ஸ்ட்ராபெர்ரி தனிப்பட்ட மணத்துடன் புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழம் ஆகும்.
இப்பழம் கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும். இந்தியாவில் இறக்குமதி செய்யக் கூடிய முக்கிய பழவகைகளுள் இப்பழம் முக்கியமானதாகும்.
இப்பழத்தின் தாயகம் ஐரோப்பா ஆகும். இப்பழமானது பிரான்சில் முதன்முறையாக பயிர் செய்யப்பட்டது.
தற்போது மிதவெப்ப மண்டலங்களிலும் வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது. இப்பழத்தில் சுமார் 600 வகைகள் உள்ளன. இப்பழம் அப்படியேவோ அல்லது பதப்படுத்தப்பட்டோ உண்ணப்படுகின்றது.
இப்பழமானது படர்ந்து வளரும் கொடி வகை தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. இத்தாவரத்தில் வெள்ளை நிறத்தில் பூக்கள் தோன்றுகின்றன. இப்பூக்களிலிருந்து கூம்பு வடிவ இளம் பச்சை நிறக் காய்கள் தோன்றுகின்றன.
இக்காய்கள் முதிர்ச்சியடையும்போது அடர்சிவப்பு நிறத்தில் வெளிப்புறத்தில் மஞ்சள்நிற விதைகளைக் கொண்டுள்ளன. இப்பழமானது உச்சியில் தொப்பி வடிவ இலைகளையும், அதன் மேல் காம்புப் பகுதியையும் கொண்டுள்ளது.
இப்பழமானது கூம்பு வடிவில் சுமார் 3 செமீ விட்ட அளவினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பழமும் சுமார் 25 கிராம் எடை அளவில் உள்ளது.
இப்பழத்தின் சுவையானது அதன் ரகத்தினைப் பொறுத்து இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்தோ, இனிப்பாகவோ, புளிப்பாகவோ இருக்கிறது. இப்பழம் 98 சதவீதம் விட்டமின் சி-யைப் பெற்றுள்ளது.
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள சத்துக்கள்
இப்பழத்தில் விட்டமின்கள் ஏ,சி,இ,கே, ரிபோஃப்ளோவின் (பி2), நியாஸின் (பி3), பேண்டோதெனிக் அமிலம் (பி5), பைரிடாக்ஸின் (பி6) ஆகியவையும், தாதுஉப்புக்கான பொட்டாசியம், கால்சியம், இரும்புசத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், துத்தநாகம் ஆகியவை உள்ளன.
கார்போஹைட்ரேட்கள், புரோட்டீன்கள், நார்சத்துக்கள், ஃபோலேட்டுகள் ஆகியவையும், பைட்டோ நியூட்ரியன்களான பீட்டா கரோட்டின்கள், லுடீன் ஸீக்ஸாதைன் ஆகியவையும் காணப்படுகின்றன.
ஸ்ட்ராபெர்ரியின் மருத்துவப்பண்புகள்
கண்கள் பாதுகாப்பிற்கு
இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் வயதான காலத்தில் ஏற்படும் கண்புரை நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் கண் லென்ஸில் உள்ள புரோட்டீன்களை பாதிப்படைச் செய்கின்றன.
ஆனால் விட்டமின் சி-யானது புறஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து கண்ணின் லென்ஸைப் பாதுகாக்கிறது. எனவே விட்டமின் சி அதிகம் உள்ள ஸ்ட்ராபெர்ரியை உண்டு கண்களைப் பாதுகாக்கலாம்.
ஸ்ட்ராபெர்ரியில் காணப்படும் ஃப்ளோவனாய்டுகள், பீனாலிக் பைட்டோகெமிக்கல்கள், எல்லாஜிக் அமிலம் ஆகியவை கண்தசை சிதைவு, பார்வை நரம்புச் சிதைவு, கண் தொற்று நோய் போன்ற கண் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலே நம்மை தொற்று நோய் கிருமிகள், நுண்உயிர் தாக்குதல் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. விட்டமின் சி-யானது நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகமாக வழங்குகிறது.
மேலும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை விட்டமின் சி-யானது நன்கு செயல்பட ஊக்குவிக்கிறது. எனவே விட்டமின்-சியை அதிகம் கொண்டுள்ள ஸ்ட்ராபெர்ரியை உண்டு நோய் எதிர்ப்பு ஆற்றலை இயற்கை வழியில் பெறலாம்.
கீல்வாதத்தைக் குணப்படுத்த
ஸ்ட்ராபெரியில் காணப்படும் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் கீல்வாதத்தினால் வீக்கங்கள் ஏற்படாமல் தடைசெய்வதோடு கீல்வாதத்தைக் குணப்படுத்துகின்றன.
புற்று நோயிலிருந்து பாதுகாப்பு
விட்டமின்-சி, ஃபோலேட்டுக்கள், ஃப்ளவனாய்டுகளான ஆந்தோசையானின்ஸ், க்யூயர்சிடின் போன்றவை புற்று நோயை எதிர்க்கும் பண்புகளைப் பெற்றுள்ளன.
ஸ்ட்ராபெர்ரியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் அவை புற்றுச் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்கின்றன. எனவே ஸ்ட்ராபெரியை உண்டு கான்சர் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
மூளை நன்கு செயல்பட
வயதான காலத்தில் சிலபேருக்கு மறதி நோய் ஏற்படுவதோடு கை,கால்,மூட்டுகளின் செயல்திறன் பாதிப்படைகிறது. இந்நோய் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்படைவதால் ஏற்படுகிறது.
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள விட்டமின் சி மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சி அடையச் செய்கின்றன. இப்பழத்தில் உள்ள அயோடின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை நன்கு செயல்படச் செய்கின்றன.
இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே மூளையின் செயல்திறன்களான ஞாபகசக்தி, நினைவாற்றல், ஒருங்கிணைக்கும் தன்மை ஆகியவை அதிகரிக்கின்றது. எனவேதான் ஸ்ட்ராபெர்ரி மூளைக்கான உணவு என்றழைக்கப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்திற்கு
இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சோடியத்தின் அதிகரிப்பால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
இதய நோயிலிருந்து பாதுகாப்பு
இப்பழத்தில் காணப்படும் நார்சத்துகள், ஃபோலேட்டுகள், விட்டமின் சி, பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை இதய இரத்த நாளங்களில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன.
இப்பழத்தில் உள்ள விட்டமின் பி-யின் தொகுப்பு இதயத் தசைகளை வலுப்பெறச் செய்வதோடு இதயத்தை நன்கு செயல்படச் செய்கிறது.
ஸ்ட்ராபெர்ரியை வாங்கும் முறை
இப்பழத்தினை வாங்கும்போது அடர் சிவப்பு நிறத்தில் பளபளபாகவும், தடிமனாகவும், தொப்பி வடிவ இலைகளுடன் இருக்குமாறு வாங்க வேண்டும். இப்பழமானது பறித்த பின்பு பழுப்பதில்லை.
எனவே மஞ்சள் கலந்த பச்சை வண்ணப் பழங்களை வாங்க வேண்டாம். பழத்தின் மேற்புறத்தில் காயங்களோ, தடிப்புகளோ உள்ள பழங்களை வாங்கக் கூடாது.
இப்பழங்களை குளிர்பதனப் பெட்டியில் வைக்கும் முன்பு காயமடைந்த மற்றும் அழுகிய பழங்களை நீக்கி விடவேண்டும். ஏனெனில் இப்பழங்கள் நல்ல பழங்களையும் கெட்டுப் போகச் செய்துவிடும். குளிர்பதனப் பெட்டியில் இப்பழத்தினை ஓரிரு நாட்கள் வைத்துப் பயன்படுத்தலாம்.
ஸ்ட்ராபெர்ரியை உண்ணும் முறை
இப்பழத்தினை குளிர்ந்த தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் முக்கி வைத்து மெதுவாக அலச வேண்டும். பின் காய்ந்த துணியால் பழத்தின் மேற்பரப்பை மெதுவாகத் துடைத்து விட வேண்டும். அதன்பின் மேற்புறத்தில் உள்ள இலைகள் மற்றும் காம்பினை நீக்கி உண்ணலாம்.
இப்பழமானது அப்படியேவோ, பழச்சாறாகவோ, பதப்படுத்தப்பட்டோ உண்ணப்படுகிறது. மேலும் இப்பழம் பழக்கூழ், ஐஸ்கிரீம், கேக்குகள், தானியக் கலவைகள், மில்க்சேக் ஆகிய வடிவிலும் உண்ணப்படுகிறது. உணவுப் பொருட்களில் சுவைக்காகவும், நிறத்திற்காகவும் இப்பழம் சேர்க்கப்படுகிறது.
ஸ்ட்ராபெர்ரியைப் பற்றிய எச்சரிக்கை
இப்பழம் ஒருசிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இப்பழமானது சிலருக்கு நாக்கு, உதடு, வாய் பகுதிகளில் தடிப்பினையும், வீக்கத்தினையும், அரிப்பையும் உண்டாக்குகிறது.
தோலில் அழற்சி, படைநோய், தலைவலி, மூக்கு ஒழுகுதல், கண்ணெரிச்சல், தூக்கமின்மை ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. ஒவ்வாமை உள்ளவர்கள் இப்பழத்தினை தவிர்க்க வேண்டும்.
உடலுக்கு ஆரோக்கியத்தினைத் தரும் ஸ்ட்ராபெர்ரியை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!