வைகுந்தம் எவ்வளவு தூரம்?- சிறுகதை

வைகுந்தம் எவ்வளவு தூரம்? என்ற கதை இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்பதை விளக்கும்.

பெருமாள்புரி என்ற நாட்டின் அரசர் கண்ணபெருமான் திருமால் அடியவர்.

திருமாலிடம் மாறாத பக்தி கொண்ட அவர், ஒருநாள் தன்னுடைய அரண்மனையில் பெருமாளின் அற்புதக் கதைகளை பாகவதர் ஒருவர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பாகவதர் கஜேந்திர மோட்சம் பற்றி, உணர்ச்சி பொங்க மிக அழகாக சொல்லிக் கொண்டிருந்தார்.

நாராயணனுக்காக தாமரை மலர்களைப் பறிப்பதற்கு கஜேந்திரன் யானை குளத்தில் இறங்கியது. அப்போது குளத்தில் இருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்வியது.

வலியால் துடித்த கஜேந்திரன் ‘ஆதிமூலமே, நாராயணா, அபயம்’ என்று கதறியது.

தன்னுடைய பக்தனின் துயர் போக்க, வைகுண்டத்தில் இருந்து உடனடியாக திருமால் அங்கே வந்து, தன்னுடைய சக்ராயுதத்தால் முதலையின் வாயினை உடைத்து, யானைக்கு மோட்சத்தை அருளினார் என்று கூறினார்.

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த அரசர் கண்ணபெருமான் பாகவதரிடம், “பண்டிதரே வைகுந்தம் எவ்வளவு தூரம்? என்று உங்களால் சொல்ல முடியுமா” என்று கேட்டார்.

அரசனின் கேள்வியால் பாகவதர் திணறினார்.

இதனைக் கவனித்த அரசன் கண்ணபெருமான் அவையில் இருந்தவர்களிடம் அதே கேள்வியைக் கேட்டார்.

அங்கிருந்தோர் யாராலும் அக்கேள்விக்குப் பதில் அளிக்க இயலவில்லை.

தன்னுடைய அமைச்சரிடம் அரசர் கண்ணபெருமான், தன்னுடைய கேள்விக்கு பதில் அளிப்பவர்களுக்கு பரிசளிப்பதாகத் தெரிவித்தார்.

அரசனின் கேள்வி பற்றிய செய்தியானது நாடெங்கும் தெரிவிக்கப்பட்டது.

செய்தியைக் கேள்விப்பட்ட அரசவைப் புலவரின் ஆறு வயது பேத்தி நாராயணி, அரசனின் கேள்விக்கு பதில் தன்னால் கூறமுடியும் என்று புலவரிடம் தெரிவித்து, அரசனைப் பார்க்க ஆவலாக இருப்பதாகக் கூறினாள்.

அரசவைப் புலவரும் குழப்பத்துடனே குழந்தையை அரசரிடம் அழைத்துச் சென்றார்.

அரசரிடம் நாராயணி “அரசே, தங்களின் கேள்வியைக் கேளுங்கள்?” என்றாள்.

குழந்தைக் கண்டு ஆச்சர்யப்பட்ட அரசர், “கஜேந்திர மோட்சத்தில் கஜேந்திரன் யானை ஆதிமூலமே என்று அழைத்ததும், வைகுந்தத்திலிருந்து நாராயணன் வந்துவிட்டார். அப்படியானால் வைகுந்தம் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார்.

கேள்வியைக் கேட்டதும் அச்சிறுமி “அரசே, துன்பப்படும் யானையின் கூக்குரல் எத்தனை தூரம் எட்டியதோ, அத்தனை தூரத்தில்தான் உள்ளது வைகுண்டம்” என்றாள்.

அதனைக் கேட்டதும் அரசர் கண்ணபெருமான் சிறுமிக்கு ஏராளமான பரிசுகளை வழங்கினார்.

அன்போடும் நம்பிக்கையோடும் அழைப்பவர்களுக்கு, அவர்கள் கூப்பிடும் தூரத்தில்தான் இறைவன் இருக்கின்றான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.