கிருஷ்ண சைதன்யரின் சீடர்களுள் ஒருவர் ஹரிதாசர். இவர் குருவை மிஞ்சிய சீடர். வனப் பகுதியில் குடிசையில் வாழ்ந்த இவர் தினம் இரண்டு லட்சம் தடவைகள் கிருஷ்ண நாமத்தை உச்சரித்தார்.
“யார் என்னுடைய நாமங்களை இடைவிடாமல் ஓதுகின்றனரோ அவர்களுக்கு நான் கடன்பட்டவனாகின்றேன்” என்கிறார் பகவத் கீதையிலே பகவான். இது ஹரிதாசர் வாழ்க்கையில் உண்மையாயிற்று.
ஹரிதாசர் மீது பொறாமை கொண்ட சிலர் மன்னனிடம் இவரைப் பற்றி அவதூறு கூறினர். சினம் கொண்ட மன்னன் இவருக்கு சவுக்கடி வழங்க ஆணையிட்டார். ஹரிதாசர் மீது விழுந்த சவுக்கடியைப் பகவான் தம் முதுகில் தாங்கினார். இவரது உண்மையான பக்தியை உணர்ந்த மன்னன் தன் தவறுக்கு வருந்தினான்; திருந்தினான்.
ஹரிதாசர் மீது பொறாமை கொண்ட அற்பன் ஒருவன் எப்படியாவது இவர் பெயருக்கு களங்கம் கற்பித்தே ஆக வேண்டுமென விரும்பினான்.
இறைவன் திருப் பெயரை எந்நேரமும் கூறிக்கொண்டிருக்கும் பக்தர் பெயருக்கு களங்கம் உண்டாக்குவதா? உண்ணும் போதும் உறங்கும் போதும், எண்ணும் போதும், எழுதும் போதும் எப்போதும் தப்பாது இறை நாமத்தை உச்சரிக்கும் நல்லவர் நாமத்திற்கு இழுக்கினைச் செய்வதா? இக்கொடுமை நடக்கவில்லை.
அந்த அற்பன் வேசி ஒருத்தியை இவரது குடிசைக்கு அனுப்பினான். அவளை ஒரு பொருட்டாக எண்ணாத ஹரிதாசர் நாமம் ஓதும் தம் கருமமே கண்ணாக இருந்தார். சற்றும் மனம் சலனப் படவில்லை.
இரண்டு நாட்கள் அவர் ஓதிய இறைத் திருநாமங்களைக் கேட்ட அப்பெண்ணின் மனம் மாறியது. களங்கத்தை உண்டாக்க வந்தவள் தன் களங்கம் நீங்கப் பெற்றாள். ஆம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி பகவான் நாமத்தை ஓதினார் பக்தர் ஒருவர்.
அதைக் கேட்ட அப்பெண் மனம் இறைவன் மீது காதல் கொண்டது; கசிந்தது; நெகிழ்ந்தது; பனியாய் உருகியது; நிறைவில் அப்பெண்ணும் தீவிர பக்தையானாள். தன்னை சிஷ்யையாக ஏற்குமாறு ஹரிதாசரிடம் வேண்டினாள்.
“இறைவனுடைய நாமங்கள் கோடானு கோடி பாவ மூட்டைகளை நொடிப் பொழுதில் பொசுக்கிவிடும் ஆற்றல் கொண்டவை. உன் மனம் பழைய பாதையில் போக விரும்பினால் கிருஷ்ண நாமங்கள் என்னும் ஏவுகணைகளால் அந்த எண்ணத்தை வீழ்த்து” என்று அருளினார்.