில், முழுநிலவின் ஒளி எங்கும் பரவியிருந்தது.

மேகக் கூட்டங்கள் இல்லை. இயந்திர சத்தம் எதுவும் இல்லை. பறந்து கொண்டிருந்த பறவைகளின் ஒலியினை அவ்வப்பொழுது கேட்க முடிந்தது.

இரவு வானத்தைக் கண்டு மகிழ்ந்தவாறே, மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தேன். சட்டென எனது கவனம் அந்த மண் சட்டியில் சென்றது.

ஆம். கோடை காலங்களில் பறவைகளுக்காக அகண்ட மண்சட்டியில் நீரும், அதன் அருகில் தானியங்களும் வைப்பது வழக்கம்.

அந்த மண்சட்டியைத் தான் அப்பொழுது பார்த்தேன். அதிலிருந்த நீரில் நிலவின் உருவம் தெரிந்தது.

என்னதான், அறிவியல் விளக்கங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தாலும், பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் நிலவின் முழுஉருவமும், ஒரு சிறு மண்சட்டியில் இருக்கும் நீரில் தெளிவாக பார்க்க முடிவதை எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

“ரொம்ப‌ சந்தோஷமா இருக்கீங்க போல!” – நீரின் குரல் தான்.

“நீர் தானே”

“ஆமா பயப்படாதீங்க…”

“உம்ம்…”

“என்ன சார்? இந்த நேரத்துல, என்ன பார்த்துகிட்டு இருக்கீங்க..”

“உண்மைய சொல்லட்டுமா?”

“என்ன?”

“உண்மையில உன்ன பார்க்கல”

“அப்ப வேற எத பார்த்தீங்க?”

“நீருல, அதாவது உன்னோட மேற்பரப்புல தெரியுற நிலவோட உருவத்தைத் தான் பார்த்தேன்.”

“பூமிக்கு வெளியில இருக்கிற நிலவக்கூட நான் உங்களுக்கு காட்சிபடுத்துறேனா!”

“ஆமா…”

“ஓஓ…. சார்…”

“என்ன?”

“ஒரு சந்தேகம்”

“சொல்லு”

“பூமியில நீர் இருக்கு. அந்த நிலவுல நீர் இருக்கா?”

சற்று யோசித்தேன். “ஓ… இருக்கே… நிலவுல நீர் இருப்பத விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க” என்றேன்.

“அப்படியா!”

“ஆமாம். நிலவு மட்டுமில்ல, பூமிக்கு வெளியே இருக்கும் மற்ற கோள், நிலவு, வால் நட்சத்திரம் போன்றவற்றிலும் நீர் இருப்பத விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க.

சொல்லப்போனா, பூமியில இருக்கும் நீரின் அளவை விட பல மடங்கு அதிகமாக, சூரியக் குடும்பத்தில் இருக்கும் மற்ற கோள்களில் நீர் இருக்குதாம். தெரியுமா, பூமிக்கு வெளியே இருக்கும் நீருக்கு ‘வேற்றுலக நீர் அப்படின்னு’ பேரு.”

“நல்லது சார், ஆனா, வழக்கமா முக்கிய வார்த்தைகள ஆங்கிலத்துலயும் சொல்லுவீங்களே”

“அதுவா, வேற்றுலக நீர, extraterrestrial water-ன்னு சொல்றாங்க”

“சார், பொதுவா நான் திரவ நீராகவோ, பனிக்கட்டியாகவோ அல்லது நீராவியாகவோ தானே இருக்கிறேன். வேற்றுலக நீரும் இந்த மூனு நிலையிலும் இருக்கும்தானே”

“பொதுவா, கோள்களின் மேற்பரப்பு வளிமண்டல அழுத்தம் மற்றும் சராசரி வெப்பநிலை காரணமாக அவற்றுல பெரிய அளவில திரவ நீர் இருப்பதற்கு சாத்தியம் இல்லைன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. அதனால, அங்கு நீர், நீராவியாகவோ அல்லது உறைபனியாகவோ இருக்கும். அதேசமயத்துல, திரவ நீர் இருப்பு பற்றியும் தகவல்கள் இருக்கு. தொடர்ந்து ஆய்வு நடக்குது.”

“சரி சார். வேற்றுலக நீர எப்படி கண்டுபிடிக்கிறாங்க?”

“இம்ம்… மற்ற கோள்கள்ல இருக்கும் நீராவி மற்றும் பனிக்கட்டிய கண்டறிய நிறமாலைமானி உள்ளிட்ட பகுப்பாய்வு முறைகள் இருக்கு. ஆனா, இந்த முறைகளைப் பயன்படுத்தி, கோள்களில் இருக்கும் நிலத்தடி நீரை கண்டுபிடிப்பது ரொம்பவும் சிரமம்னு சொல்றாங்க.”

“ஒரு சந்தேகம், நீராவி இருந்தா திரவ நீரும் அங்கு இருக்கும்ல?”

“உறுதியா சொல்ல முடியாது. திரவ நீர் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.”

“ஓஓ….”

“அதனால தான், வேற்றுகிரக திரவ நீரின் இருப்பு பற்றி அறிய பிரத்யேக ஆய்வுமுறைகளை வானியளாலர்கள் பயன்படுத்துறாங்க.”

“ஆஆ……”

“இம்ம்… செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நீர் கிட்டத்தட்ட பனிக்கட்டியாக மட்டுமே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதோட வளிமண்டலத்தில் சிறிய அளவு நீர், நீராவியாக இருக்குதாம். வியாழன் கோளின் நிலவான யூரோபாவின் மேற்பரப்பிற்கு அடியில் திரவ நீரின் ஒரு அடுக்கு இருக்குதாம். சனிக் கோளின் நிலவான என்செலடஸில் வெந்நீர்ச்சுனை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு.”

“வால் நட்சத்திரங்கள்ல நீர் எந்த நிலையில இருக்கும்?”

“வால் நட்சத்திரங்கள்ல அதிக அளவில் நீர், திடநிலையில் தான் இருக்குதாம் காரணம், இவை சூரியனிலிருந்து அதிக தூரம் இருப்பதே.”

“சரி சார். வேற்றுலக நீருன்னு ஒன்னு இருக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.”

“நல்லது. எனக்கு தெரிஞ்ச தகவல சொன்னேன். ஆன வேற்றுலக நீர் பற்றிய செய்திகளை நான் அதிகமா படிக்கணும்.”

“பரவால சார். இப்ப இது போதும். நீங்க படிச்சி வைங்க. பிறகு ஒரு சந்தர்ப்பத்துல இதுபத்தி இன்னும், விளக்கமா சொல்லுங்க. இப்ப நான் கிளம்புறேன். நேரமாச்சு.”

“சரி சரி. எனக்கும் நேரமாச்சு” என்றுக் கூறி நான் மாடியிலிருந்து புறப்பட்டேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461

மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

மறை நீர்- ‍நீருடன் ஓர் உரையாடல் – 31

நீர் வாழிடம் – நீருடன் ஓர் உரையாடல் – 29

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

One Reply to “வேற்றுலக நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 30”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.