கடந்த மூன்று தினங்களாக தொடர் பணிகளில் மூழ்கியிருந்தார் வேதிவாசன். இதனால், தனக்கு வந்த மின்னஞ்சல்களை அவரால் பார்க்க இயலவில்லை.
அன்று இரவு நேரம் கிடைக்கவே, தனது மின்னஞ்சல் முகவரியைத் திறந்தார். சரியாக நாற்பத்தி ஏழு மின்னஞ்சல்கள் இன்பாக்சில் வந்திருந்தன.
மூன்றுநாட்களில் இத்தனை மெயிலா? (மின்னஞ்சல்) என்று எண்ணியவாரே, ஒவ்வொரு மின்னஞ்சலாக பார்த்து கொண்டு வந்தார்.
அவற்றுள் சில சர்வதேச ஆய்விதழ்களில் அண்மையில் வெளி வந்திருந்த ஆராய்ச்சி கட்டுரைகள் பற்றின செய்திகளாக இருந்தன.
சிலவினாடிகளில் ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்புகளை மட்டும் வாசித்தார். ஒரு சிலகட்டுரைகள், அவரின் சிந்தனையைத் தூண்டின. ஆயினும் மேலும் அது பற்றி சிந்தியாமல், அடுத்த மின்னஞ்சலுக்குத் தாவினார்.
சில மின்னஞ்சல்கள் நண்பர்களிடமிருந்து வந்திருந்தன. அவை பெரும்பாலும் அவர்களது ஆராய்ச்சி முடிவுகள் குறித்தவையாக இருந்தன.
அவற்றை பகுத்து பதில் அனுப்ப நேரம் பிடிக்கும் என்பதால் அப்பொழுது பதில் அனுப்பவில்லை. எனினும் அத்தகவல்களை பதிவிறக்கம் செய்து கொண்டார்.
தொடர்ந்து மின்னஞ்சல்களைப் பார்த்தபடி இருக்க, யாரோ ஒருவரிடம் இருந்து வந்திருந்த அந்த மின்னஞ்சலைப் பார்க்கலானார் வேதிவாசன். அதில் இருந்த செய்தியை படிக்கும்போதுதான் புரிந்தது, அது ஒருவாசகரிடம் இருந்து வந்தது என்பது.
வாசகர் கடிதம்
அன்பிற்குறிய வேதிவாசனுக்கு,
வணக்கம்.
இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தங்களது அறிவியல் ஆக்கங்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.
தகவல்களுக்கு நன்றிகள். மேலும் வளம் பெற வாழ்த்துகிறேன்.
எனக்கு ஒரு ஐயம் இருக்கிறது. அது என்னவெனில், பொதுவாக வைரஸ்கள் தீமைகள் மட்டுமே செய்யக் கூடியன என்று படித்திருக்கிறேன். இது உண்மைதானா?.
ஏனெனில் சமீபத்தில் வைரஸ்களை ‘உயிரி நானோதுகள்‘ என்றும் அழைக்கலாம் என்பதை அறிந்துக் கொண்டேன்.
அதாவது, செயற்கை நானோதுகள்கள் அன்றாட வாழ்வில் பெருமளவில் பயன்படும் சூழலில், உயிரி நானோ துகளான வைரஸ்கள் மட்டும் ஏன் எந்தப் பயனும் தருவதில்லை?
தக்க பதிலை எதிர்பாக்கிறேன்
நன்றி,
இப்படிக்கு,
அறிவியல் ஆர்வலன்
மேற்கண்ட கடிதத்தை படித்ததும், உடனே பதில் எழுதி அனுப்பி விடவேண்டும் என்ற எண்ணம் வேதிவாசனின் மனதிற்குள் எழுந்தது. காரணம் சமீபத்தில்தான் இது சார்ந்த ஒரு ஆய்வுக்கட்டுரையை அவர் வாசித்திருந்தார்.
அதற்குள் அவரது அம்மா இரவு உணவு உண்பதற்காக அழைக்கவே, அங்கிருந்து நகர்ந்தார்.
கைகளை கழுவிய பின்னர், உண்பதற்காக தரையில் அமர, அவருக்கு உணவினை பரிமாறினார் அம்மா. உணவை உண்ண தொடங்கினார்.
அப்பொழுது, ‘உப்பு இருக்கா?’ என அம்மா கேட்க, வேதிவாசனோ பதில் ஏதும் அளிக்கவில்லை. காரணம் அவர் சிந்தை முழுவதும் பதிலுரை தயாரிப்பதில் இருந்தது. இதனால் அம்மா கேட்ட கேள்வியை அவர் உள்வாங்கவில்லை.
ஆனால், மீண்டும் ‘வேதி, குழம்புல உப்பு இருக்கா?’ என உரக்க அம்மா கேட்கவே, ‘என்னம்மா?’ என பதில் கேள்வியை கேட்டார் வேதிவாசன்.
‘உப்பு இருக்கான்னு கேட்டேன்?’ என்றார் அம்மா. மீண்டும் ஒரு வாய் உண்ட பின், ‘கொஞ்சம் உப்பு கம்மியாதா இருக்கு’, என பதில் சொன்னார்.
அதற்கிணங்க, சிறிதளவு உப்பை குழம்பில் கரைத்து, அவரது தட்டிலிருந்த சாதத்தில் ஊற்ற, வேகமாக உணவை உட்கொண்டார்.
தனது படிப்பக அறைக்குள் நுழைந்தவர், பதில் கடிதத்தை இப்படியாக எழுதினார்.
பதில் கடிதம்
அன்புள்ள அறிவியல் ஆர்வலன் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்களது மின்னஞ்சல் கடிதத்திற்கு நன்றி.
நல்ல கேள்வியினை தொடுத்துள்ளீர்; வாழ்த்துகள்!
நீங்கள் அறிந்தது போல், வைரஸ்கள் உயிரி நானோதுகள் என்றுதான் அழைக்கப்படுகின்றன. அதற்கு காரணம், அதன் சராசரி விட்டம் சுமார் ஐநூறு நானோ மீட்டருக்குள் இருப்பதே.
பொதுவாக, வைரஸ்கள் தீங்கிழைப்பவையே. இருப்பினும், நானோ தொழிற்நுட்பத்தில் வைரஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதாவது, ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட நானோதுகளுக்கு மாற்றாக வைரஸ்களை பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மாமேலியன் (mammalian) வைரஸ், தாவர வைரஸ் மற்றும் பாக்டீரியோஃபேஜ் (bacteriophages) வைரஸ்கள் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான, ஒரு ஆய்வும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வினை நிகழ்த்தியவர்கள் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை (University of California) சேர்ந்த பேராசிரியர் நைக்கோல் ஸ்டெய்ன்மெட்ஸ் (Nicole F. Steinmetz) தலைமையிலான ஆய்வுக் குழுவினர்தான்.
ஆய்வின் முக்கிய சாராம்சத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
பூச்சிக்கொல்லிகளை தாவரங்களின் வேர் வரைக்கும் கொண்டு சேர்ப்பதில், நானோதுகள்களை காட்டிலும் தாவர வைரஸ்கள் சிறப்பாக செயல்படுகின்றனவாம்.
அதாவது, விளைநிலத்தில் பயிரிடப்பட்ட தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து காக்க, வேதிபூச்சி கொல்லி பயன்படுத்தப்படுகிறது.
இது வீரியத்துடன் செயல்பட வேண்டுமானால், தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்து தாவரத்தின் வேரி மண்டலம்(வேர் மற்றும் அதன் வேர் நீரின் தாக்கத்திற்குரிய சுற்றியுள்ள மண் பகுதி (Rhizosphere) வரை செல்லுதல் வேண்டும்.
ஆனால், மருந்துகள் மேல் மண்ணிலேயே ஒட்டிக் கொள்வதால், அதிக அளவு பூச்சி கொல்லிகள் மண்ணில் சேர்க்கப்படும் நிலை இருக்கிறது. இதனால், மண்ணும் நீரும் மேலும் மாசுபடுகிறது.
இதனைக் குறைக்க, பூச்சிகொல்லிகள் வேரை எளிதாக சென்றடைய வேண்டும். இதற்கு, சிலிக்கா நானோ துகள்கள் மற்றும் லாக்டேட் பலபடி மூலக்கூறுகள், (பூச்சிகொல்லிகளை வேரிமண்டலத்திற்கு எடுத்துச் செல்லும்) கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.
தாவர வைரஸ்களான பச்சை புகையிலை (tobacco mildgreen), தட்டைப் பயறு (cowpea) மொசைக் வைரஸ்கள் பூச்சிகொல்லிகளை வேரிமண்டலத்திற்கு வீரியத்துடன் எடுத்துச்செல்லும் சிறந்த கடத்தியாகச் செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால், குறைந்த அளவு பூச்சிகொல்லி மட்டும் பயன்படுத்தும் சூழல் ஏற்படும். ஆகவே, சூழ்நிலை பாதிப்பும் வெகுவாக குறையும் என்கிறது இந்த ஆய்வுக்குழு.
இன்னும் சில ஆய்வுகள் தேவைப்படுவதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், எதிர்காலத்தில் இம்முறை நடைமுறைக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விவசாயம் மட்டுமின்றி, மருத்துவதுறையிலும் வைரஸ் நானோதுகளைப் பயன்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்படி தகவல்கள் தேவைப்படின் அவசியம் என்னை அணுகவும். தக்க சான்றாதாரங்களை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
நன்றி,
இப்படிக்கு,
வேதிவாசன்
மேற்கண்ட கடிதத்தை எழுதி முடித்து, அதனை அப்பொழுதே அந்த வாசகரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைத்தார் வேதிவாசன். அப்பொழுது அம்மா அங்கு வந்தார்.
‘என்னப்பா இன்னும் வேலை முடியலையா?’ எனக் கேட்க, ‘முடிஞ்சுதும்மா இதோ தூங்க போரேன்’ என்று சொல்லி மடிக்கணினியை மூடினார்.
முனைவர்.ஆர்.சுரேஷ்
சென்னை.
அலைபேசி: 9941091461
மறுமொழி இடவும்