அசிங்கப்படுத்தாமல் இருந்தால் போதும்

‘ஆசி’ இருந்தால் தான் ஆசிரியராக முடியும்
என்றெல்லாம் யோசித்து வாசித்து நேசித்து
ஆசிரியர் பணியேற்ற எங்களுக்கு
‘ஆசிரியர் தினம்’ கொண்டாடி மரியாதை கொடுக்க வேண்டாம்
அசிங்கப்படுத்தாமல் இருந்தால் போதும்!

மாதா பிதா குரு தெய்வம் என்று கூக்குரலிட்டு
குருபூஜை செய்ய வேண்டாம் – எங்களைக்
கூனிக்குறுகி நிற்க வைக்காமல் இருந்தால் போதும்!

உங்கள் கருவூலம் முழுவதையும் எங்களுக்கே
கொடுத்து எங்களை கௌரவிக்க வேண்டாம்
செய்யும் பணிக்கு படி கொடுத்தால் போதும்!

நூல்கள் பல படித்தோம், பட்டங்கள் சில பெற்றோம் என்று
எங்களுக்கு பட்டாபிசேகம் பண்ண வேண்டாம்
நாங்களும் படித்தவர்கள் என்று பக்குவமாக நடந்து கொண்டால் போதும்

சாதாரண மாணவனையும் சரித்திரம் படைக்க வைத்தோம் என்று
சபை ஏற்றி எங்களை அழகு பார்க்க வேண்டாம்
சவுக்கடி கொடுக்காமல் இருந்தால் போதும்!

போதும்! போதும்! போதும்! எங்களைப் புலம்ப வைத்தது போதும்!
ஏனெனில்
ஆசிரியர் பணி என்பது பணம் மட்டும் சார்ந்த பணி அல்ல
மனம் சார்ந்த பொறுப்பு!

கல்வி என்பது ஆசிரியருக்கு பாடம் கற்பிக்க அல்ல
மாணவர் கற்க!

வாழ்க்கை என்பது ஆசிரியரோடு மட்டும் அரசியல் செய்ய அல்ல
அன்போடு வாழ!

அன்பாக வாழுங்கள்! ஆசிரியர்களையும் வாழ விடுங்கள்!
ஆசிரியர் தாஸ்

One Reply to “அசிங்கப்படுத்தாமல் இருந்தால் போதும்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.