அறிவியலும் ஆக்க வேலைகளும்

அறிவியலும் ஆக்க வேலைகளும் என்ற கட்டுரை, அறிவியல் எவ்வாறு நமது வசதியான வாழ்க்கைக்கு உதவுகின்றது என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

அறிவுடையார் ஆவது அறிவார் என்பார் திருவள்ளுவர்.

அறிவின் ஆற்றலால் நினைத்தவற்றை முறையாக நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்பு மக்களிடையே பெருகி வருகிறது.

நிலவை வலம் வரவும் கோள்களுக்குச் சென்று வரவும் முடிகின்ற‌ இக்காலத்தில் ‘எங்கெங்கும் காணினும் சக்தியடா’ என்று பாவேந்தர் பறைசாற்றியவாறு அறிவியலின் ஆற்றல் ஏற்றமும் காண்கிறோம்.

எண்ணமும் எழுச்சியும்

நீரில் நீந்திச் செல்லும் மீனை நோக்கி கப்பல்களையும், வானில் பறந்து செல்லும் பறவைகளைப் பார்த்து விண் ஊர்திகளையும் அறிஞர் பெருமக்கள் உருவாக்கினர்.

விண்ணிலும் மண்ணிலும் தண்ணீரிலும் அறிவியலின் ஆற்றல் தழைத்தோங்கி வருகிறது. மின் ஆற்றலால் எல்லாச் செயல்களும் இன்றைக்கு எளிதாக உள்ளன.

உணவைக் காக்கவும் நோயினை நீக்கவும் புத்துலகை ஆக்கவும் அறிவியல் வித்தகர்க‌ள் புத்தம் புதுக் கண்டுபிடிப்புகளை நாளும் நல்கி வருகின்றனர்.

துறைதோறும் அறிவியலின் சாதனைகள் பெரிதும் பயன் விளைத்து வருகின்றன.

போக்கும் வரவும்

மேட்டிலும், காட்டிலும் வாழ்ந்த மனிதன் நாட்டிலும் நகரிலும் வாழ்ந்திடத் தக்க வகையில் அறிவியல் வளர்ந்துள்ளது. கால் நடையாகவும், கட்டை வண்டியில் கடந்து இடர்ப்பட்ட மனிதன் உந்துகளில் ஊர்திகளிலும் உலகை வலம் வருகிறான்.

தொலைவு என்ற மலைப்பு நீக்கி 1000 கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளும் இன்றைக்கு அடுத்த ஊர்கள் போன்று தோன்றுகின்றன.

சாலை அமைப்பிற்குச் சூளைக் கற்களும் சிமிண்ட்டும் பயன்படுவதற்குப் பதிலாக நெகிழித் தகடுகள் படுத்தப்படுகின்றன.

தொடர் வண்டிகளில் நிலக்கரிக்குப் பதிலாக மின் ஆற்றலைக் கொண்டு வேகம் கூட்டப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்தில் எரிபொருளைக் குறைத்து மக்கள் எண்ணிக்கையைக் கூட்ட முனைத்துள்ளனர். அணுவின் ஆற்றலால் விசைக் கப்பல்களை இயக்க அறிந்துள்ளனர்.

உழவும் தொழிலும்

உழவுக்கும் தொழிலுக்கும் அறிவியல் உறுதுணை புரிந்து வருகிறது. நிலத்தை உழுவதற்கும், விதை இடுவதற்கும், கூட்டுறவு முறையை நாடுவதற்கும் வேளாண்மைப் பண்ணைகள் பெருகுவதற்கும் ஆண்டுக்கு மூன்று போகம் விளைவதற்கும் அறிவியல் உறுதுணை புரிகிறது.

இயந்திரங்களின் உதவியால் ஆழ்கிணறுகளைத் தோண்டி நீர் நிலைகளைச் சீராக்கி பசுமைப் புரட்சியினைக் காண முடிகிறது. பயிர் விளைச்சல் பெருக்கப்பட்டுள்ளது.

பூச்சிக் கொல்லி மருந்துகளும், சேமிப்புக் கிடங்குகளும் விளைபயிரை நீண்ட நாட்கள் பயன்படுத்தத் தூண்டுகின்றன. மணிப் பொருளை இயக்க அம்மோனியா அணுக்கள் பயன்படுகின்றன.

போரும் சீரும்

போர்த்துறையிலும் அறிவியல் ஏற்றம் பெற்று வருகிறது. அணுகுண்டுகளும் நீரகக்குண்டுகளும் பழங்காலப் படைக்கருவிகளைச் செயலிழக்கச் செய்துள்ளன.

இரண்டாம் உலகப்போரில் சப்பானைச் சேர்ந்த கிரோசிமா, நாகசாகி ஆகிய இடங்களில் அணுகுண்டுகளால் நேர்ந்த அழிவினை கண்டு, உலக நாடுகள் அணுவை ஆக்கப்பணிகளுக்குப் பயன்படுத்த விழைந்துள்ளன.

அணுவின் ஆற்றலால் பல்வேறு சாதனைகள் பெருகிடக் காண்கிறோம்.

அணுசக்திக் கருவிகளை இழுவண்டிகளில் அமைத்து பெருமளவில் மின்னாற்றல் பெற இய‌லும். ஆப்பிரிக்காப் பாலைவனம் அறிவியலின் துணையால் எழிற்சோலையாக இலங்கும்.

பாலைவனம் சோலைவனமாகவும், பசுங்கிளிகள் அங்கிருந்து பாடவும் அறிவியல் பெருந்துணை புரியும்.

தகவல் புரட்சி

உள்ளங்கையில் உலகம் என்பதை இன்றைய தகவல் புரட்சி சாத்தியப்படுத்தி விட்டது.

எல்லோருடைய கைகளிலும் ஒரு நவீன அலைபேசி உள்ளது. அது அவருக்கு

உலகம் முழுவதும் பேசக்கூடிய‌ தொலைபேசியாக இருக்கின்றது;

எந்நேரமும் பொழுது போக்கை அள்ளித் தருகின்றது;

அவரது வங்கியாகச் செயல்படுகின்றது;

பேருந்து / இரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்கின்றது;

பல மென்பொருட்கள் மூலம் கணக்கில்லாத சேவைகளை வழங்குகின்றது.

 

செயற்கைக் கோள்களின் உதவியாக ஒலிம்பிய விளையாட்டுக்களைத் தொலைக்காட்சி வாயிலாகக் கண்டு மகிழ்கிறோம்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை யின்மை பழி.

என்னும் வள்ளுவர் கொள்கைக்கு ஏற்பச் சொல் சிறக்கவும் செம்மை பிறக்கவும் பணியாற்றுவது அறிஞர் கடமை.

அறிவியலும் ஆக்க வேலைகளும் இன்று பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

– S.ஆஷா

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.