அர்ஜுனா விருது

அர்ஜுனா விருது இந்திய அரசால் இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தோர்க்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருது மகாபாரதக் கதையில் வரும் சிறந்த வில்வித்தை வீரனான அர்ச்சுனனின் பெயரால் வழங்கப்படுகிறது.

அர்ஜுனா விருது தனிநபர் மற்றும் குழு விளையாட்டில் இடம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது 1961-ல் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்விருது மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவ்விருது ஒரு பாராட்டுச் சுருள், அலங்கார உடை, அர்ச்சுனனின் வெண்கலச் சிலை மற்றும் பணமுடிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பணமுடிப்பானது  ஐந்து இலட்சங்கள் ஆகும்.

இவ்விருதிற்கான பரிந்துரைப்போர் பட்டியல் விருது வழங்கும் குழுவினரிடம் ஒவ்வொரு வருடமும் மே 31-க்குள் வழங்கப்பட வேண்டும்.

இதுவரையிலும் சுமார் 707 விளையாட்டு வீரர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். வில்வித்தை, தடகளம், சிறகுப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, பில்லியட்ஸ் மற்றும் ஸ்நூக்கர், குத்துச்சண்டை, சதுரங்கம், கேரம், கிரிக்கெட், சைக்கிள் பந்தயம், குதிரைச் சவ்வாரி, கால்பந்து, கோல்ப், ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, ஜூடோ, கபடி, டென்னிஸ், ஸ்கேட்டிங், படகுப்பந்தயம், போலோ, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல் போட்டி, டேபிள் டென்னிஸ், கைப்பந்து, மல்யுத்தம், பளுத்தூக்குதல், யாட்சிங்  போன்ற விளையாட்டுகளுக்கு இதுவரையிலும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர்கள்  குருபச்சன்சிங், நாண்டு நட்கார் ரான்வர், சர்பிர்த் சிங், பட்டி சோஸா, மானுல் ஆரான், சலீம் துரானி, பி.கே.பானர்ஜி, பி.ஜி.சேத்தி, சியாம்லால், பிரித்திபால் சிங், இராமநாதன் கிருஷ்ணன், பிரேம் சிங், கர்னிசிங், ஜாம் பாஜாராங்கி பிரசாத், ஜே.சி.வகோரா, ஏ.பழனிச்சாமி, ஏ.என்.கோஸ், உதய்சந்த் ஆவார்.

இவர்கள் முறையே தடகளம், சிறகுப்பந்தாட்டம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சதுரங்கம், கிரிக்கெட், கால்பந்து, கோல்ப், ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, டென்னிஸ், போலோ, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், கைப்பந்து, பளுத்தூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுக்களுக்காக இவ்விருதினைப் பெற்றனர்.

 

இவ்விருது வழங்குவதற்கு உள்ள நியதிகள்

முதலில் இவ்விருது தேசிய விளையாட்டுகளில் சாதனை புரிந்தோர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. பின் 2001-ல் இவ்விருதிற்கான விதிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டன.

இவ்விருதிற்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்களின் நான்காண்டு கண்கவர் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளானது விருது வழங்கும் ஆண்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் விளையாட்டு வீரர்களின் தலைமைப்பண்பு, விளையாட்டுத்திறன், ஒழுக்கம் ஆகியவையும் கூர்ந்தாய்வு செய்யப்படும்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் என்பவை ஒலிம்பிக் போட்டிகள், ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், உலக விளையாட்டுப் போட்டிகள், உலகக் கோப்பைப் போட்டிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகள் மற்றும் கிரிக்கெட் ஆகியவை ஆகும்.

மேலும் இந்தியாவின் சுதேச விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஊனமுற்றோருக்கான போட்டிகள் ஆகியவற்றிற்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.

சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு இயக்கத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதாக ஏற்பட்ட குற்றசாட்டுகளுக்கான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பவர்களும், தண்டனை பெற்றவர்களும் இவ்விருதினை பெறுவதற்கு தகுதியற்றோர் ஆவர்.

இவ்விருதினை ஒரு விளையாட்டுவீரர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பெற இயலும்.

இவ்விருது ஒருவரின் இறப்புக்குப் பின்னரும் வழங்கப்படலாம்.
இவ்விருது வழங்கும் விழாவின்போது விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் மட்டுமே விருதினை வாங்க இயலும். விருது வழங்கும் விழாவிற்கு வரவியலாத தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கான விருது இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரால் பின்னர் வழங்கப்படும்.

இவ்விருதிற்கான விதிமுறைகளை இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மட்டுமே தளர்வு செய்ய இயலும். ஆனால் விதி தளர்விற்கான தகுந்த காரணங்கள் எழுத்துப்பூர்வமாக அமைச்சரால் தெரிவிக்கப்பட வேண்டும்.

 

இவ்விருதிற்கான பரிந்துரைகள்

இவ்விருதிற்கான பரிந்துரைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம், விளையாட்டு மேம்பாடு மற்றும் கட்டுப்பாட்டு வாரியங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆகியோர்களிடமிருந்து பெறப்படுகின்றன.

மேற்கூறியவர்கள் ஒவ்வொரு வருடமும் ஒரே விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியான விளையாட்டு வீரர்கள் மூன்று நபர்கள் வரை மட்டுமே பரிந்துரை செய்ய இயலும்.

அனைத்திந்திய ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு குழு, போலீஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு குழு, இந்திய கடற்படை விளையாட்டு கட்டுபாட்டுக்குழு, இந்திய தரைப்படை விளையாட்டு கட்டுபாட்டுக்குழு மற்றும் இந்திய விமானப்படை விளையாட்டு கட்டுபாட்டுக்குழு ஆகியவை ஒவ்வொரு வருடமும் ஒரே விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியான விளையாட்டு வீரர்கள் ஐந்து நபர்கள் வரை பரிந்துரை செய்யலாம்.

கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்ய இயலும்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை ஏற்கனவே பெற்றுள்ள விளையாட்டு வீரரும் தன்விளையாட்டுப்பிரிவைச் சேர்ந்த தகுதியான ஒரு விளையாட்டு வீரரை பரிந்துரைக்கலாம்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஒவ்வொரு வருடமும் தகுதியான மூன்று விளையாட்டு வீரர்களைப் பரிந்துரை செய்யலாம்.

 

இவ்விருதிற்கான தேர்வு முறை

இவ்விருதிற்கான பரிந்துரைகள் அனைத்தும் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.

பின் விளையாட்டு ஆணையத்தின் துணைச் செயலாளர்/இயக்குநர் மற்றும் இணை செயலாளர், இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால் சரிபார்த்து பரிசோதிக்கப்படும்.

பின் சரியான பரிந்துரைகள் இந்திய அரசினால் அமைக்கப்பட்ட பன்னிரெண்டு நபர்கள் அடங்கிய தேர்வுக்குழுவினருக்கு அனுப்பப்படும். இக்குழுவில் ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு நபர் மட்டுமே இடம் பெறுவர்.

தேர்வுக்குழு உறுப்பினர்களின் விவரம்

1. இந்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் 1

2. ஒலிம்பிக்கில் பங்கேற்றோர் 5

3. அர்ஜூனா விருது பெற்றவர்கள் (வெவ்வேறு விளையாட்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்) 4

4. விளையாட்டு நிர்வாகி 2

மொத்தம் 12

 

1961-ல் இவ்விருது வழங்கும் வழக்கம் நடைமுறைபடுத்தப்பட்டது தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பெயரினை இந்திய இளைஞர்நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கும்.

பின் விருதானது குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது.

ஒரு வருடத்தில் அதிகபட்சம் 15 நபர்களுக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்விதி சிலநேரங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தளர்த்தப்படுகிறது. இதுவரையிலும் அதிகபட்சமாக தடகளத்திற்கு 95 அர்ச்சுனா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

– வ.முனீஸ்வரன்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.