அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்

அக்ஞே
அக்ஞே

அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள் அழகானவை. வாசகர்களுக்கு அலாதியான அனுபவம் தருபவை.

தமிழ் கவிஞர் பீ.மு.அபிபுல்லாவும் (B.M. Abibullah),  இந்தி கவிஞர் ச‌ச்சிதானந்த் ஹீரானந்த் வாஸ்த்யாயன் அக்ஞேயும் (Sachithananda Hiranand Vastyayan Agne)  ஒரே வயதினரோ ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்களோ அல்ல.

எனினும் அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள் ஒருமித்த தன்மை உடையனவாகவும், கவிப்பொருளில் ஒற்றுமை உடையனவாகவும் காணப் பெறுகின்றன.

இருவரின் புனைப் பெயர்களை ஒப்பிடும் போது கூட, ஆழ்ந்த ஞானம், நிரந்தரமானது என்ற பொருளில் வருகின்றது. ‘இன்றைக்கும் கூடே’(அபி),‘ஆழ்ந்த ஞானம்’ (அக்ஞேய்) என்ற குறியீட்டின் (Symbol) அடிப்படையில் அமைந்துள்ளன.

இருவருடைய கவிதைகளிலும் அத்வைதவாதம், இரகசியவாதம், சத்தியத்தை ஆராய்வது, தன்னுணர்வு, அகம்வாதம், கணநேர உணர்வு, இருத்தல், பாலியல் மனோதத்துவம் ஆகியவை தென்படுகின்றன.

கவிதைகளில் ஒரே மாதிரியான வேகமும், சக்தியும் இளையோடுகின்றன. இருவருக்கும் முன் காணப் பெறும் கவிதைத் தொனிகளை (நடை) மாற்றியமைத்து, புதிய தொனியில் இருவரும் காவியங்களைப் (கவிதை) படைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால் இவற்றை ‘நூதனக் கவிதைகள்’ என்றும் ‘ நவீனத்தில் தீவிரமான’ (Ultra Morden) கவிதைகள் என்றும் கூறுவதற்குத் தகுதியுடையவை எனலாம்.

 

அக்ஞேய் பல்வேறு இடங்களில் வாழ்ந்து, கல்வியும் இலக்கியப் பணியும் செய்திருக்கின்றார். உதகை, இலக்னோ, சென்னை கிறித்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். அதன் பிறகு சிறந்த பேச்சாளராகவும், பேராசிரியராகவும் விளங்கினார். இவர் 1987-இல் மறைந்தார்.

இவருடைய இலக்கியப் படைப்புக்களாக நாவல், சிறுகதை, கட்டுரை, பயண இலக்கியம், கவிதை ஆகியவை உள்ளன. அதோடு பல நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார். இவருடைய “கித்னி நாவோம் மே கித்னி பார்” (எத்தனை படகுகளில் எத்தனை முறை) என்ற கவிதை நூலுக்கு ‘ஞானபீடப்பரிசு’ பெற்று இருக்கின்றார். இவர் இந்தி இலக்கியக் கவிதை உலகில் ‘நூதனக் கவிதையின் தந்தை’ என்றழைக்கப் பெறுகின்றார். நூதனக் கவிதையைப் ‘பிரயோக வாதம்’ என்பர்.

‘தாரஸப்தக் தூஸரா சப்தக்’ திஸராசப்தக் ஆகியவற்றை உருவாக்கியவர். பக்னதூது. சிந்தா இத்யலம், இந்திரதனு, ரௌவுதே ஹயே யே, அரிவோ கருணா பிரபாமை, ஆங்கண் கே பார் துவார், பகலே மை ஸன்னாட்டா புன்தாஹீம் மகாவிருட் கே நீட்சே ஆகியவை முக்கியக் கவிதைகளாகும்.

 

கவிஞர் அபியின் கட்டுரைகளும். கவிதைகளும் ஒளிவட்டத்துடன் பிரகாசம் செய்வதை உணர முடிகின்றது.

கவிஞர் அப்துல்ரகுமானால் ‘மௌனத்தின் பிரச்சாரகன்’ என்றழைக்கப் பெறுகின்றார். சிறந்த பேராசிரியராகவும் விளங்கினார். பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுவில் உயர் பதவிகளை வகித்தவர். திரு.இராமசாமி நினைவு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயத்தில் செயலராகப் பணிபுரிந்தவர்

.‘வானம்பாடி’ இயக்கத்தினர் காலத்தில் தனித்துப் புதுமை இலக்கியத்தை எழுதியவர். இவரின் படைப்புக்களாக ‘மௌனத்தின் நாவுகள்’, ‘என்ற ஒன்று’, ‘அந்தர நடை’ ‘அபி கவிதைகள் தொகுப்பு’ ஆகியவை வெளிவந்துள்ளன.

அபியும், அக்ஞேயும் ‘கவிதைகள்’ குறித்து எழுதிய கட்டுரை, கவிதைகள், ‘இலக்கியம்’ குறித்து எழுதிய கட்டுரை ஒரே தொனியைப் பெற்றிருக்கின்றன.

 

கவிதை வெளிப்படும் தன்மையும், கவிதை நோக்கமும் முற்றிலும் கவிஞனையே சார்ந்தவை. வாசகர்கள் இதை உணர்ந்து கொண்டு அனுபவிக்க வேண்டும் என்பது இருவரின் கவிதைக் கோட்பாடாகவே உள்ளன. அதை அவர்களின் கவிதைகளில் இனம் காண முடிகின்றது.

 

கவிஞர் அபி தன் கவிதையில்

“உங்கள் நாக்குகளை நான்-

கொலம்பசின் திசைகாட்டி முள்ளினால்

செய்யவில்லை

கண்டுபிடிக்க அல்ல

காட்டிக் கொள்ளவே

உங்களை நான் அனுப்புவது” (முத்திரைகள்)

என்கின்றார்.

 

அதே போல் அக்ஞேய்,

“நான் கவிஞன்

நூதனமானவன்: புதுமையானவன்,

காவிய த்வங்களைத் தேடி நான் செல்லவில்லை

ஆசைப்படுகிறேன் தாங்கள் எனது

ஒவ்வொரு வார்த்தையும்

அலசிப்பார்க்கவும் – ஆனால் நகல்கள்

தாங்களாகவே உணர்ந்து கொள்ளவும்”

(அறிஓ க்ருணா பிரபாமை)

எனக் கூறுகின்றார்.

 

இருவரின் கவிதைகளிலும் இரகசியவாதமும் சத்தியத்தை ஆராய்தலும், அத்வைதவாதமும் அதிகம் தென்படுகின்றன. ஆத்மாவும், பரமாத்மாவும் இணைப்பதும், பிரம்மத்தைப் பற்றியும், உருவமில்லாத மெய்ப்பொருளைப் பற்றியும் கவிதைகளில் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள்.

சத்தியத்தைத் தேடுவது பிரம்மத்தைத் தேடுவதற்கு ஒப்பாகும். சத்-இயம்-சத்தியம். ‘சத்’ என்றால் மெய்ப்பொருள், நிரந்தமான பரப்பிரம்மம், ‘இயம்’ என்றால் அது சார்ந்தது. அபியின் ‘பிரிவினை’ எனும் கவிதையில்,

“மேலும் மேலும்

உருவம் சுமந்து

போகிறாய்.

உன்னைப் பிரித்து விலக்கிக் கொண்டே

உன்னைத் தேடி

உன் தவம் மட்டும் உடன்வரப்

போகிறாய்” (அந்தர நடை)

என்கின்றார். இந்து சமயத் தத்துவமும், கீதையில் கூறியுள்ள கர்மயோகமும், மோட்சத்தைப் பற்றியும் இதற்குள் காண முடிகின்றது.

வியர்த்தம், உளவாளிகள், காற்று ஆகிய கவிதைகளில் இரகசிய வாதமும், சத்தியத்தை ஆராய்வதும் வெளிப்படையாகவே தெரிய வருகின்றது.

அக்ஞேய் எழுதிய அனைத்துக் கவிதைகளும் இரகசியவாதத்தைச் சுற்றியே அமைந்துள்ளன. இவரது கவிதைச்சிந்தனை அநேக சமயங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் எடுக்கப் பெற்றுள்ளன. அபியின் சிந்தனையும் இதைச் சார்ந்ததாகவே உள்ளது.

அக்ஞேய் தன் கவிதை ஒன்றில்,

“நான் உன்னைத் தேடி வருகின்றேன்

ஓ, எனது சின்னஞ்சிறு சோதியே

எத்தனை தடவைத் தீரனாகச் சோர்வடைந்து

நான் மட்டும்.

ஓ. எனது புரியாத சத்தியமே

எத்தனை முறை…..”

(கித்னி நாவோம் மே கித்னி பார்)

என்கின்றார்.

 

அபியின் உள்முகப்பார்வை அல்லது பிரம்மத்தைத் தேடுதல் இந்தி பக்தி இலக்கிய ‘சூஃபி’ கவிஞர்களைப் போலவே அமைந்துள்ளது. அதிகமான குறியீடுகளின் மூலமாக இத்தன்மையை வெளிப்படுத்துகின்றார்.

இருவரின் தேடுதல் வேட்டை (கவிதைப் பொருள்) ஒரே மாதிரியாக இருப்பது பெரும் வியப்பாகும். ‘அபி’யின் ‘நாதம்’ என்ற கவிதையிலும் அக்ஞேய்-ன் ‘அசாத்திய வீணை’ என்ற கவிதையிலும் இந்த ஒருமித்த தேடுதல் வெளிப்படுகிறது.

“நாத அலை எனக்

கற்பிதம் கொண்டு

கரையோரங்களில்

தேடுகிறாய்

நாதம்

அலைபாய்வதெப்படி

இருப்பது அது

அலைவதென்று” (என்ற ஒன்று)

என்று அபியும்.

“கேட்கிறேன் நான்

இந்தச் சுரம். இந்த நாதம்

என்னுள் என்னுள்ளாகவே

காற்றைப் போல் நாதமாக நான் உயிர்த்தெழுகின்றேன்

நானில்லை: இல்லை நான்: எங்குமில்லை

ஓ. விருட்சமே: ஓ. கானகமே: ஓ நாதத்தின்

கூட்டுத் தொகையே: நாதத்தின் ஞபாகமே

அலைகின்றேன் அலைகின்றேன்

எங்கிங்கோ அலைகின்றேன்” (அசாத்திய வீணை)

என்றுஅக்ஞேயும் எழுதியுள்ளனர்.

 

மீனைக் குறியீடாக வைத்து இரகசியவாதத்தை இருவருமே வெளிப்படுத்தியுள்ளனர். அக்ஞேய்னுடைய முக்கியமான குறியீடு மீனாகும். இந்த உலகில் வாழ்வதும், பிரம்மத்துடன் இலயிப்பதுமாக இருப்பதை விளக்குகிறது.

“காலைக் கடித்துப் போகும் மீன் குஞ்சுகள்” (நாதம்) என அபியும் இக்குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளார். மீன் துள்ளுகிறது, கடித்துப் போகிறது. குதூகலமாக இருப்பது எல்லாம் முக்தி தேடுவதற்கே.

தத்துவார்த்த நிலைகளில் பௌத்த தத்துவத்தின் வெளிப்பாடான “சூன்யவாதத்தையும், மௌனவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு இருவரின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. அபியின் நிசப்தமும், மௌனமும், ‘வயதும்’ அக்ஞேயின் ‘அசாத்திய வீணை’யிலும் இந்நிலை வெளிப்படுகின்றது.

தன்னுணர்வுக் கவிதைகளாக உள்ள இவைகள் அத்வைதத்தின் மூலமந்திரமான ‘அகம் ப்ரம்மாஸ்மி’யைச் சார்ந்துள்ளன. தன்னைத் தேடுவதும், தனிமனிதத் தத்துவத்தையும், தனிமனிதப் பாதுகாப்பையும் கொண்டு கவிதைகள் எழுதப்படுகின்றன.

‘வடிவங்கள்’ என்ற கவிதையில் அபி ‘குறிப்பிட்ட தேடல்’ செய்கின்றார். ‘அடையாளம்’ என்ற கவிதையில்,

“என்னுள்

புதர் விலக்கித் துருவிக்

கண்டுபிடித்ததென்ன, உன்

சிதறல்களேயன்றி

கிடைத்ததேனா

ஏது எனக்கு

அடையாளம் ஏது” (அடையாளம்)

இவ்வாறு தேடியிருக்கி;ன்றார்.

அக்ஞேய்.

“நான் ஆற்றின் பாய்ச்சலில் இருக்கின்றேன்

அந்த நிலையான சக்தியையும்

அதைப்பற்றியும் கண்டுபிடிக்க ஆசைப்படுகின்றேன்

இலயிக்க ஆசைப்படுகின்றேன்

அது………. எனக்கு

என்னுள் இருக்கின்றது” (இத்யலம்)

என விளக்குகின்றார்.

 

உளவியலறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கண்டுபிடிப்பாக ‘பாலியல் வாதமும்’, T.H லாரன்ஸின் பாலியல் கொள்கையும் இருவரின் கவிதைகளிலும் கூட்டாகப் பரிணமிக்கின்றன.

அபியின் ‘கிலு கிலுப்பை’ கவிதை இதை அடிப்படையாகக் கொண்டது. பாலியல் குறியீட்டின் மூலமாக ஒரு மகத்துவம் வாய்ந்த செய்தியைக் கூறியுள்ளார். இதில் ஹிரோஷிமாவில் நடந்த துயரச் சம்பத்தின் உண்மையான சித்திரத்தை, “உள் எங்கும் – கதிர்கள் நனைந்து – நுனி மழுங்கிச் சுருண்டன” என்கின்றார்.

இது போலவே அக்ஞேய் தன்னுடைய ஹிரோஷிமா என்ற கவிதையில் அந்த நகரத்தின் நாசத்தை விவரிக்கின்றார்.

“ அந்தத் திசையெங்கிலும்

காலச சூரியனின் இரதங்களால்

அந்தப் புவி துண்டாகப் பாய்ந்து

பறந்தது” (ஹிரோஷிமா)

 

அபியும் அக்ஞேயும் கவிதைகளில் மொழியின் பிரயோகத்தை மிக ஆழமாகப் படைத்துள்ளனர். வார்த்தைகளுக்கு மீறித் தருவது இவர்கள் கவிதைகளின் முக்கியமான ஒற்றுமையாகும்.

குறியீடுகளும், படிமங்களும் ஒரே மாதிரியாக இருவரின் கவிதைகளில் காணப்படுவது கூறத் தக்கதாகும்.

அபியையும், அக்ஞேயையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வெவ்வேறு தளங்களிலிருந்து (Place) வாழ்ந்து பணி செய்திருந்தாலும் இருவரின் சிந்தனைகளும் கவிதை நடையும், கவிதையின் உத்தேசமும் ஒரே பாணியில் அமைந்திருப்பது அதிசயமாகும்.

தி.சிவப்பிரகாஷ்

தி.சிவப்பிரகாஷ். எம்.ஏ.,எம்ஃபில்.
இந்தித் துறைப் பேராசிரியர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஊட்டி
9445278449

 

2 Replies to “அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்”

  1. கவிஞர் அபி, தமிழ்க் கவிதை உலகில் மாபெரும் நவீனத்தைப் பரவலாக்கியவர்; படிமக் கவிதைகளின் பிதாமகர் எனப் பெயர் பெற்றவர். அவரைத் தமிழ் இலக்கிய வரலாறு மெளனத்தின் பிரச்சாரகன் என்று பதிவு செய்து வைத்துள்ளது. அவரின் கவிதைகள் இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்தப்பட வேண்டும். அவர் உலக இலக்கியவாதிகளோடு ஒப்பிட்டுப் பேசப்பட வேண்டியவர். அந்தளவில் எழுத்தாளர் சிவப்பிரகாஷ் அருமையாக இக்கட்டுரையில் இந்திக் கவிஞர் ஆக்ஞேயுடன் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதியிருப்பது மிகவும் அற்புதமாக இருக்கிறது. வாழ்த்துகள் சிவப்பிரகாஷ்.
    நல்ல திறனாய்வு.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.