அன்பின் பரிசு – சிறுகதை

உயிர்களிடம் மாறாத அன்பு கொண்ட மாறனுக்கு கிடைத்த அன்பின் பரிசு பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மாறன் அன்பான ஏழை சிறுவன். ஒருநாள் அவனுடைய மாமா ஊருக்குச் சென்று கொண்டிருந்தான்.
மாமாவின் ஊருக்குச் செல்லும் வழியில் இரவில் சத்திரம் ஒன்றில் தங்கினான்.சத்திரக்காரன் அவனை அன்புடன் வரவேற்று உணவினையும், இருக்க இடத்தினையும் கொடுத்தான்.

மறுநாள் தனது பயணத்தைத் தொடர்ந்த மாறன் மாந்தோப்பின் அருகே சென்று கொண்டிருந்தபோது புறா ஒன்று காலில் அடிபட்டு கீழே விழுந்து கிடந்தது.

புறாவினை எடுத்து அதற்கு பச்சிலை வைத்துக் கட்டி, தான் வைத்திருந்த உணவினையும் நீரினையும் அதற்குத் தந்தான். புறாவும் சிறிது நேரத்தில் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து, மாறனுக்கு நன்றி சொல்லி பறக்க ஆரம்பித்தது.
புறா பறப்பதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே சென்ற மாறன் மாமாவின் வீட்டினை விரைவில் அடைந்தான்.

சிறிது நாட்கள் மாமாவின் வீட்டிலிருந்த மாறன் தன்னுடைய ஊருக்குப் புறப்பட்டான்.

வழியிலிருந்த மாந்தோப்பில் புறாவினைச் சந்தித்தான். அப்போது புறா அவனுக்கு சிறிய பாயினை அளித்தது.

பாயை விரித்து அமர்ந்து கேட்டால் விரும்பிய உணவுப் பொருட்களை அப்பாய் கொடுக்கும் என்றுகூறி மாறனிடம் கொடுத்தது.

மாறனும் அதனை எடுத்துக் கொண்டு சத்திரத்தை அடைந்தான். தனக்கு வேண்டிய உணவுப் பொருளை வரவழைத்து உண்டுவிட்டு இரவு உறங்கினான்.

மாறனின் செயலை வேவு பார்த்த சத்திரக்காரன் மந்திரப்பாயை திருடி வைத்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் புறாவின் அன்பு பரிசு மந்திரப்பாயைக் காணாது மாறன் அழுதான். மாந்தோப்பிற்கு புறாவைத் தேடிச்சென்றான்.

புறாவைக் கண்டு மந்திரப்பாய் காணாமல் போனதைக் கூறினான்.

ஆறுதல் கூறிய புறா அவனுக்கு குட்டி பொம்மை ஒன்றைக் கொடுத்தது.

பொம்மையின் காதை திருகினால் ஒரு தங்ககாசு விழுந்தது. அதனை எடுத்துக் கொண்டு மாறன் சந்திரத்தில் இரவில் தங்கினான்.

பொம்மையிடம் பெற்ற தங்கக் காசினை சத்திரக்காரனிடம் தந்து உணவு உண்டான். மாறனிடம் இருந்து உண்மையை அறிந்து கொண்ட சத்திரக்காரன் பொம்மையைத் திருடிவிட்டான்.

மறுநாள் காலையில் பொம்மையைக் காணாது புறாவிடம் சென்றான் மாறன்.

உண்மையை உணர்ந்த புறா மாறனுக்கு குச்சிகள் இரண்டைக் கொடுத்தது. “உன்னுடைய திருடப்பட்ட பொருட்களை இக்குச்சிகள் மீட்டுத்தரும்” என்றது.

குச்சிகளுடன் இரவு சத்திரத்தை அடைந்தான். சத்திரக்காரன் வழக்கம்போல் குச்சிகளைத் திருடினான். உடனே குச்சிகள் சத்திரக்காரனை வெளுத்துக் கட்டின.

சத்திரக்காரன் வலிதாங்காமல் அலறினான். சத்திரத்தில் உள்ளவர்கள் அனைவரும் விழித்துக் கொண்டனர்.

சத்திரக்காரன் என்னன்னவோ செய்தும் குச்சிகள் அடிப்பதை நிறுத்தவில்லை.

உடனே சத்திரக்காரன் மந்திரப்பாய் மற்றும் பொம்மையை எடுத்து மாறனிடம் கொடுத்தான். குச்சிகள் அடிப்பதை நிறுத்தின. நடந்தவைகளுக்காக மாறனிடம் மன்னிப்புக் கேட்டான்.

மந்திரப்பாய், பொம்மைகள் ஆகியவற்றுடன் மகிழ்ச்சியாக மாறன் தன்னுடைய வீட்டினை அடைந்தான்.

புறாவிடம் கொண்ட அன்பினால் மாறனுக்குக் கிடைத்த அன்பின் பரிசு பற்றி அறிந்து கொண்டீர்கள்தானே. ஆதலால் எல்லா உயிர்களிடத்தும் அன்போடு இருங்கள்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.