வேழனைப் பற்றுக வெற்றியே கண்டிட! – தா.வ.சாரதி

அழகிய பிள்ளையார்

கற்பகக் களிறை பணிவுடன் நினைய
பற்பலப் பேறுகள் அவரவர் அடைவீர்

பொற்பதம் பிடித்தே முழுமனதுடன் வணங்க
நற்பொருள் சேருமே நலமுடன் சிறப்பீர்

அற்புதம் ஆனவன் வேழனைத் தொழவே
நற்றமிழ் அகவினால் அகமகிழ்ந்து உணர்வீர்

முற்றுமே அறிந்தவன் முத்தமிழ் முதல்வன்
பற்றுமே! சட்டென கடுவினை அகலுமே!

வேழனைப் பற்றுக வெற்றியே கண்டிட
வேலனின் அண்ணனை வேண்டிக் கொள்கவே

நித்தமே போற்றினால் நன்னிலை ஆக்குவான்
சத்தியம் தோன்றுவான் இன்னலைப் போக்குவான்

ஆரணம் வாழ்த்திடும் வாரணப் பேற்றையே
ஆயிரம் பேரினால் ஓதிட நன்மையே

கணபதி வழிபடு கவலைகள் மறந்திடும்
கனிவுடன் உருகிடு அவலங்கள் மறைந்திடும்

பொரியவல் படைத்திடு கரிமுகன் சுவைத்திட
பொருள்பல அருளிட கஜமுகன் தொழுகவே

அம்பிகை புதல்வனை பசுபதி குமரனை
நம்பினால் கிடைத்திடும் விருப்பமே நிறைபெறும்

ஐம்புலன் அடக்கியே ஒருமுகம் நினைகவே
ஐங்கரனை வணங்கிட வினைகள் விலகுமே!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.