வேலையில்லாப் பட்டதாரி

விஜய் ஒரு உற்சாகமான மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ்.

சில நேரங்களில் அதீத உற்சாக உணர்வும் தன்னம்பிக்கையும் ஒருவனை வீழ்த்திவிடும் என்பதை அறியாத கிராமத்துக் காளை அவன்.

எழுபதுகளில் நிலவிய கடும் வேலை இல்லா சுனாமியிலிருந்து ஒருவாறு உயிர் பிழைத்து கரையேறி திருநெல்வேலியில் ஒருமருந்து விற்பனைப் பிரதிநிதியாக நானூறு ரூபாய் மாத சம்பளத்தில் வாழ்க்கையை தொடங்கினான் விஜய்.

அப்போதெல்லாம் ஒரு பவுன் தங்கம் விலை நானூறு ரூபாய். எழுபதுகளில் திருநெல்வேலி வாழ்க்கை அந்தக்கால மனிதர்க்கு ஒருஇருட்டுக் கடை அல்வா.

இருபத்திதைந்து பைசா பஸ்சில் ஜங்ஷனிலிருந்து டவுன் செல்லும் வழியில் பூர்ணகலா (உத்தமன் சினிமா), சிவசக்தி (கவிக்குயில்), ரத்னா (மயிலு, சப்பாணி, பரட்டையின் பதினாறு வயதினிலே), பார்வதி (தீபம்) என்று வரிசையாக மலிவு-விலை திரையரங்குகள்; இன்னும் கொஞ்சம் உள்ளே போனால் ‘பேட்டை’யில் வேலையில்லாப் பட்டதாரியாகப் பார்க்கப் பணமில்லாமல் தவித்து தவிர்த்த அன்னக்கிளியை லக்ஷ்மி டாக்கீஸ்ஸில் பழைய பிரிண்ட்டில் பார்த்து விடலாம்.

இந்தியன் பாங்க்கில் ஒருஅக்கவுண்ட் தொடங்கி (அந்த பாங்க் ஃபோன் நம்பர் அந்தக் காலத்தில் வெறும் 88), வந்த ஒரு வாரத்திலேயே விஜய் ‘பங்கஜ பவன்’ ஹோட்டலிலும் ஒரு அக்கவுண்ட் வைத்துக் கொண்டு விட்டான்.

அவன் வேலை பார்க்கும் சிட்டாடல் மருந்துக் கம்பெனி மாத சம்பளத்தை ‘டாண்’ என்று சென்னையிலிருந்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் இரண்டாம் தேதி ரிஜிஸ்டர் தபாலில் டி.டி-யாக அனுப்பி விடும்.

அன்று காலை போஸ்ட் ஆபீஸ் வாசலில் தவறாமல் காத்திருந்தால் பதினொரு மணிக்கு பணக்காரன் ஆகிவிடலாம் தவறாமல்.

அதை அப்படியே சொளையாக கிராமத்திலிருக்கும் அப்பாவிற்கு அனுப்பி விட்டு, கம்பெனி தரும் டெய்லி அலவன்ஸ்ஸில் காலம் தள்ளிக் கொண்டு, தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்த அமீர் ஸ்குயர்ரில் மாதம் முப்பது ரூபாய் வாடகை அறையில் ஜமுக்காளம் விரித்த பெஞ்சில் உறங்கி, அனைவருக்கும் பொதுவான -டாய்லெட்-பாத்ரூம்களை உபயோகித்துக் கொண்டு, வறுமையின் முதலைப் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டிருந்தான் விஜய்.

இளம் கன்று பயமறியாது என்பதைப்போல் அவனுக்கிருந்த அதீத உற்சாகமும், உத்வேக உழைப்பும் ஒருங்கே கூடி, ‘தொழிலுக்கு புதிது’ என்னும் ஸ்பீட் பிரேக்கர்ரில் சாதுரியமாக கடந்து ஒவ்வொரு மாதமும் விற்பனை குறிக்கோளை அடைந்து வெற்றிப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தான் விஜய்.

ஒரு வெற்றிகர மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ்விற்கு ஆங்கிலப் பேச்சுப் புலமை அவசியம் என்பதை உணர்ந்திருந்தான். விஜய்.

ஆதலால் நெல்லை சந்திர விலாஸ் ஹோட்டல் அருகே இருந்த ஒரு லென்டிங் லைப்ரரியில் மெம்பர் ஆகி அங்கே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஆர்தர் ஹேய்லி, ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், இர்விங் வாலஸ், பிரெடெரிக் போர்சித் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தான்.

லென்டிங் லைப்ரரி ராமசாமிக்கு அவ்வப்போது டைரி, கீ செயின், காலண்டர் என்று ஏதேனும் அன்பளிப்பு ஒன்று கொடுத்து ஒன்றுக்கு இரண்டாக நாவல்கள் வாடகைக்கு பெற்றுக் கொள்வான்.

கிளினிக்கில் டாக்டரின் அழைப்புக்காக காத்திருக்கும்போதும் நாள்தோறும் ஒவ்வொரு ஊருக்கும் வேலை விஷயமாக செல்லும் பஸ் பயணங்களிலும் இடையறாது வாசித்து ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொண்டான் விஜய்.

டாக்டர்களிடம் மருந்து விற்பனைப் பற்றி தொழில்முறை உரையாடலை முடித்துக் கொண்டு அவர்கள் ஆங்கில நாவல்கள் படிக்கும் வழக்கத்தைப் பற்றி அறிந்து கொள்வான்.

அவர்களுக்கு ஆவல் இருக்கும் பட்சத்தில் புதிதாக வந்த ஆங்கில நாவல்களைப் பற்றி விஷய ஞானத்துடன் உரையாடி தன்னிடம் இருக்கும் ஒரு எக்ஸ்ட்ரா நாவலை அவர்களிடம் கொடுத்து ஓரிரு மாதங்கள் கழித்து திரும்ப பெறுவதை வழக்கமாக்கிக் கொள்வான்.

இப்படியே ஒரு கட்டத்தில் பல டாக்டர்களுடன் அவனுக்கு ஒரு பிரத்யேக நெட்வொர்க் ஏற்பட்டது.

பெரும்பாலான டாக்டர்களுக்கு நாவல் படிக்க விருப்பம் இருந்தும் லென்டிங் லைப்ரரி சென்று புத்தகம் எடுக்க நேரம் இல்லை என்பதை அறிந்து கொண்டான்.

ஒரு விற்பனைவாதி வித்தியாசமான அணுகுமுறையில் கஸ்டமர்களை அணுகினால் அநாயசமாக ஜெயிக்கலாம் என்பதையும் கண்டு கொண்டான்.

விஜய்யின் புயல்வேக உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் மருந்து விற்பனையில் வெற்றி வெறியையும் கேள்விப்பட்ட மற்ற மருந்துக் கம்பெனிகள் அவ்வப்போது எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து விடு என்று அழைப்பு விடுத்தனர்.

ரம்பை, ஊர்வசி, மேனகை நடனமாடினாலும் அதற்கு மசியாது இருப்பவர் போல முதன் முதல் தன்னை வேலையில்லாக் கடலின் துயரத்திலிருந்து காப்பாற்றிய அதே சிட்டாடல் கம்பெனியில் நன்றியுணர்வுடன் தொடர்ந்தான்.

வழக்கம் போல் மதுரையிலிருந்து விஜய்யின் மேலாளர் சிவக்குமார் நெல்லைக்கு நான்கு நாட்கள் அலுவல் மேற்பார்வையாளராக வந்திருந்தார்.

மேலாளர் சிவக்குமார் இதற்கு முன்பு ‘பூட்ஸ்’ என்னும் ஒருபெரும் மல்டி-நேஷனல் கம்பெனியில் பணி புரிந்தவர். அற்புதமான ஆங்கிலக் குரல் வளம்.

அனைத்தையும் அவதானிக்கும் ஐஸ் கண்கள். சிகரெட் புகைக்கும் போது புகை வளையத்தில் அவர் கண்களில் எதிரிகளை வெற்றிகரமாக வேட்டையாடும் வைர ஜொலிப்பு.

அப்போது பெரும் புகழ் பெற்றிருந்த ‘கால்ஷியம்-சாண்டோஸ்’ என்ற மிட்டாய் மருந்துக்கு எதிராக விஜய்யின் கம்பெனியிலும் ‘கால்சிப்ரஸ்‘ என்றொரு மிட்டாய் மாத்திரை புதிதாக அறிமுகமான தருணம் அது.

அதன் அறிமுக-விற்பனை தொடர்பாக இருவரும் புயல் வேகப் பிரச்சாரம் மேற்கொண்டனர் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்கள் எங்கும்.

மேலாளர் சிவக்குமார் ‘கால்சிப்ரஸ்’ பற்றி டாக்டர்களிடம் விரிவாக எடுத்துரைக்கும் போது அருகிலிருக்கும் விஜய் சாம்பிள் மருந்தாக ஒரு கால்சிப்ரஸ் மிட்டாய் மாத்திரையை கை படாமல் லாவகமாக மருந்து ஸ்ட்ரிப்பிலிருந்து நேர்த்தியாக தருவான்.

அதை டாக்டர் கடித்து மென்று சுவைத்து சாப்பிடும்போது தங்கள் மருந்தை நோயாளிகட்கு பரிந்துரைக்கும்படி கோரிக்கை விடுத்துவிட்டு, நன்றியுடன் டாக்டரிடமிருந்து விடை பெற்றுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் அவ்விருவரும்

வேலைக்குப் புதிது என்றாலும் விஜய் திறம்பட பணி புரிகின்றான் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே சிவக்குமாரை உடனடியாக சென்னை தலைமை அலுவலகத்திற்கு வரச் சொல்லி தந்தி ஒன்று வந்தது.

அவசரம் அவசரமாக செங்கோட்டையில் வேலையை முடித்துக்கொண்டு இரயிலில் சென்னை செல்ல தீர்மானித்தார் சிவக்குமார்.

இறுதிக்கட்டமாக டாக்டர். சரவணனைப் பார்த்தனர்.

மேலாளர் பேசிக்கொண்டிருக்கும் போதே, ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டதே என்ற படபடப்புடன் விஜய் வழக்கம்போல ஒரு கால்சிப்ரஸ் மிட்டாய் மாத்திரையை சுவைக்க டாக்டரிடம் கொடுத்தான்.

அவரும் அதை வாயில் போட்டுக் கொண்டு சுவைத்துக் கொண்டே “நன்றாக இருக்கிறது!” என்று சொல்லிக்கொண்டே நிதானமாக எழுந்து அருகில் உள்ள திரை மறைவுக்கு பின்னாலிருந்த வாஷ்பேசின் சென்று வந்தார்.

இருவரும் டாக்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்னை இரயில் பிடிக்கும் அவசரத்தில் கிளினிக் வெளியே வந்தனர்.

வெளியே வந்தவுடன் கோபம் கலந்த குரலில் சிவக்குமார், “விஜய்! நீ தவறான மாத்திரையை அந்த டாக்டருக்கு கொடுத்து விட்டாய்!” என்று வெடித்தார்.

மெடிக்கல் பேக்கில் உற்று நோக்கிய விஜய்க்கு தூக்கி வாரிப் போட்டது.

அப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது, தன் அதீத தன்னம்பிக்கையாலும், சென்னை இரயில் பிடிக்க வேண்டிய கெடுபிடியாலும், அவசரத்தில் ‘கால்சிப்ரஸ்’ மாத்திரைக்கு பதிலாக மிகவும் கசப்பான ஆன்டிபயாடிக்கான டெட்ராசைக்ளின் பிரஸ்டெட்-சி மாத்திரையை சுவைக்க கொடுத்ததை அறிந்து அதிர்ந்தான்.

இரண்டு மருந்து சாம்பிள்களின் வெளிப்புற அட்டைகளின் நிறமும் ஒரே மாதிரி இருந்ததால் ‘தவறு நடந்து விட்டதே!’ என்று பதறினான் விஜய்.

இதை இப்படியே விட்டுவிடக் கூடாது என்பதை உணர்ந்த விஜய் மேலாளரை அழைத்துக் கொண்டு மீண்டும் கிளினிக் சென்று டாக்டரிடம் இருவரும் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர்.

அப்பொழுது டாக்டர். சரவணன் வெண்ணிலா ஐஸ்கிரீம் சுவையுடன் இருந்த கால்சிப்ரஸ் மாத்திரையை சுவைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

“நான் வாயில் போட்டுக்கொண்டவுடனேயே விஜய் தவறான மாத்திரையை கொடுத்து விட்டார் என்று அறிந்து வாஷ்பேசினில் துப்பி விட்டேன்!”

சிவக்குமாரை நோக்கி “ ஒருக்கால் நான் அதைப் பெரிய பிரச்சனை ஆக்கியிருந்தால் நீங்கள் இந்தப் பையனை வேலையிலிருந்தே நீக்கியிருக்கலாம்! என்னால் ஒரு நல்ல மனுஷன் வேலையை இழக்கக் கூடாது என்பதால் பொறுத்துக் கொண்டேன்” என்றார்

விஜய்யை சுட்டிக் காட்டி “இவருக்கென்று ஒரு குடும்பம் இருக்கும்; நாளை இவருக்கே என்று ஒரு குடும்பம் இருக்கும்

வேலை கிடைக்காத காரணத்தால் பெரும்பாலும் இளைஞர்கள் இந்த வேலைக்கு வேறு வழியின்றி வருகிறார்கள்; வேண்டா வெறுப்பாக ஒரு சிலர் இந்த வேலையை செய்வதைப் பார்த்திருக்கேன்;

ஆனால் திஸ் பாய், இஸ் வெரி குட். மற்ற ரெப்ரசன்டேடிவ்ஸ் மாதிரி இல்லை.

என்னைப்போலவே இவரும் கிராமத்தான். ஒவ்வொரு மாசமும் நான் சந்திக்கும்போதும் இவர் பர்சனாலிட்டியில் கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட்ஸ் காண்கிறேன்.

ரொம்ப சின்சியர் ரெப்ரசன்டேடிவ்;” என்று சொல்லிக் கொண்டே விஜய்யிடம் ஒரு புத்தகத்தை நீட்டி “அவசரத்தில் இதை மறந்து விட்டாய்! இதை நான் வாசித்து விட்டேன்; தாங்க்ஸ்” என்று திருப்பிக் கொடுத்தார்.

அது ஆர்தர் ஹேய்லி எழுதிய “ தி ஸ்ட்ராங் மெடிசின்”.

வேலையில்லாப் பட்டதாரியாக கிராமத்தில் ஸ்கூல் ஹெட் மாஸ்டர் தரும் ‘ஹிந்து’ பேப்பரை படித்துக் கொண்டே வீட்டுப் பட்டியிலிருந்த எருமை மாடுகளை வயல்களில் மேய்த்துக் கொண்டிருந்த பழைய வாழ்க்கை விஜய் மனதில் ஒரு கணம் நிழலாடி மறைந்தது. .

“இட்ஸ் ஓகே!“ என்று சிவக்குமார் அவனைத் தட்டிக் கொடுத்து விட்டு இரயில் நிலையம் விரைந்தார்.

ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 98842 51887

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.