அன்புக் கட்டளை – கதை

சூரியன் மக்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்த காலை நேரம். தார் சாலையில் ஸ்கூட்டர்களும், மோட்டார் சைக்கிள்களும் வழுக்கிக் கொண்டிருந்தன. அந்த கல்லூரி ஆண்-பெண் இருபாலருக்கும் உரிமையானது. வாசலில் கட்டிளங்காளைகளின் கூட்டம் வரும் கன்னியர்களை ஈ போல் மொய்த்துக் கொண்டிருந்தது.

தூரத்தில் ஒரு மஞ்சள் சுடிதார் தெரிய “இஞ்சி இடுப்பழகி, மஞ்ச சிவப்பழகி” என பாடினான் ராஜா. அந்த சுடிதார் சுந்தரி முறைக்க “ என்ன பார்வை உந்தன் பார்வை” அடுத்த பாடலை எடுத்து விட்டான் ரமேஷ்.

சிரிப்பலைகள் வாலிபக் கடலில் மேலோங்கியது. அதே நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் ஜெகன். “ டேய் ஏண்டா இப்படி கிண்டல் பண்றீங்க? பாவம்டா அந்த பொண்ணு பயந்து போய்டுச்சி”

உடனே ரமேஷ் கேட்டான். “என்னடா வரவர நீ ரொம்ப கெட்டுப்போய்ட்ட. கொஞ்சம் கூட கலர் பார்க்க விடமாட்டேங்கிற. ஏன்? உனக்கு உன்னோட நிம்மி கண்டிஷன் போட்டுட்டாளா? சைட் அடிக்ககூடாதுன்னு?” இவர்கள் விவாதம் முடியும் முன் பெல் அடிக்கவே மாணவர் கூட்டம் கலைந்தது.

உணவு இடைவேளை. நிர்மலாவும் ஜெகனும் தத்தம் டிபன் பாக்ஸினை பிரித்தனர். ஜெகன் கேட்டான் “நிம்மி! இன்னைக்கு நாம கோயிலுக்கு போகலாமா? அவசரமாய் மறுத்தாள் நிர்மலா.

எனக்கு நாளைக்கு டெஸ்ட் இருக்கு. நீங்க வேணும்னா போய்ட்டு வாங்க” சுந்தர் வேகமாய் தலையாட்டினான். “வேண்டாம் இன்னொரு நாள் போவோம்” என்றான். சிறிது நேரம் பேசி சிரித்து பின் பிரிந்தனர்.

அந்தி மயங்கும் மாலை நேரம். வில்லில் இருந்து விடுபட்ட அம்புகளாய் மாணவர் கூட்டம் வெளியேறியது. ரமேஷ் கேட்டான். “ டேய் ஜெகன்! வர்றியா? கொஞ்சம் தம் அடிப்போம்.?”

“அவன் வரமாட்டான்டா. நிம்மி அப்புறம் அவனை பொளந்து கட்டிருவா” என்றான் ராஜா.
“சரிடா. ஈவினிங் சினிமாவுக்காவது வர்றியா?” வினவினான் ரமேஷ்.

“நான் வரலப்பா” – சுந்தர்

“அவன் நம்மளோட பிலிமுக்கு வந்தா வீட்ல போயி நிம்மி விளாசி தள்ளிடுவாடா” – ராஜா

தொலைவில் நிர்மலா வருவதை பார்த்த அவர்களின் பேச்சு அடங்கியது. ஜெகன் தன் யமஹாவை உதைக்க பில்லியனில் தொற்றினாள் நிர்மலா.

“ஏன் டல்லா இருக்கீங்க?” – நிர்மலா

“ஒண்ணுமில்லையே!” இது ஜெகனின் மழுப்பலான பதில்.

“உண்மையைச் சொல்லுங்க. உங்க பிரண்ட்ஸ் உங்களை கிண்டல் பண்ணினதால தான இப்படி இருக்கிறீங்க? பரவாயில்லை. இப்ப படிக்கிறப்ப படிச்சிட்டு பின்னால நல்லா என்ஜாய் பண்ணலாம். கலர் பார்க்கிறதிலயும், தம் அடிக்கிறதுலயும், தியேட்டர்ல இடம் பிடிக்கிறதிலயும் உங்க நேரத்தை வேஸ்ட் ஆகிறது நான் விரும்பல.

“அண்ணா! இப்போ நல்லா படிச்சி முன்னேறி அப்புறம் என்ஜாய் பண்ணிக்கலாம். ஓகே.” என்று தன் நீண்ட பிரசங்கத்தை முடித்தாள் அந்த அன்புத் தங்கை.

– மு.அருண்