ராமசாமி தினமும் காலையில் திரு.வி.க. பூங்காவில் வாக்கிங் செல்வது வழக்கம். தினமும் காலை ஒன்பது மணிக்கு அந்த பூங்காவில் ஒரு இளைஞன் வந்து ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தான்.
அவன் ஒரு மருந்து விற்பனை பிரதிநிதி என்பதை அவன் வைத்திருந்த ‘பேக் பேக்’கில் இருந்த கம்பெனியின் பெயரை வைத்து புரிந்து கொண்டார் ராமசாமி.
அவர் நடைபயிற்சி முடிந்து பத்து மணி அளவில் வீடு திரும்பும்போது அந்த மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ் இன்னும் அதே பெஞ்ச்சில் ஆலோசனையிலிருந்தான்.
‘இவன் ஏன் இன்னும் வேலைக்கு செல்லாமல் இங்கேயே இருக்கிறான்?’ என்ற சந்தேகக் கேள்வியோடு வீடு திரும்பினார் ராமசாமி.
ராமசாமி வயது நாற்பது. ஒரு தனியார் கம்பெனியில் அக்கவுண்டன்ட் ஜோலி. இப்போது மூன்று நாட்களாக விடுமுறையில் உள்ளார். அவர் மனைவி லலிதா அருகிலுள்ள பள்ளியில் டீச்சர். அவர்கட்கு இரண்டு குழந்தைகள். இருவரும் அதே பள்ளியில் மாணவர்கள்.
ஓரிருமுறை பால் வாங்குவதற்கோ, பூ வாங்குவதற்கோ திரு.வி.க. பூங்கா வழியே ராமசாமி சென்றபோது அந்த மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ் நாள் முழுக்க அதே பெஞ்ச்சில் உட்காரந்திருப்பதை அவதானித்தார்.
மூன்று நாளாக இதே ரொடீன் தான் அந்த மனிதனுக்கு.
‘அவன் ஏன் வேலைக்கு இன்னும் போகவில்லை?’ என்று ராமசாமிக்கு குடைச்சல்.
நான்காம் நாள் காலை நடைப்பயிற்சி முடிந்து பொறுமை இழந்து அந்த மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ் அமர்ந்திருந்த பெஞ்ச்சில் அவரும் அமர்ந்து வாக்கிங் வேர்வையை துடைத்துக் கொண்டே அவனிடம் பேச்சு கொடுத்தார்.
அவன் பெயர் சங்கர். ஒரு பெரிய மருந்து கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மேலாளருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டான்.
அவன் மனைவி ஆறு மாத தலைப்பிரசவ கர்ப்பிணி. ‘அவன் வேலை இழந்ததை நினைத்து அவள் மிகவும் கவலைப்படுவாளே!’ என்று வருத்தப்பட்ட சங்கர் ஆபீஸிற்கு செல்வதுபோல் வீட்டிலிருந்து கிளம்பி இங்கே பூங்காவில் இருந்து பொழுதைப் போக்கிவிட்டு மாலை வீடு திரும்புவதை கடைபிடித்து வந்தான்.
ராமசாமிக்கு ஏனோ அவன் மீது அனுதாபம் ஏற்பட்டது.
“சில நேரங்களில் நல்ல கம்பெனியாக இருந்தாலும் நமக்கு வரும் மேனேஜர்கள் சரியில்லை என்றால் பிரச்சனைதான்” என்று அவனிடம் பேச்சை ஆரம்பித்தார். அவன் மௌனமாக அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.
“வேறு ஏதாவது வேலை தேடுகிறாயா? உன் பர்சனாலிட்டிக்கும் அனுபவத்திற்கும் ஈசியா வேறு கம்பெனியில் வேலை கிடைக்குமே?” என்று கேட்டு அவனை உற்சாகப்படுத்தினார்.
சங்கர், “ஆமாம் சார்! மூணு கம்பெனியில் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணியுள்ளேன். நிச்சயம் கிடைக்கும். வேலை கிடைத்த பிறகு வீட்டிலே சொல்லலாம் என்று உத்தேசம்” என்று பதில் அளித்தான்.
ராமசாமி, “இப்படியே இழுத்துக் கொண்டு போனால் மாசம் பொறந்தால் பெண்டாட்டி சம்பளப் பணம் கேட்டபாளே?” என்று கவலையுடன் கேட்டார்.
“யு ஆர் ரைட் சார்! என் வொய்ஃப்க்கு இப்ப ஆறுமாசம். பீரியாடிக் மெடிக்கல் செக் அப், மருந்து, மாத்திரை, நல்ல சாப்பாடு எல்லாம் கொடுக்கணும்” என்று கவலையை ராமசாமியிடம் பகிர்ந்து கொண்டான் சங்கர்.
“உனக்குத்தான் எப்படியும் சீக்கிரம் வேலை கிடைச்சிரும்னு நம்பிக்கை இருக்கே! அப்பறம் என்ன? வொய்ஃப் கிட்ட மெல்ல விஷயத்தை சொன்னா முதல்ல கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் அவளுக்கு இருக்கும். கொஞ்ச நேரம் போய் அவள் சமாதானம் பண்ணிக் கொண்டு உனக்கு சப்போர்ட்டா இருப்பா. நீயும் வீட்டிலேயே இருந்துண்டு அவளுக்கு அனுசரணையா கூடமாட உதவி செஞ்சுண்டு உற்சாகமாக தைரியமாக இன்னும் நல்ல வேலை தேடலாமே?” என்றார் ‘அட்வைஸ்’ ராமசாமி.
சங்கருக்கும் அவர் சொல்வது சரிதான் என்று தோன்றியது. ‘எதுக்கு காலையிலிருந்து சாயந்திரம் வரை இந்த பூங்காவில் புழுக்கத்தில் இருந்து கொண்டு மனைவியை ஏமாற்றிக் கொண்டு?’ என்று நினைத்தான் சங்கர்.
‘எப்படியும் ஒரு நாள் சொல்லித்தான் தீர வேண்டும்; அதை உள்ளது உள்ளபடி இப்போதே சொல்லிவிட்டால் நம் பாரமும் குறையும்’ என்ற சிந்தனை ஓடியது சங்கரின் மனதில்.
அவன் என்ன நினைக்கிறான் என்பதை புரிந்து கொண்ட ராமசாமி
“வருவது வரட்டும்னு வொய்ஃப் கிட்ட உண்மையை சொல்லிடு!, அவளும் உன்னை புரிஞ்சிண்டு அரவணைத்துக் கொள்வாள் இந்த இக்கட்டான தருணத்திலே” என்று அனுபவ முதிர்ச்சியோடு ஆலோசனை வழங்கினார் ராமசாமி.
சங்கரும் உற்சாகமாகி நிம்மதி பெருமூச்சு விட்டு “சரி சார்! நான் யாருன்னு தெரியாமலேயே எனக்கு தக்க சமயத்தில் அட்வைஸ் கொடுத்தீங்க, ரொம்ப தாங்க்ஸ் சார்!, நான் இப்பவே வீட்டுக்கு போய் என் வொய்ஃப் கிட்ட எல்லாம் சொல்லிடறேன் சார், குட்பை சார்” என்று பைக்கில் புறப்பட்டான் சங்கர்.
வேலையிழந்த ஒரு மனிதனுக்கு நல்ல புத்திமதி சொன்ன திருப்தியில் சற்று நேரம் நிமிர்வுடன் அமர்ந்திருந்தார் ராமசாமி.
தீவிர ஆலோசனைக்கு பின், அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
‘இன்றாவது எப்படியாவது லலிதாவிடம் உண்மையை சொல்லிவிட வேண்டும்; நான் வேலையை ராஜினாமா செய்து மூணு நாளாச்சுன்னு!’
ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 9884251887