அதிசய திரவம் தேங்காய் பால்

தேங்காய் பால் தேங்காயிலிருந்து எடுக்கப்படும் அதிசய திரவம் என்பது முற்றிலும் உண்மையே. ஏனெனில் இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அதிகளவு கொண்டுள்ளது. தேங்காய் பால் எடுக்க முற்றிய தேங்காயே சிறந்தது.

தேங்காய் பாலினை உணவாக உட்கொள்ளும் முறையானது தேங்காய் அதிகளவு கிடைக்கும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, கரீபியன், மேற்கு ஆப்பிரிக்கா, ஹவாய் பகுதிகளில் சாதாரணமானது. பழங்காலந்தொட்டே இப்பகுதிகளில் தேங்காய் பாலினை உண்ணும் வழக்கம் இருந்துள்ளது.

தேங்காய் பால் என்பது உண்மையில் பால் அல்ல. தேங்காயினை உடைத்தவுடன் தேங்காய் பாலானது பெறப்படுவதில்லை. தேங்காயின் வெள்ளைநிற கடிமான சதைப்பகுதியிலிருந்து சில செயலாக்கத்திற்கு பின்பு தேங்காய் பாலானது பெறப்படுகிறது.

தேங்காய் தோன்றிய ஒரு வருடத்தில் முற்றிய தேங்காயானது பெறப்படுகிறது. முற்றிய தேங்காயில்தான் வெள்ளைநிற கடிமான சதைப்பகுதி தடித்ததாக இருக்கும். இதிலிருந்துதான் வழவழப்பான இயற்கை இனிப்புடன் கூடிய தேங்காய் பாலானது அதிகளவு கிடைக்கும்.

தேங்காயானது ஆர்க்காசியேயி என்ற பனைத் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த தென்னை மரத்திலிருந்து பெறப்படுகிறது. தென்னையின் அறிவியல் பெயர் கோகோஸ் நியூசிபெரா என்பதாகும்.

தேங்காயின் அமைப்பு

தேங்காயானது ரக்ஃபி பந்தினைப் போல தோற்றத்தினைக் கொண்டது. இது 20-30 செமீ நீளத்தில் கடிமான மூன்று மேற்பக்கங்களைக் கொண்ட மட்டையினைக் கொண்டுள்ளது.

அதனுள் கடிமான நீர்புகாத ஓட்டுப்பகுதியினுள் கடிமான வெள்ளைநிறச் சதைப்பகுதி அதிகமாகவும், நீர் குறைந்தளவும் காணப்படுகிறது.

கடிமான ஓட்டுப்பகுதியானது நார்ப்பகுதியால் சூழப்பட்டு மட்டையினுள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. மீடியம் சைஸ் தேங்காயில் சுமார் 400 கிராம் கடிமான வெள்ளைநிறச் சதைப்பகுதியும், 30-150 மிலி தண்ணீர் இருக்கும்.

 

மட்டை உரித்த தேங்காய்
மட்டை உரித்த தேங்காய்

உடைத்த தேங்காய் முடி
உடைத்த தேங்காய் முடி

 

தேங்காய் பாலினை தயார் செய்யும் முறை

தேங்காயின் மேற்புற மட்டையினை நீக்கி உள்ளிருக்கும் கடினமான ஓட்டுப்பகுதி பிரித்து எடுக்கப்படுகிறது. பின் கடிமான ஓட்டுப்பகுதி கல்லில் தட்டப்பட்டோ, இரும்பு கம்பியால் தட்டப்பட்டோ உடைக்கப்படுகிறது.

ஓட்டினுள் இருக்கும் கடிமான வெள்ளைநிற சதைப்பகுதி துண்டுகளாக்கப்பட்டு தண்ணீருடன் சேர்த்து அரைக்கப்பட்டு பின் வடிகட்டியால் வடிகட்டப்படுகிறது. வடிகட்டில் இருந்து வெளியேறும் வழவழப்பான பால் போன்ற திரவமே தேங்காய் பால் எனப்படுகிறது.

 

தேங்காய் பால்
தேங்காய் பால்

 

வடிகட்டியின் மேல்புறத்தில் தங்கியிருக்கும் தேங்காய் துருவலுடன் தேவையான தண்ணீர் சேர்த்து தேங்காய் பாலினை மீண்டும் தயார் செய்யலாம்.

ஆனால் இது முதலில் தயார் செய்த பாலினைவிட அடர்த்தி குறைந்ததாக இருக்கும். இவ்வாறு மீண்டும் இரண்டு, மூன்று முறை தேங்காய் பாலினை தயார் செய்யலாம்.

தேங்காயை பூவாகத் துருவி வெந்நீரில் சிறிது நேரம் முக்கிவைத்து வடிகட்டியும் தேங்காய் பாலினைத் தயார் செய்யலாம்.

தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள்

தேங்காய் பாலில் விட்டமின் சி, இ, கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் இதில் தாதுஉப்புக்களான கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன.

மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரோடீன், நார்ச்சத்து, நிறைவுற்ற கொழுப்புகள், இயற்கை சர்க்கரை ஆகியவையும் காணப்படுகின்றன.

தேங்காய் பாலின் மருத்துவப் பண்புகள்

தேங்காய் பாலானது பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நுண்நோய்கிருமிகள் எதிர்ப்பு பண்பினைக் கொண்டுள்ளது. தேங்காயில் தாய்பாலில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பான லாரிக் அமிலம் உள்ளது.

லாரிக் அமிலம் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. எனவே சிறுகுழந்தைகளுக்கும் தேங்காய் பாலினைக் கொடுக்கலாம்.

இதய நலத்திற்கு

தேங்காய் பாலில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகளில் 50 சதவீதம் லாரிக் அமிலம் உள்ளது. மீடியம் சங்கலி கொழுப்பு அமிலவகையைச் சார்ந்த லாரிக் அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் (LDL) குறைத்து நல்ல கொழுப்பின் (HDL) அளவினை அதிகரிக்கிறது.

எனவே போதுமான அளவு தேங்காய் பாலினை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதனால் பெருங்குடல் அழற்சி நோய், மாரடைப்பு, பக்கவாகதம் போன்றவை தடை செய்யப்படுகின்றன. மேலும் தேங்காய் பாலானது டிரைசைகிளாய்டுகளின் அளவினைக் குறைத்து இதய நோய்களை தடைசெய்யவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனால் தேங்காய் பாலினை அளவோடு உண்டு இதய நலத்தினைப் பேணலாம்.

நரம்புகளின் செயல்பாடுகளை சீராக்க

தேங்காய் பாலில் உள்ள தாதுஉப்புக்கள் உடலில் உள்ள எலக்ட்ரோலைட் அளவுகளில் குறிப்பிட்டத்தக்க விளைவுகளை உண்டாக்குகின்றன.

பொதுவாக எலக்ட்ரோலைட் திரவமானது உடலில் செல்கள், தசைகள் உட்பட உடலின் அனைத்து பாகங்களுக்கும் நரம்புமண்டலத்தின் செய்திகளைக் கடத்துகின்றது.

எலக்ரோலைட் திரவமான தேங்காய் பாலினை உண்ணும் போது நம் உடலின் தசைகளின் செயல்பாடு, ஒட்டு மொத்த நரம்புகளின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.

ஆற்றலினை அதிகரிக்க

தேங்காய் பாலில் உள்ள மீடியம் சங்கலி கொழுப்பு அமிலமானது நேரடியாக கல்லீரலில் வளர்ச்சிதை மாற்றத்தை அடைந்து கெட்டோன்களாக மாற்றப்படுகிறது.

இவை நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான ஆற்றலை தக்க சமயத்தில் வழங்குகின்றன. இதனால் ஆற்றலின் அளவினை அதிகரிக்க விரும்புபவர்கள் தேங்காய் பாலினை உண்ணலாம்.

உடல் எடை குறைப்பிற்கு

தேங்காய் பாலில் காணப்படும் குறிப்பிட்ட வகை கொழுப்புக்கள் பசியினை அடக்குவதோடு உணவு உட்கொள்ளும் அளவினையும் குறைக்கிறது.

அதே நேரத்தில் உடலில் வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது. மேலும் இது உடல் அமைதியாக இருக்கும்போது ஆற்றலை எரிப்பதால் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடை குறைப்பிற்கு வழிவகை செய்கிறது.

நல்ல செரிமானத்திற்கு

தேங்காய் பால் தயாரிக்கும்போது நார்ச்சத்தானது வடிகட்டப்படுகிறது. இருந்தபோதிலும் இந்த அதிசய திரவமானது எதிர்ப்பு அழற்சி பண்பினைக் கொண்டுள்ளது.

இதனால் வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்து எளிய செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் இது மலச்சிக்கலுக்கும் நல்ல மருந்தாக உள்ளது.

மேலும் இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு, எதிர்ப்பு அழற்சி பண்பு ஆகியவற்றால் அல்சர் மற்றும்ட வாய்புண்ணிற்கு இது சிறந்த தீர்வினை வழங்குகிறது.

சீரான இரத்த ஓட்டத்திற்கு

தேங்காய் பாலில் உள்ள இரும்புச் சத்தானது உடலுக்குத் தேவையான இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. இதனால் இரத்த சோகை என்னும் அனீமியா நோய் குணப்படுத்தப்படுகிறது.

மேலும் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனானது சீரான இரத்த ஓட்டத்தினால் கிடைக்கு தேங்காய் பாலில் உள்ள இரும்புச்சத்து உதவுகிறது.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு

தேங்காய் பாலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுஉப்புக்கள் எலும்புகளை ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது.

மேலும் இதன் எதிர்ப்பு அழற்சி பண்பு காரணமாக வாதம், எலும்புப்புரை, வீக்கம், எலும்பு முறிவுகள் ஆகியவை ஏற்படாமல் தேங்காய் பால் நம்மைப் பாதுகாக்கிறது.

சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு

தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு உதவுகிறது. இதில் உள்ள கொழுப்புகளின் எதிர்ப்பு அழற்சி பண்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு ஆகியவற்றால் பொடுகு, தோல் வியாதி, காயங்கள், அரிப்புகள் ஆகியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கின்றன.

மேலும் இதில் கொழுப்புகள் தோலுக்கு இயற்கையான முறையில் ஈரப்படுத்திகளாகச் செயல்படுகின்றன. மேலும் இவை சருமக் சுருக்கத்திற்கும் தீர்வினை வழங்குகின்றன.

மனஅழுத்தத்தைக் குறைக்க

தேங்காய் பாலில் உள்ள மெக்னீசியமானது மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் பாலினை குடிக்கும்போது தசைப்பிடிப்பு பதட்டம் மற்றும் மனஅழுத்தம் குறைந்து நரம்புகள் அமைதிப்படுத்தப்படுகின்றன. இதனால் நாம் தளர்வாக இருப்பதை உணரமுடியும். எனவே இதனை உண்டு மனஅழுத்தத்தைக் குறைக்கலாம்.

தேங்காய் பாலானது அப்படியேவோ, உணவுகளில் சேர்க்கப்பட்டோ உண்ணப்படுகிறது. இயற்கையின் அதிசய திரவமான தேங்காய் பாலினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.