அருமன் வாயு – வளியின் குரல் 6

“காலை வணக்கம் மனிதர்களே!

ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் மனித சமூகத்தை எண்ணிய போது தான், இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று எனக்குள் ஒரு உந்தல் ஏற்பட்டது.

ஆம், அன்றொரு நாள், ஒரு நகரத்தின் பிரதான மேம்பாலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலையிலும் மாலையிலும் சரி, எண்ணிலடங்கா வாகனங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தன.

இரவிலும் வாகனங்கள் ஒளிர்ந்தபடி சென்றுக் கொண்டிருந்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.

இரவைக் காட்டிலும் பகலில் ஓடிக்கொண்டிருந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் என்றே நினைக்கிறேன். இது பற்றி என்னை விட உங்களுக்கு நன்கு தெரியுமே.

இம்… இதை சொல்லியே ஆக வேண்டும். இரவில் மேலிருந்து பார்க்கும்போது, நகரமே வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தை பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்துக் கொண்டே இருக்கிறீர்கள். நாங்களும் அப்படித்தான். இயங்கிக் கொண்டே இருப்போம். அத்தோடு, வினையிலும் ஈடுபடுவோம்.

என்ன புரியவில்லையா?

இரும்பும் நீரும் ஒருசேர இருந்தால் போதும். உடனே ஆக்சிஜன் வாயு அவற்றுடன் வினைபட்டு இரும்பை இரும்பு ஆக்சைடாக, அதாவது துருவாக மாற்றி விடும். இது உங்கள் அனைவருக்கும் தெரியும் தானே?

இம்ம்.. நீங்கள் வெள்ளியினால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி இருக்கிறீர்களா? அவற்றை புதிதாக வாங்கும் போது பளபளப்புடன் இருக்கும் அல்லவா?

ஆனால், காலப்போக்கில் அவை தன் பொலிவை இழந்துவிடும் தானே? அதற்கு காரணம் ஹைட்ரஜன் சல்பைடு வாயு தான்.

அதாவது வெள்ளியுடன் வளிமண்டலத்தில் மிச்சிறு செறிவில் இருந்தாலும், ஹைட்ரஜன் சல்பைடு வாயு வினைபட்டு வெள்ளி சல்பைடை உருவாக்கும்.

இதற்கு தூய வெள்ளி போன்று வெண்னிறமே, பளபளப்பு தன்மையோ கிடையாது. அதனால் தான் நாளடைவில் வெள்ளி மங்குகிறது.

ஆனால் எல்லா வாயுக்களும் வினையில் ஈடுபடுவதில்லை. சில வாயுக்கள் இருக்கின்றன. அவை அரிதிலும் அரிதாகவே வினையில் ஈடுபடும்.

அதுவும் மனிதர்களின் முயற்சியால் தான். அவற்றை அருமன் வாயுக்கள் என்று அழைப்பர். ஆங்கிலத்தில் noble gases என அழைக்கிறார்கள்.

அருமன் வாயுக்கள் திட்ட நிலைமைகளில் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற மற்றும் எரியாத தன்மை கொண்ட வாயுக்கள் ஆகும்.

″வாயுக்கள்″ என்று பன்மையில் தானே நான் கூறினேன்? ஆம், அப்படி தான் நான் பேசினேன் என்று நினைக்கிறேன். அது சரி தான். ஏனெனில் அருமன் வாயுக்கள் ஆறு ஆகும்.

இயற்கையில் ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான், மற்றும் இரேடான் ஆகியவை இருக்கின்றன. இவையே அருமன் வாயுக்கள் ஆகும். வளிமண்டலத்தில் இவற்றின் செறிவு மிகவும் குறைவு தான்.

சரி, உங்களுக்கு எப்படி இந்த வாயுக்கள் கிடைக்கிறது தெரியுமா?

பகுதிபடக் காய்ச்சி வடித்தல் மற்றும் வாயுக்களின் திரவமாக்கல் முறைகள் மூலம் தான்.

குறிப்பாக நியான், ஆர்கான், கிரிப்டான் மற்றும் செனான் ஆகியவை, இம்முறைகளிலேயே காற்றில் இருந்து பெறப்படுகின்றன.

ஹீலியமோ மீக்குளிர்வியல் வாயு பிரிப்பு தொழிநுட்பம் மூலம், இயற்கை வாயு வயல்களில் இருந்து பெறப்படுகிறது.

ரேடான் பொதுவாக ரேடியம், தோரியம் அல்லது யுரேனியம் சேர்மங்களின் கதிரியக்கச் சிதைவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

இப்பொழுது மனித இனத்திற்கு வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன்.

‘எதற்கு?’ என்கிறீர்களா?

இயற்கையில் இல்லாத புதிய அருமன் வாயுவை கண்டுபிடித்ததற்கு தான்.

ஓகனேசன் (Oganesson) எனும் அதிக கதிரியக்கத் தன்மை கொண்ட செயற்கை வாயு பற்றி தான் சொல்கிறேன். இதனையும் அருமன் வாயுவாக தானே நீங்கள் கருதுகிறீர்கள்.

அருமன் வாயுக்களை ″அரிதான வாயுக்கள்″ என்றும் அழைப்பதுண்டு. அதாவது Nobel gas-ஐ rare gas-என்றும் அழைக்கிறார்கள்.

ஆனால் இது துல்லியமான சொல்லாடலாக நான் கருதவில்லை. ஏன் தெரியுமா?

பூமியின் வளிமண்டலத்தில் ஆர்கான் வாயு கணிசமான அளவு உருவாகுகிறது. பிறகு எப்படி அருமன் வாயுக்களை அரிதான வாயுக்கள் என்று அழைக்க முடியும்?

அருமன் வாயுக்கள் வினையில் ஈடுபட மாட்டார்கள் என்றேன். ஒருவேளை அருமன் வாயுக்கள் என் மீது வருத்தம் கொள்ளலாம். இல்லை இல்லை, எனது நண்பர்கள் என்னை எப்படி கோபித்துக் கொள்வார்கள்?

நான் பேசியது கேட்டு என்னிடம் வந்து சண்டையிடும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. ஏனெனில் அவர்கள் எல்லோருக்கும் நன்மைகள் செய்பவர்கள்.

என்ன நன்மை என்கிறீர்களா?

நிச்சயம் சொல்கிறேன்.

ஏற்கனவே சொன்னேனே, அருமன் வாயுக்கள் மற்ற பொருட்களுடன் வினைபுரியாத் தன்மை கொண்டிருப்பதால் எங்கெல்லாம் வேதிவினைகள் தவிர்க்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, சூடான டங்ஸ்டன் இழை ஆக்ஸிஜனேற்றப்படுவதைத் தடுக்க ஒளிரும் விளக்குகளில் ஆர்கான் பயன்படுத்தப்படுகிறது.

ஆழ்கடல் தாவுதலில் ஈடுபடுவோர் பயன்படுத்தும் சுவாசிக்கும் வாயுவில் ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது.

ஹீலியம், திரவங்களில் குறிப்பாக லிப்பிடுகளில் குறைந்த கரைதிறன் கொண்டிருப்பதே இதற்கு காரணம்.

ஆழ்கடல் நீச்சலுக்கான டிரைசூடில் (drysuit) ஆர்கான் வாயு பயன்படுத்தப்படுகிறது.

இவை மட்டும் தானா? இல்லை இன்னும் பயன்கள் இருக்கின்றன.

அணு உலைகளிலும் ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது.

செனான் வாயு, அயனி இயந்திரங்களில் (ion engines) பயன்படுத்தப்படுகிறது.

அருமன் வாயுக்கள் மிகக் குறைந்த கொதிநிலை மற்றும் உருகுநிலையைக் கொண்டிருப்பதால், அவை கிரையோஜெனிக் குளிர்பதனப் பொருட்களாகப் பயன்படுத்துகின்றன.

குறிப்பாக, −268.95 °C இல் கொதிக்கும் திரவ ஹீலியம் அணு காந்த ஒத்ததிர்வு படிமவியல் சாதனத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இன்னும் சில அருமன் வாயுக்கள் மருத்துவத்தில் நேரடியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆமாம். மருத்துவ படிமவியலில் செனான் பயன்படுகிறது. கதிரியக்க சிகிச்சையில் ரேடான் பயன்படுத்தப்படுகிறது.

இதை கவனித்தீர்களா? வேலை செய்யாவிட்டாலும், அதாவது வினையில் பெருமளவு ஈடுபடாவிட்டாலும், அருமன் வாயுக்கள் பல வழிகளிலும் உங்களுக்கு பயன்படுகின்றன.

அப்படியெனில் ஓயாது உழைக்கும் மனிதர்களும் பிறருக்கு நன்மைகள் பல செய்வீர்கள் தானே?

இல்லை இல்லை, மனிதர்களுக்கு மட்டும் அல்ல! புவியில் இருக்கும் மற்ற உயிரினங்களுக்கும், ஏன் உயிரற்றவைகளுக்கும் நன்மை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

எனது நம்பிக்கை மெய் தானே?

(குரல் ஒலிக்கும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.