திருச்சி சுருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனியில் அசோக் நகர் உள்ளது. ஜங்ஷனிலிருந்து நகரப் பேருந்தில் பதினைந்து நிமிடப் பயணம் மூலம் அசோக் நகர் சென்றடையலாம்.
இங்கு ஸ்ரீ காலகண்டேசுவரர் என்னும் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. அண்மையில் உருவான இக்கோயிலுக்கு டெல்லி, பம்பாய், கல்கத்தா, பெங்களுர் ஆகிய நகரங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து ஸ்ரீ காலகண்டேசுவரரைத் தரிசித்து அருள் பெற்றுச் செல்கிறார்கள்.
ஸ்ரீ ஜெகன்னாத சுவாமிகள் என்பவர் ஸ்ரீ காலகண்டேசுவரரின் பூரண அருள் பெற்று இக்கோயிலின் பூஜைகளைத் தானே கவனித்து வருவதுடன் ஸ்ரீ காலகண்டேசுவருக்கு தன்னை முழுமையாக அர்பணம் செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ காலகண்டேசுவரருக்கு அபிஷேகம் முதல் அலங்காரம், அர்ச்சனை, பூஜை வரை அனைத்தையும் செய்வது ஸ்ரீ ஜெகன்னாத சுவாமிகள் தான்.
‘தூய்மையின் பிறப்பிடமே இக்கோயில் தானோ’ என மூக்கில் விரல் வைக்கக் கூடிய அளவுக்கு பராமரிக்கப்பட்டு வரும் ஓர் திருக்கோயில்!
ஸ்ரீ ஜெகன்னாத சுவாமிகள் செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் பக்தர்களுக்கு அருள்வாக்கும், திங்கள், வியாழன், சனி ஆகிய தினங்களில் வைத்தியமும் பார்த்து வருகிறார்.
சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய், இதயநோய், சித்தபிரமை போன்ற சிக்கலான நோய்களையுடைய நோயாளிகள் இக்கோயிலுக்கு வந்து தரிசித்து வைத்தியம் செய்து கொள்வதின் மூலம் பூரண குணம் பெற்று மனமகிழ்ச்சியுடன் திரும்புவதைக் காணலாம்!
காலை 7.30 மணிக்குள்ளும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணிக்குள்ளும் அபிஷேகம், பூஜை யாவும் முடிந்து விடும்.
பிறகோயில்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இத்திருக்கோயிலுக்கு வருபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விதிகளாவன:
1.கோயிலுக்குள் நுழையும் முன் வேட்டி மட்டுமே அணிந்து பனியன், சட்டை, வாட்ச், மோதிரம் போன்றவைகளை அகற்றி விட வேண்டும்.
2.காலணிகளை வெளியே அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்தில் மல்லாக்க வைத்துவிட்டு அருகிலிருக்கும் தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து கை, கால்களை நன்றாகக் கழுவி, பின் ஈரம் முழுக்கப் போகுமாறு துடைத்து சுத்தம் செய்து கொண்டு கோயில் உள்ளே நுழைய வேண்டும்.
- அர்ச்சனை, அபிஷேகத்தில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் அதற்குரிய பொருட்களுடன் குறிப்பிட்டப்பட்டுள்ள பூஜா காலங்களுக்கு அரைமணி முன்னதாகவே வந்து விட வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள காலம் தவிர மற்ற நேரங்களில் அர்ச்சனையோ, அபிஷேகமோ, தீபாராதனையோ செய்யப்பட மாட்டாது.
நோய்களின் தன்மைக்கு ஏற்ப ‘ஸ்ரீ ஜெகன்னாத சுவாமிகள்’ சிகிச்சை முறைகளையும், சிகிச்சைக்கான கால அளவையும், ஸ்ரீ காலகண்டேசுவரரைத் தரிசிக்கும் முறைகளையும் கூறி வைத்தியம் பார்த்து பக்தர்களை பூரண திருப்தியுடன் அனுப்பி வைக்கிறார்.
முழுக்க, முழுக்க ஸ்ரீகாலகண்டேசுவரரின் பரிபூரண அருளால் எண்ணற்ற பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து சிகிச்சை பெற்று பரிபூரண குணம் பெற்றுத் திரும்புகின்றனர்.
ஜாதி, மதம், ஏழை, பணக்காரர் என்று எவ்வித பேதமுமின்றி அனைவருக்கும் பொதுவான, ஜனங்களுக்காகவே உருவான கோயில் இது என்கிறார் ஸ்ரீ ஜெகன்னாத சுவாமிகள்!
ஸ்ரீ காலகண்டேசுவரரின் பூரண அருள் பெற்று நடமாடும் தெய்வமாக விளங்கி ஸ்ரீ காலகண்டேசுரரின் மகிமைகளையும் பக்த கோடிகளுக்கு எடுத்துரைத்து ஆசியையும், அருளையும் வழங்கி ஆன்மீகத் தொண்டு புரிந்து வரும் ‘ஸ்ரீ ஜெகன்னாத சுவாமிகள்’ வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர். மேல் படிப்பு படித்தவர்.
மிக உயர்ந்த பதவியை உதறித் தள்ளிவிட்டு இக்கலியுகத்தில் ஸ்ரீ காலகண்டேசுரருக்காக திருக்கோயில் ஒன்றை எழுப்பியுள்ளார்.
சேவை புரிவதையே பாக்கியமாகக் கருதி, கோயிலின் திருப்பணிகளை கவனிப்பதை முழுமூச்சாகக் கொண்டு ஸ்ரீகாலகண்டேசுவரருக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!