ஸ்டெம் செல்கள் நம் உடலின் அடித்தளம் என்றால் மிகை ஆகாது. அதுவே உண்மை.
விந்தையான தகவல் என்னவென்றால் நம் உடலின் தோல், எலும்புகள், தசைகள், அவயங்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுமே ஸ்டெம் செல்களால் ஆக்கப்பட்டவை.
தாயின் கருப்பையில் சிசு உருவாகும் போது அந்த சிசு ஸ்டெம் செல்களின் தொகுப்பே தவிர வேறு இல்லை.
இப்படிப்பட்ட ஸ்டெம் செல்கள்தான் கொஞ்சம் கொஞ்சம் ஆக உருமாறி சருமத்தின் உயிரணுக்கள், இரத்த உயிரணுக்கள் என்பதாக உடலின் பல பாகங்களாகப் பரிணாமம் பெறுகின்றன.
ஸ்டெம் செல்களின் தனித்தன்மையானது நவீன மருத்துவத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது.
ஸ்டெம் செல்கள் சதை உயிரணு, எலும்பு உயிரணு, இரத்த உயிரணு, மூளை உயிரணு உள்ளிட்ட உடலின் எந்த வகை உயிரணுவாகவும் மாறக் கூடிய வலிமை பெற்றவை.
இந்த ஸ்டெம் செல்கள், வரம்பற்ற முறையில் தம்மைப் போலவே மற்றொன்றையும் உருவாக்கிக் கொள்ளத் தக்கவை.
இப்படிப்பட்ட பண்புகளின் காரணத்தால் இவை இன்றைய மருத்துவ உலகில் மைய இடத்தைப் பெற்றுள்ளன.
பல்வேறு நோய்களைக் குணப்படுத்த ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தலாம் என்று மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
கடந்த 50 ஆண்டுகளில் இலட்சக்கணக்கான மக்கள், ஸ்டெம் செல்களின் சக்தியின் பயனைப் பெற்று மறுவாழ்வு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெம் செல்களை அதிக அளவில் கொண்ட ஆதாரங்களை மருத்துவ நோக்கத்திற்காகவும் உடலுக்குப் புத்துயிர் ஊட்டவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவையாவன
பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடி இரத்தம்
உங்கள் உடலின் எலும்பு மஜ்ஜை (bone marrow)
உயிரோட்டத்திற்கு காரணமான முக்கிய இரத்த ஓட்டம்
கொழுப்பு திசுக்களிலிருந்தான ஸ்டெம் செல்
தாயின் வயிற்றில் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான தொடர்பாக இருப்பது தொப்புள் கொடி.
இதில் மிகவும் அதிக அளவில் உயிர் காக்கும் ஸ்டெம் செல்கள் இருக்கின்றன என்பது வியப்புக்குரியது.
குழந்தை பிரசவிக்கப்படும் தருணத்தில் தொப்புள் கொடி இரத்தத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குப் பல நன்மை பயக்கும் காரணங்கள் உள்ளன.
தொப்புள் கொடி இரத்த ஸ்டெம் செல்களும் தொப்புள் கொடியின் திசுக்களும் குழந்தை பிறக்கும் நேரத்தில் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு 196 டிகிரி சென்டிகிரேட் அளவிலான குளிர்ந்த சூழலில் பாதுகாக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட ஸ்டெம் செல்கள், 80க்கும் மேற்பட்ட நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றவை. இந்த செயல்முறைக்கு ‘தொப்புள் கொடி ஸ்டெம் செல் வங்கி’ என்று பெயர்.
குளிர்ப்பதன சூழலில் ஸ்டெம் செல்கள் பாதுகாக்கப் படுகின்றன என்று பார்த்தோம்.
எனவே இதற்கு காலாவதி தேதி என்பது கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்தி நன்மை பெறலாம்.
ஸ்டெம் செல்கள் உறைந்த நிலையில் இருப்பதால் தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனாலேயே சிகிச்சைகளில் நல்ல பலன்களைப் பெற வழிவகை ஏற்படும்.
நோய்களுக்கு சிகிச்சை
நம்முடைய உடலெங்கிலும் ஸ்டெம் செல்கள் உள்ளன. குறிப்பாக, எலும்பு மஜ்ஜை என்பது கடற்பஞ்சு போன்ற திசு/ சில எலும்புகளின் மையப்பகுதியில் காணப்படும் இந்த மஜ்ஜையில் ஏராளமான அளவில் ஸ்டெம் செல்கள் உள்ளன.
ஸ்டெம் செல்களைப் பற்றி சிகிச்சை நோக்கில் நன்கு புரிந்து கொண்டு வெவ்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
மூட்டு மற்றும் இதயம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கத்தக்க ஆற்றலும் வலிமையும் கொண்டவை இவை.
ஆரோக்கியமும் பலமும் தன்னகத்தே கொண்டுள்ள ஸ்டெம் செல்களை அதிக அளவில் பெற போதுமான அளவு மஜ்ஜை எடுக்கப்பட வேண்டும்.
இதற்காக மஜ்ஜை எடுக்க ஏதுவாக நோயாளிக்கு ஆழ்ந்த உறக்கம் தரும் அளவில் மயக்க மருந்து தரப்படும். அவ்வாறு எடுக்கப்பட்ட மஜ்ஜை வடிக்கப்பட்டு உருவாக்கம் செய்யப்பட்டு நோயாளியிடம் உபயோகிக்கப்படுகிறது.
இதனை மிகச் சிறப்பான ஒத்திசைவான சிகிச்சை முறை என்று கூறலாம்.
இதில் ஏற்கனவே உள்ள நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறையும் புத்தம் புதிய ஸ்டெம் செல் முறையும் ஒன்றிணைந்துள்ளன.
இப்படிப்பட்ட சிகிச்சை முறையினுடைய பாதுகாப்பு, செயல்திறன் ஆகிய அம்சங்களை சுட்டிக்காட்டும் கிளினிகல் தகவல்களைப் பெறுவதற்காக, இன்டிகேஷன் அடிப்படையிலான கிளினிகல் ஒத்திகை செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புத்துயிர் ஊட்டும் இந்த மருந்து பற்றி விஞ்ஞானிகள் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
நரம்பியல் சார்ந்த சிகிச்சை, CLI, டயபட்டிக் ஃபுட் அல்சர், சேர்க்கை இல்லாமை, காலம் தாழ்ந்த சேர்க்கை, மூட்டு சவ்வு பழுது நீக்கம், காரனரி ஆர்டரி பைபாஸ் கிராப்டிங் மற்றும் மயோகார்டியல் இஸ்கெமிக் இன்ஃபார்க்ஷன் ஆகிய பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் ஸ்டெம் செல் அடிப்படையிலான சிகிச்சை இடம் பெறுகிறது.
இப்படிப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு முக்கியத்துவம் பெருகி வருகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் புட் & ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன், CE மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆகிய அமைப்புகளின் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சிறந்த முறையில் ஸ்டெம் செல்களை பயன்படுத்துவதற்கான புதிய சாத்தியக் கூறுகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்டெம் செல்களின் பயன்பாடு வருங்காலத்தில் மேலும் விரிவடையும் என்பதில் ஐயமில்லை.
மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!