“காலை வணக்கம் மனிதர்களே!
எல்லோரும் நலம் தானே?
சிலர் சோர்வாக இருக்கிறீர்களே! ஏன்? ஏதேனும் பிரச்சனையா? என்னிடம் சொல்வதால் அந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நான் சொல்லவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்த உலகம் இன்ப துன்பங்கள் கலந்த கலவை தான்.
மன உறுதியோடு பிரச்சனைகளை உரிய முறையில் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
என்ன, நான் சொன்னது சரி தானே?
சரி. இன்று நான் பேச வந்ததே ′ஹைட்ரஜன் வாயுவைப்′ பற்றி தான்.
ஹைட்ரஜனின் வேதியியல் குறியீடு H-ஆகும். மூலக்கூறு நிலையில் இதனை H2 H2-என குறிக்கின்றனர்.
உங்களுக்கு தெரியுமா? ஹைட்ரஜன் என்பது காரணப் பெயர்.
அதாவது, கிரேக்க மொழியில் ′ஹைட்ரோ′ என்றால் நீர் என்று அர்த்தம். ′ஜன்′ என்றால் ′உண்டாக்குதல்′ என்று பொருள்.
ஹைட்ரஜன் வாயு ஆக்சிஜன் வாயுவுடன் சேர்ந்து நீரை உண்டாக்குவதால் அதற்கு இப்பெயர் வைக்கப்பட்டது.
ஹைட்ரஜனைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அது மிகவும் இலேசான வாயு, அதாவது எடை குறைவானது.
″அட, வாயுக்கள் அனைத்துமே எடை குறைவானது தானே?″ என்கிறீர்களா?
உண்மை தான். ஆனால் மற்ற வாயுக்களை விடவும் ஹைட்ரஜனின் எடை குறைவு.
அதனால் தான் பூமியின் மேற்பரப்பில் இருந்து மேகத்தை நோக்கி அது எளிதில் மேலே எழும்புகிறது. இதைப் பயன்படுத்தி உங்களாலும் உயரப் பறக்க முடிகிறதே!
என்ன புரியவில்லையா?
ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ராட்சத பறக்கும் பலூன்களைத் தான் குறிப்பிடுறேன்.
சில நூறு வருடங்களுக்கு முன்பு, முதன் முதலில் ராட்சத பலூன்களில் மனிதர்கள் பறந்ததைக் கண்ட போது எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
என்ன இது, வித்தியாசமாக இருக்கிறதே! என்று ஆச்சரியம் அடைந்தேன்.
பிறகு தான் தெரிந்தது, ஹைட்ரஜன் எடை குறைவு என்பதால் இயல்பாகவே, அது வளிமண்டலத்தில் மேல்பகுதியை நோக்கி அது வரும் என்பது.
தமது அறிவினால், ஹைட்ரஜனை பயன்படுத்தி ராட்சத பலூனில் மனிதர்கள் பறப்பது இன்றளவும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது என்பது உண்மையே.
இருக்கட்டும், ஹைட்ரஜனின் பிற பண்புகளை சொல்கிறேன்.
பெரும்பாலான வாயுக்களைப் போலவே, ஹைட்ரஜனும் நிறமற்ற, சுவையற்ற, மற்றும் மணமற்ற வாயு தான்.
ஆனால் ஒரு பிரத்யேக பண்பு ஹைட்ரஜனுக்கு இருக்கிறது. என்ன தெரியுமா? தீப்பற்றும் தன்மை தான். ஆம், ஹைட்ரஜன் எளிதில் தீப்பிடித்து எரியக்கூடிய வாயு.
இம்ம்…. எரியக் கூடிய கரிமச் சேர்மங்களிலும், நெருப்பை அனைக்கும் நீரிலும் ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கின்றன.
கார்பனுடன் சேர்ந்து எண்ணற்ற கரிம வேதிப்பொருட்களை ஹைட்ரஜன் தந்துள்ளது.
இன்னும் புதிய புதிய கரிமச் சேர்மங்கள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் இருக்கும் இயற்கையான சேர்மங்களில் ஹைட்ரஜன் இருக்கிறது. ஆக, ″ஹைட்ரஜன் இல்லாத உயிரினமே இல்லை″ என்றே கூறலாம்.
இருந்தாலும், பிரபஞ்சத்தில் இருக்கும் அளவை விட பூமியில் ஹைட்ரஜனின் அளவு குறைவு தான்.
இதை முக்கியமாக சொல்ல வேண்டும்.
பெரும்பாலான சேர்மங்களில் ஹைட்ரஜன் இருந்தாலும், ஹைட்ரஜன் மூலக்கூறாக, அதாவது ஹைட்ரஜன் வாயுவாக இயற்கையில் இருப்பதில்லை.
ஆனால் செயற்கையாக ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது,
பெரும்பாலும் பிற சேர்மங்களின் வேதிவினைகள் அல்லது தயாரிப்புகளின் போது விளைபொருளாக ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது.
தற்காலத்தில் குறைந்த செலவில் பெருமளவு ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏன் தெரியுமா?
எரிபொருளுக்காகத் தான்.
ஆம். படிம எரிபொருளுக்கு மாற்றாக இருப்பதோடு மாசுபடுத்தாத, அதாவது பசுமை எரிபொருளாக ஹைட்ரஜன் வாயு இருக்கிறது.
இன்றைய உலகிற்கு சுற்றுச்சூழலை பாதிக்காத ஹைட்ரஜன் வாயு போன்ற எரிபொருள் அவசியமே.
அந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளை பரவலாக பயன்படுத்துவதற்காக மனிதர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் விரைவில் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.
சொல்ல மறந்துவிட்டேனே, திரவ ஹைட்ரஜன் ராக்கெட் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
எரிபொருள் தவிர ஹைட்ரஜன் வாயு இன்னும் பல வகையில் பயன்படுகிறது.
நான் ஏற்கனவே, சொன்னது போல், ஹைட்ரஜன் பலூன்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
அத்தோடு, மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்னியக்கிகளில் சுழல் வட்டுகளின் சூட்டைத் தணிக்கும் ஒரு குளிர்வூட்டியாகவும் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.
முக்கியமாக, கரிம வேதிச்சேர்மங்கள் மட்டுமின்றி அம்மோனியா உள்ளிட்ட பல கனிம சேர்மங்கள் உற்பத்தியிலும் ஹைட்ரஜன் வாயு பயன்படுகிறது.
மேலும், பெட்ரோலியத்தை சுத்திகரிக்கவும் உலோகங்களை சுத்திகரிக்கவும் உணவுகளை பதப்படுத்தவும் ஹைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது.
லேசான ஹைட்ரஜன் வாயுவால் எத்தனையோ நன்மைகள் இருக்கின்றன.
ஆம், ஒரு வாயுவாக ஹைட்ரஜனை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.
இந்த வேளையில் ஒரு கருத்தை சொல்ல ஆசைப்படுகிறேன்.
″உங்களது மன பாரத்தை சரியான முறையில் நீக்கிவிடுங்கள். சுமையை நீக்கினால் எடை குறையும் தானே? பிறகென்ன உற்சாகத்தில் பறந்து பறந்து வேலை செய்யுங்கள். உங்களை எண்ணி பிறர் நிச்சயம் பெருமை அடைவர்″.
சக மனிதர்களுக்கு மட்டுமின்றி, இந்த உலக நன்மைக்கும் சேர்த்து நீங்கள் பணி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இன்றைய பேச்சை நான் முடித்துக் கொள்கிறேன்.
இன்னொரு நாள் வருகிறேன். மற்றொரு செய்தியுடன்.”
(குரல் ஒலிக்கும்)
கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!