ஆதலால் அன்பு செய்வீர்! – கதை

தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி.

பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார்.

“சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாம சைலண்டா இருக்கியே?”

“என்ன கேட்ட?”

“சரியாப் போச்சு போ, நான் என்ன கேட்டன்னு தெரியாமத்தான் உட்கார்ந்து இருக்கியா? இல்ல,காதுல விழாத மாதிரி நடிக்கிறயா?”

“இல்லடா, நான் ஏதோ யோசனையா இருந்திட்டேன், பரவாயில்ல அதைப்பத்தி பேசறதுக்கு என்ன?”

“இருக்கு”

“வேறு ஏதாச்சும் இருந்தா பேசு”

“நீ பேச்சை மாத்தாதடா, உன் பொண்டாட்டி இருந்தா இந்த விஷயத்துல நான் தலையிட மாட்டேன், எல்லாத்தையும் அவ பார்த்துக்குவா, அவ இல்லாத குறைக்கு நான் இப்ப திண்டாடறேன்.

பால்ய கால சிநேகிதனை அப்படியே விட மனசில்ல, அதான் திரும்ப திரும்ப கேட்கிறேன்,

உன் ரிடையர்மென்ட் பணத்தை எல்லாம் என்ன செய்யப் போற? மழுப்பாம எனக்கு பதிலைச் சொல்லு.”

ஒரு நிமிடம் அமைதியாக இருந்த சிவராமன், பின் நிதானமாக பதில் அளித்தார்.

“அந்தப் பணத்தை என் ரெண்டு பசங்களுக்கும் பிரிச்சிக் கொடுத்திடப் போறேன்.”

“பிரிச்சிக் கொடுத்திட்டு நீ பிச்சை எடுக்கப் போறயா?” கோபத்துடன் இரைந்தார் கந்தசாமி.

“என்னடா இப்படி கோவப்படுற? எனக்குதான் மாசப் பென்ஷன் வருதில்ல?”

“அதை மட்டும் வச்சிட்டு என்னடா பண்றது? வயசான காலத்துல உடம்புக்கு முடியாம போச்சின்னா என்ன பண்ணுவ? அதைப்பத்தி எல்லாம் யோசிச்சியா நீ?

ஊர், உலகத்துல புள்ளைங்கல்லாம் எப்படி இருக்காங்கன்றாவது உனக்கு தெரியுமா? நம்மகிட்ட காசு, பணம் இருக்கற வரைதான் புள்ளைங்க நம்பள சுத்தி வருவாங்க, எல்லாமே அவங்க கைக்கு போயிடிச்சின்னா நம்பள திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்க, இப்ப இருக்கிற காலம் பொல்லாதது, புரிஞ்சிக்க,”

சிவராமன், அவர் பேசுவதைக்கேட்டு அமைதியாக இருக்க, பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தார் கந்தசாமி.

“இவ்ளோ ஏன்? நான் உன்னை விட வசதியானவன். தோப்பு, துறவு, வீடுன்னு சகல வசதிகளும் இருக்கு, ஆனா எல்லாமே என் பேர்லதான் இருக்கு. யாருக்கும் பிரிச்சிக் கொடுக்கல.

பசங்கள படிக்க வெச்சிட்டோம். கை நிறைய சம்பாதிக்கிறாங்க அப்புறம் என்ன? போன வாரம் கூட என் பொண்ணும், பையனும் ஊர்ல இருந்து வந்தாங்க,

‘விளைச்சல் இல்லாம கிடக்கிற நிலத்தை வித்து தரீங்களா? அவசரமா எங்களுக்கு தேவைப்படுதுன்னாங்க,’

‘சீ, தூர ஓடிப்போ,’ அப்படின்னு சொல்லிட்டேன். என் காலத்துக்கு அப்புறமா தான் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.

நான் உசிரோட இருக்கற வரை என் சொத்து என் பேர்லதான் இருக்கும். எதையும் இப்ப விக்கமாட்டேன்னு அடிச்சு சொல்லிட்டேன்.”

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சிவராமன், “இந்த விஷயத்துல நம்ம ரெண்டு பேரோட கருத்தும் வேற வேற, அதான் இதைப்பத்தி பேச வேணாம்னு பார்த்தேன்” என்றார்.

விடாப்பிடியாக கந்தசாமி, “சரி அப்படியாவது சொல்லேன், உன் கருத்தை” என்றதும், சிவராமன் நிதானமாக ஆரம்பித்தார்.

“நம்ம பசங்க சின்னக் குழந்தைகளாக பேசத் தெரியாம, விவரமே புரியாத வயசில இருக்கும்போது, நாம அவங்களுக்கு விதம்விதமா டிரெஸ் போட்டு அழகு பார்க்கிறோம்.

அவங்களுக்கு புதுத்துணின்னு, பழையதுணின்னு ஏதாச்சும் தெரியப் போவுதா என்ன? புது டிரெஸ் எதுக்கு வீண்செலவு? பழசே போட்டு கிடக்கட்டும்னு அப்படியே விட்டுறமா?

இல்லையே, புதுசு புதுசா டிரெஸ் போட்டு அழகு பார்க்கிறோம்தானே, நீயும் அப்படி இருந்திருக்க, உன் பிள்ளைங்களை அப்படி ஆசையாத்தான் வளர்த்திருக்க.

இல்லன்னு மட்டும் சொல்லாத, அந்த குழந்தைங்க வளர்ந்து இன்னைக்கு பெரியவங்களாயிட்டாங்கன்றதால, நம்ம குழந்தைங்க இல்லைன்னு ஆயிடுமா சொல்லு?

அன்னைக்கு டிரெஸ் போட்டு அழகு பார்த்தோம். இன்னைக்கு பணத்தைக் கொடுத்து அவங்க வசதியா வாழற வாழ்க்கையைப் பார்த்து ஆனந்தபடுவோமே!

நம்ம காலம் முடிஞ்ச பிறகுதான் அந்தப் பணம் அவங்களுக்கு கிடைக்கும்னா, அவங்க நம்பள பார்க்குற பார்வை எப்படி இருக்கும்னு சொல்லு?

நான் என்ன சொல்ல வரேன்னா, நாம வாழற காலத்துலயே நம்ம பசங்களுக்கு கொடுத்து, அவங்க வளர்ச்சியை நாம ரசிக்கலாமே,

நாம ஒண்ணும் கடன்பட்டு தரல, நம்மகிட்ட இருக்கிற பணத்தை கொடுக்கிறோம்,

அவங்க வாழ்க்கையை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு போறது நமக்கும் பெருமைதானே.

நம்ம காலம் முடிஞ்ச பிறகுதான் அவங்களுக்கு போகணும்னா, அதனால என்ன லாபம்னு நினைக்கிற?

என்னைப்பொருத்தவரைக்கும் என்னோட லாபம்னு நான் நினைக்கறது என் கண் முன்னாடி என் பசங்க நல்லபடியா வாழணும். அதுமட்டும்தான்.”

கேட்டுக்கொண்டிருந்த கந்தசாமி புன்னகையுடன் “சரிடா, நீ இப்படி எல்லாம் பேசுவன்னு எனக்கு தெரியும். உன் மனசு மொத்தமும் எனக்கு புரியும், ஆனா அது புரிய வேண்டியவங்களுக்கு புரியணும்னுதான் இந்த விவாதத்தையே ஏற்படுத்தினேன்” என்றதும்

அவரை புரியாமல் பார்த்த சிவராமன், “யாருக்கு புரியணும்னு சொல்ற?” என்றார்.

“உன் பசங்க நேத்து ஊர்ல இருந்து வந்தாங்க இல்ல, எங்க அவங்கள கூப்பிடு,”

“அவங்க பிரெண்ட்ஸை பார்க்க போறதா சொல்லிட்டு இப்பதான் கிளம்பினாங்க,”

“அப்படியா, இரு நான் அவங்களை கூப்பிடறேன்” என்று உள்ளறையைப் பார்த்தவாறு குரல் எழுப்பினார் கந்தசாமி.

“டேய், அருள், விவேக் இங்க வாங்க” என்றதும், உள்ளறையிலிருந்து வெளிப்பட்டனர் சிவராமனின் இரு மகன்களும்.

அவர்களை அங்கே எதிர்பாராத சிவராமன் சின்ன அதிர்ச்சியோடு இருந்தார். அதைக் கண்ணுற்ற கந்தசாமி முகத்தில் தேங்கிய சிரிப்போடு பேசத் தொடங்கினார்.

“என்னடா ஆச்சர்யமா இருக்கா, பிரெண்ட்ஸை பார்க்கப்போன பசங்க இப்ப எப்படி இங்க இருக்காங்கன்னு பார்க்கிறயா? நான்தான் இந்த ஏற்பாட்டினைப் பண்ணேன்.

உன்னைப் பத்தி முழுசா எனக்குத் தெரியும். ஆனா உன் புள்ளைங்க எந்த அளவுக்கு உன்னை புரிஞ்சிகிட்டு இருக்காங்கன்னு எனக்குத் தெரியல.

உன்னோட மனசை அவங்க புரிஞ்சிகிட்டாங்கன்னா எந்த நிலையிலும் அவங்க உன்னை கைவிடமாட்டாங்கன்னுதான் இந்த மாதிரி பண்ணேன்” என்று சொன்ன கந்தசாமி, அருளையும், விவேக்கையும் ஏறிட்டார்.

“பசங்களா, அப்பா என்ன சொன்னாருன்னு கேட்டீங்கதானே? என்றதும், அருள் முன்னதாக வந்து நின்றான்.

“ஸாரி மாமா, நான் சொல்றத தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ், அப்பாவைப் பத்தி எங்களுக்கு நல்லா தெரியும்.

உங்க ஏற்பாட்டுக்கு நாங்க ஏன் ஒத்துக்கிட்டோம்னா, அப்பாவோட ஆத்மார்த்தமான நண்பர் நீங்க, அவரோட எதிர்பார்ப்பு ஆசை என்னங்கறதைப் பத்தி உங்ககிட்ட பேசுவாருன்னுதான் நாங்க எதிர்பார்த்தோம்.

நேரிடையாவே பலமுறை நாங்க கேட்டுப் பார்த்துட்டோம். உங்களைத் தவிர எனக்கு வேறு எதுவுமே இல்லப்பான்னுதான் சொல்வார்.

ஆனா இப்ப உங்ககிட்ட அதைப்பத்தி ஏதாவது சொல்வார், அவரோட ஆசை என்னங்கிறத தெரிஞ்சிகிட்டு அதை நிறைவேத்தலாம் என்கிற நப்பாசையிலதான் நானும் தம்பியும் உங்க ஏற்பாட்டுக்கு ஒத்துகிட்டோம்.

ஆனா நாங்க ஏமாந்துட்டோம் மாமா, எங்க கிட்ட சொன்னதத்தான் உங்ககிட்டயும் சொல்றார்” என்று சொன்னதும், கந்தசாமி ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒருசேரப் பெற்றார்.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலப்பா. உங்கப்பாவோட மனசில உள்ளதை அவர் வாயாலயே சொல்லி நீங்க தெரிஞ்சிகிட்டு, அவருக்கேத்த மாதிரி நீங்க மாறணும்னுதான் மறைஞ்சி நின்னு உங்கப்பா பேசறத கேட்கச் சொன்னேன்.

ஆனா அதுக்கு அவசியமே இல்லன்றத நீங்க புரியவெச்சீட்டீங்க. உங்களுள்ள புரிதல் ஏற்படுத்தணும்னு நான் பார்த்தேன்.

ஆனா எனக்குத்தான் பிள்ளைங்களைப் பத்திய புரிதல் தேவைன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன்.

இப்பவே என் பையன் பெண்ணைப் பார்த்து அவங்க தேவையைக் கேட்டு பூர்த்தி செய்யணும்” மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தவரை, உள்ளம் நிறைந்து பார்த்துக் கொண்டிருந்தார் சிவராமன்.

அங்கே அனைவரின் நெஞ்சங்களும் அன்பினால் நிறைந்திருந்தன.

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.