வைகாசி விசாகம்

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் ஆண்டுதோறும் இந்துக்களால் வைகாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது வைகாசி விசாகப் பெருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாளே முருகப் பெருமானின் அவதார நாளாகக் கருதப்படுகிறது.

புத்த மதத்தில் இந்நாள் புத்தரின் அவதார நாளாகவும், புத்தர் ஞானம் பெற்ற நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே ஆகும்.

விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது.

இந்த நாளின் போது இந்துக்கள் விரதம் இருந்தும், பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் முருகப் பெருமானை வழிபடுகின்றனர். முருகன் மட்டுமில்லாது சிவன், அம்மன் வழிபாட்டையும் மக்கள் மேற்கொள்கின்றனர்.

வைகாசி மாதம் என்பது வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் பிற்பகுதி ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோவில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.

 

விழா கொண்டாடுவதற்கான காரணம்

முன்னொரு சமயம் உமையம்மை சிவபக்தனான தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் நாமத்துடன் அவதரித்தாள். சிவனை மருமகனாகப் பெற்ற கர்வத்தினால் தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். யாகத்திற்கு சிவனைத் தவிர்த்து ஏனையோரை அழைத்திருந்தான். இதனால் சினமுற்ற உமையம்மை தாட்சாயணியாக இருக்க விருப்பமில்லை என சிவனிடம் தெரிவித்தாள்.

அப்போது இறைவன் பர்வத ராஜனின் வேண்டுகோளுக் கிணங்க பார்வதி என்ற திருநாமத்தோடு பர்வத ராஜனின் மகளாக அவதரிக்குமாறு அருளினார்.

இச்சமயத்தில் சூரபத்மன் என்ற அசுரன் சிவனிடமிருந்து, சிவனுக்கு இணையான சிவ அம்சக் குழந்தையால் தான் தனக்கு அழிவு வேண்டும் என்ற வரத்தினை பெற்றான். சிவனை அழைக்காத யாகத்திற்குச் சென்றதால் தேவர்கள் அனைவரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசூரன் ஆகிய அசுர சகோதரர்களின் துன்பத்திற்கு ஆளாயினர்.

அவர்கள் தங்கள் துயரம் தீர சிவபாலனின் அவதாரம் தான் தீர்வு என்று எண்ணி சிவனைப் பார்க்கச் சென்றனர். அப்போது சிவன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். பார்வதியும் சிவனை நினைத்து தவம் புரிந்து கொண்டிருந்தாள். தேவர்கள் சிவனின் தியானத்தைக் கலைக்கும்படி மன்மதனை வேண்டினர்.

மன்மதன் சிவனின் தவத்தை கலைக்க முற்படுகையில் சிவன் தனது நெற்றி கண்ணைத் திறந்து மன்மதனை சாம்பலாக்கினார். சிவபார்வதி திருமணத்திற்குப் பின் சிவக்குமாரன் தோன்றுவான் என்று அருளினார். பார்வதி பரமேஸ்வர் திருமணம் பங்குனி உத்திரம் நாளில் நடந்தேறியது.

நாட்கள் ஆகியும் சிவக்குமாரன் தோன்றாததால் தேவர்கள் கவலையுற்று இறைவனை வேண்ட சிவன் தனது ஐந்து முகத்தோடு ஆறாவது முகமான அதோ முகத்தைச் சேர்த்து மொத்தம் ஆறு முகத்திலிருந்தும் நெருப்பு பொறிகளை உருவாக்கினார்.

அவற்றை அக்னி மற்றும் வாயு பகவான்களின் மூலம் கங்கையின் சரவணப் பொய்கையில் சேர்ப்பிக்கச் செய்தார். நெருப்புப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின.

கார்த்திகைப் பெண்கள் அவ்வாறு குழந்தைகளையும் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். ஒரு நாள் தனது குழந்தையைக் காண பார்வதி தேவி சென்ற போது ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்தாள். ஆறு முகங்கள் மற்றும் ஒரு உடலுடன் குழந்தை காட்சியளித்தது. அப்போது பார்வதி தேவி குழந்தைக்கு ஞானப் பால் புகட்டினார்.

குழந்தையின் வாயிலிருந்து சிந்திய பாலை உண்ட சரவணப் பொய்கை மீன்கள் முனிகுமார்களாக உருப் பெற்றனர். ஆறு முகங்களை பெற்றிருந்ததால் முருகன் ஆறுமுகன் என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும். எனவே இந்நாள் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

 

விழா கொண்டாடப்படும் முறை

இவ்விழா எல்லா முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பக்தர்கள் பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பாதயாத்திரைச் செல்லல் போன்ற வேண்டுதல்களை இந்நாளில் மேற்கொள்கின்றனர். சில இடங்களில் தேர்த் திருவிழா நடைபெறுகின்றது. ஒரு சில கோவில்களில் பத்து நாட்கள் கொண்டாட்டம் நடைபெறுகின்றது.

இளவேனிற் காலத்தில் இவ்விழா நடைபெறுவதால் திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும்படி செய்து இறைவனுக்குச் சிறுபருப்புப் பாயாசம், நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து உஷ்ணசாந்தி உற்சவம் (வெப்பம் தணிக்கும் விழா) என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இங்கு வசந்த மண்டபத்தில் உள்ள நீர்த் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை நீரில் இடப்பட்டு, குமரன் வாயில் இருந்து சிந்திய பாலினை உண்டதால் சாபம் நீங்கப் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவங்களையும் வைத்து சாப விமோன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

 

விரத வழிபாட்டு முறை

மக்கள் இந்நாளில் விரதம் மேற்கொள்கின்றனர். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து குளிர்ந்த நீரில் நீராடி வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று வழிபாடு மேற்கொண்டு விரதத்தைத் தொடங்குகின்றனர்.

பின் பகல் முழுவதும் உணவருந்தாமலோ அல்லது பால், பழத்தினை உண்டோ சஷ்டிக் கவசம், சண்முக கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களைப் பாடியும், ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை உச்சரித்தும் வருகின்றனர்.

மீண்டும் மாலையில் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுகின்றனர். வழிபாட்டின் போது சர்க்கரைப் பொங்கல், நீர்மோர், பானகம், தயிர் அன்னம், அப்பம் ஆகியவற்றைப் படைக்கின்றனர். செவ்வரளி, நாகலிங்கப்பூ, செந்தாமரை, மல்லிகை முதலிய மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்றனர்.

இந்நாளில் குடை, செருப்பு, நீர்மோர், பானகம், தயிர் அன்னம் ஆகியவை தானமாக வழங்கப்படுகின்றன. மலைக் கோவில்களில் மலையைச் சுற்றிலும் கிரிவலம் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்விரத்தினை மேற்கொள்ளவதால் குழந்தைப்பேறு கிட்டும். நல்ல மணவாழ்க்கை அமையும். நோயில்லா நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

 

வைகாசி விசாகத்தின் சிறப்பு

வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதால் நோய் நீங்கி நீடித்த ஆயுள் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.

மகாபாரதத்தின் வில் வீரான அர்ஜீனன் பாசுபதா ஆயுத்தை சிவபெருமானிடமிருந்து பெற்ற நாள் வைகாசி விசாகமாகும். திருமழப்பாடி என்னும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்ததும் இந்நாளே. பன்னிருஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே ஆகும்.

சோழ சக்கரவர்த்தியான ராஜராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ஆணையை இராஜேந்திரச் சோழன் பிறப்பித்து இருந்ததாக தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.

வடலூரில் இராமலிங்க அடிகளார் சத்யஞான சபையை நிறுவியதும் இந்நாள் தான். பெரும்பான்மையான கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பிறப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

வான்மீகி இராமாயணத்தில், விஸ்வாமித்திரர் இராம-லட்சுமணர்களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவார். மேலும் இதனை கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்லுவார். இந்நிகழ்வை குமாரசம்பவம் என்று வான்மீகி குறிப்பிடுவார்.

இதனை பின்பற்றியே வடமொழிக் கவிஞரான காளிதாசர் முருகனின் பிறப்பு மற்றும் அவரின் பெருமைகள் பற்றி கூறி அந்நூலிற்கு குமார சம்பவம் என்றும் பெயரிட்டுள்ளார்.

சித்தார்த்தர் என்னும் கௌதம புத்தர் பிறந்த நாளும், அவர் ஞானத்தை அடைந்த நாளும் வைகாசி பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. இதனையே புத்த பூர்ணிமா என்று அழைக்கின்றனர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகத்தில் நாமும் விரத முறையைப் பின்பற்றி வாழ்வின் உயர்ந்த நிலையை அடைவோம்.