வைகுண்ட ஏகாதசி திருவிழா

வைகுண்ட ஏகாதசி விழாவானது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அமாவாசை முடிந்த பதினொன்றாம் நாள் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது.

ஏகாதசி என்பதை ஏகம் + தசி எனப் பிரிக்கலாம். ஏகம் என்றால் ஒன்று தசம் என்றால் பத்து. பத்து + ஒன்று பதினொன்று என்றும், ஏகாதசி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு பதினொன்று என்றும் பொருள் கூறப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியில் மகாவிஷ்ணு வழிபாடு மிக விமர்சையாக நடைபெறுகின்றது. வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வழிபடுவது ஏனைய விரத வழிபாட்டு முறைகளை விட சிறந்ததாகக் கருதப்படுகிறது.

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்ற பழமொழியின் மூலம் இதனை உணரலாம். இவ்விழா எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் நடைபெறுகின்றது. சொர்க்க வாசல் திறப்பு வைபவம் இவ்விழாவின் முக்கிய‌ நிகழ்வாகும்.

 

வைகுண்ட ஏகாதசி பற்றிய கதை

முன்னொரு காலத்தில் முரன் என்ற அரக்கன் முனிவர்களையும், மக்களையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவனின் கொடுமைகளை மகாவிஷ்ணுவிடம் எடுத்துக்கூறி அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி எல்லோரும் வேண்டினர்.

மகாவிஷ்ணுவும் முரனுடன் போரிட்டு அவனுடைய படைகளை அழித்தார். பின் பத்ரிகாசிரம் என்னும் இடத்தில் உள்ள குகையில் ஆழ்ந்த தியானத்தில் சயனித்திருந்தார். இதனை அறிந்து கொண்ட முரன் குகையினுள் சென்று சயனித்திருத்த மகாவிஷ்ணுவை வதைக்க எண்ணினான்.

அப்பொழுது மகாவிஷ்ணுவினுள் இருந்த சக்தியானது பெண் உருவம் கொண்டு முரனை எரித்து சாம்பலாக்கியது. மகாவிஷ்ணு அச்சக்திக்கு ஏகாதசி என்று பெயரிட்டு, அரக்கனை வதைத்த நாளில் விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வழிபடுவோருக்கு மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்தை அடையும் பேற்றை வழங்குவதாக அருளினார்.

அரக்கன் வதமானது மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியில் நடைபெற்றது எனவும் அதனால் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி விரதம் மேற்கொண்டால் சொர்க்கபுரியான வைகுண்டத்தை அடையலாம் என்று கூறப்படுகிறது.

 

வைகுண்ட ஏகாதசி விரதம்

விரதம் மேற்கொள்வோர் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதத்தைத் தொடங்குகின்றனர்.

ஏகாதசி அன்று உணவினை உண்ணாமலும் அல்லது பழங்கள் மற்றும் பாலினை மட்டும் உட்கொள்கின்றனர். ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியில் காலை உணவு உண்டு விரதத்தினை முடிக்கின்றனர்.

ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டில் மகாவிஷ்ணுவின் படம் (அல்லது) சிலைக்கு வழிபாடு நடத்துகின்றனர். வழிபாட்டில் மஞ்சள், குங்குமம், வாழை மற்றும் பிற பழ வகைகள், துளசி ஆகியவை இடம் பெறுகின்றன.

வழிபாட்டின் போது மகாவிஷ்ணுவைப் பற்றிய பாடல்கள் இடம் பெறுகின்றன. பின் சிறிது நேரம் தியானம் செய்கின்றனர். பின் அருகில் உள்ள விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.

சிலர் மௌனவிரதம் மேற்கொள்கின்றனர். பகல் முழுவதும் உணவருந்துவதில்லை. ஒரு சிலர் பால் மற்றும் பழங்கள், துளசித் தண்ணீர் அருந்துகின்றனர்.

ஏகாதசி அன்று இரவு விஷ்ணு ஆலயத்திற்கு சென்று இரவு முழுவதும் விழித்து மகாவிஷ்ணுவின் எட்டு எழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணா என்பதையும், விஷ்ணு சகச‌ர நாமம், நாராயண கவசம், விஷ்ணு புராணம் ஆகிய மகாவிஷ்ணு பற்றிய பாடல்களைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர். இறுதியில் சொர்க்க வாசல் திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

மறுநாள் துவாதசி காலையில் குளித்துவிட்டு மீண்டும் கோவில் சென்று வணங்கிவிட்டு காலை உணவினை உண்டு விரதத்தை முடிக்கின்றனர். விரதம் மேற்கொள்வோர் அரிசி, தானிய வகை உணவுகளை உட்கொள்வதில்லை.

வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொண்டால் மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதம் மேற்கொண்டதற்கு சமம் என்பதால் வைகுண்ட ஏகாதசியை முக்கோடி ஏகாதசி என்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவானது தமிழ்நாட்டில் பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது.

வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலின் வடக்கு புறத்தில் உள்ள வாயில் திறக்கப்பட்டு மக்கள் அவ்வாயிலினை கடந்து செல்கின்றனர். இதுவே சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாகும்.

விரதம் இருந்து இவ்வாயிலினை கடந்து சென்றால் மீண்டும் பிறவாமை நிலை ஏற்பட்டு வைகுண்டத்தை அடையலாம் என்று நம்பப்படுகிறது.

நாமும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொண்டு நம்மிடம் உள்ள கர்வம், சிற்றின்பம், செயலற்ற தன்மை, கட்டுக்கடங்காத உணர்ச்சி ஆகியவற்றை துறந்து மனத்தினால் இறைவனிடம் நம்மை ஒப்படைப்பு செய்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

Comments are closed.