அழகிய மோகினி – சிறுகதை

இரவு 12 மணி.

சன்னாநல்லூரில் இருந்து நாகப்பட்டினத்திற்கு சுந்தரராமன் பஸ் வந்து கொண்டிருந்தது.

அதுதான் அந்த ஊருக்கு கடைசி பஸ் என்பதால் அவ்வளவாக கூட்டம் கிடையாது. விரலை விட்டு எண்ணினால் ஒரு பத்து பேர் தான் இருப்பார்கள். பஸ் திருமருகலை தாண்டி வந்து கொண்டிருந்தது.

அடுத்த ஸ்டாப் சீயாத்தமங்கை நெருங்குவதை உணர்ந்த குமரன் தன் ஹேண்ட் பேக்கையும் சூட்கேசையும் எடுத்துக் கொண்டு வண்டி நின்றதும் இறங்கி வேக வேகமாக நடந்தான்.

சிறிது தூரம் சென்றதும் அந்த ரோட்டில் இருந்து மண் ரோடு பிரிந்தது. அந்த ரோட்டின் முனையில் ஒரு போஸ்ட்மரத்தின் வெளிச்சத்தில் நின்றான்.

அருகில் இருந்த சுமைதாங்கி கல்லின் மேல்தன் சூட்கேசையும் பேக்கையும் வைத்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.

கண்ணு கெட்டிய தொலைவில் யாரும் இருப்பதாக தென்படவில்லை. அவன் இறங்கி வந்த பஸ் ஸ்டாப்பில் தான் யாரோ இரண்டு பேர் நிற்பது போல் தெரிந்தது. மற்றபடி ஊரே அடங்கி போயிற்று.

அந்த மண் ரோட்டில் நான்கு கிலோமீட்டர் நடந்து போனால் மானாம்பேட்டை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்திற்கு தான் குமரன் செல்ல வேண்டும்.

அதுதான் குமரனின் பழகிய ஊர் தான் என்றாலும் கும்மிருட்டு; மெலிதாய் நிலவின் ஒளி. சுற்றிலும் ‘பச்சை பசேல்’ வயல்வெளிகள் இருட்டாகவே காட்சியளித்தன.

வயல்வெளிகள் என்பதால் பனி பொழிவு அதிகமாக இருந்தது. குமரனுக்கு குளிரில் உடம்பு நடுங்கியது. இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்றாக தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டான்.

‘அப்பா என்ன குளிரு? இந்த நேரத்தில் அருகில் ஒரு டீக்கடை இருந்து அங்கே போய் சூடா ஒரு கப் டீ குடித்தால் எப்படி இருக்கும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சுமைதாங்கி கல்லின் மேல் உள்ள சூட்கேஸை திறந்து, அதிலிருந்த பனிக்குல்லாவை எடுத்து மாட்டிக் கொண்டு புறப்பட்டான்.

குமரன் சென்னையில் டிப்ளமோ படித்து முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான்.

பாதை நீண்டு கொண்டு போனது. வாலிபன் என்பதால் ஒரு வேகத்தில் ‘விடுவிடு’ என்று ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்திருப்பான்.

அதற்கு மேல் ஸ்ட்ரீட் லைன் வெளிச்சம் கண்ணுக்கட்டிய தொலைவில் தென்படவில்லை. எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு.

மங்கிய நிலவின் வெளிச்சத்தில் மண் ரோடு பாதை மட்டும் தெரிந்தது. தூரத்தில் எங்கோ ஊளை சத்தம் கேட்டது. நாய்களோ நரிகளோ தெரியவில்லை ஊளையிட்டுக் கொண்டிருந்தன.

குமரன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு மொபைலை எடுத்து லைட்டை ஆன் செய்து வெளிச்சத்தை துணைக்கு வரவழைத்துக் கொண்டு நடந்தான்.

அவனுக்குப் பின்னால் சிறிது தூரத்தில் இருந்து கொலுசு சத்தம் கேட்கத் தொடங்க குமரனுக்கு மேலும் பயம் பற்றிக் கொண்டது.

பயத்தில் நடையை எட்டிப் போட்டான். கொலுசின் சத்தமும் வேகமாக தன் அருகே ஓடி வருவதை போல் கேட்டது .

‘டக்கென்று திரும்பிப் பார்க்காமல் நின்றான். சத்தமும் நின்றது. மெல்ல அடி எடுத்து வைத்தான். கொலுசின் சத்தமும் தொடர ஆரம்பித்தது.

குமரனால் எதையும் யூகிக்க முடியவில்லை. தன் சிறுவயதில் தாத்தா ஈச்சமரத்தில் மோகினி இருப்பதாக சொன்ன கதைகளும், அவன் பார்த்த திகில் திரைப்படங்கள் எல்லாம் நினைவுக்கு வர, அந்த கடும் பனியின் குளிரிலும் வேர்த்து கொட்டியது.

அவன் அருகில் இருந்த வயலின் வரப்பில் ஏதோ கருப்பாக நின்று இருப்பது போல் தோன்றியது. அதையே உற்று யாராக இருக்கும் என்று பார்த்துக் கொண்டிருந்த போது ‘தொப்’ என்று ஒரு சத்தம்.

சட்டென்று திரும்பிய குமரனுக்கு அருகில் யாருமே இல்லை. ரோட்டின் ஓரத்தில் ஒரே ஒரு பனைமரம் மட்டும்தான் நின்று கொண்டிருந்தது.

இந்த கலவரத்தில் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த கொலுசு சத்தமும் காணாமல் போயிருக்க, அதற்கு மேல் அங்கு நிற்காமல் குமரன் தன் குல தெய்வங்களின் பெயர்களை உச்சரித்துக் கொண்டே வேக வேகமாக நடக்க,
மறுபடியும் கொலுசின் சத்தம் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்தது.

சிறிது தூரத்தில் ஸ்ட்ரீட் லைன் வெளிச்சம் கண்ணில் பட உயிர் போய் உயிர் வந்ததை போல் உணர்ந்த குமரன் நாலு கால் பாச்சலில் போஸ்ட் மரத்தின் அருகே போய் நின்று திரும்பி பார்த்தான்.

குமரனுக்கு பின்னால் ஒலித்துக் கொண்டிருந்த கொலுசின் சத்தம் நின்று போயிருந்தது. யாரையும் காணவில்லை.

முகத்தை துடைத்துக் கொண்டு சற்று நேரம் நின்று பார்த்து விட்டு ஊருக்குள் நடந்தான் குமரன்…

மறுநாள் காலை 7 மணி.

குமரன் வீட்டின் அருகே உள்ள தெருவுக்கு பொதுவான குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடிக்கும் பெண்களின் சத்தத்திற்கு நடுவில் அம்மாவின் குரல் கேட்டு, கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தான் குமரன் .

பைப்பில் நின்றிருந்த பெண் பிள்ளையிடம், “ஆமாம் ரோஹினி, இது யாரு புதுசா இருக்கு?” என்று குமரனின் அம்மா கேட்டார்.

“இவங்க எனக்கு அக்கா முறை. இவங்களுக்கு மாப்பிள்ளைகுப்பம் தான் ஊரு. என் பெரியம்மாவும் ஊர்வசி அக்காவும் நேத்து நைட்டு கடைசி பஸ்ல தான் வந்தாங்க.” என்று பதில் கூறினாள் ரோகிணி.

“ஓ! இவ பேரு ஊர்வசியா? பரவாயில்லை பெயருக்கு ஏத்த மாதிரி நல்ல அம்சமா, அழகா தான் இருக்கிறா. நம்ம ஊர்லயும் பேரு வைக்கிறாங்க பாரு. ஊர்வசி நல்ல பேரு” என்று குமரனின் அம்மா சொன்னார்.

அதனைக் கேட்ட இருவரும் கலகலவென்று சிரித்துக் கொண்டே தான் பிடித்து வைத்து இருந்த தண்ணீர் குடத்தை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்தனர்.

நேற்று இரவு கேட்ட கொலுசு சத்தம், இப்போது கேட்க தொடங்கியதும் குமரனுக்கு புரிந்து போயிற்று.

‘அப்போ நேற்று இரவு நமக்கு பின்னால் கேட்ட கொலுசு சத்தம் இவளுடையது தான். இருவரும் பெண்கள், இரவு நேரம் என்பதனால் நம்பள கொஞ்ச தூரம் நடக்க வைத்து பின்னாலேயே நடந்து வந்திருக்கிறார்கள்’ என்று குமரன் புரிந்து கொண்டான்.

அம்மா தண்ணீர் குடத்துடன் வீட்டிற்கு உள்ளே வரும்போது குமரன் துண்டை எடுத்து தோளில் போட்டு கொண்டு வெளியே வந்தான்.

“அம்மா நான் குளத்துக்கு போயிட்டு வரேன்.”

“சரிப்பா பார்த்து போயிட்டு வா”

“ஆமாம் அப்பா எங்கம்மா? காலையிலேயே எங்க போயிட்டாரு?”

“வயலுக்கு தான்பா. இன்னைக்கு ஆளுக எல்லாம் களை எடுக்க வராங்களாம். அதான் காலையிலேயே போயிட்டாரு.”

“சரி ச.ரி நான் அப்படியே அப்பாவையும் பார்த்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டான் குமரன்.

செல்லும் பாதையில் இரவு நடந்த நிகழ்வுகளை யோசித்துக் கொண்டே நடை போட்டான்.

குளத்திற்கு வந்ததும் குளத்தின் மதகில் துண்டையும் சோப் டப்பாவையும் வைத்துவிட்டு இரவு வந்த திசையை நோக்கி நடந்தான். வயல்வெளியை அடைந்தான்.

சுற்றும் முற்றும் பார்த்தான். ‘நேற்று இரவு இந்த வரப்பில் தான் யாரோ நிற்பது போல் தோன்றியது’ என்று நிமிர்ந்து பார்த்தான்.

அந்த வரப்பில் காக்காய்களை விரட்ட ஒரு சோலை கொள்ளை பொம்மை நின்று கொண்டிருந்தது. அதன் முழுக்கை சட்டையில் வைக்கோல் இல்லாததால் காற்றில் கை பறந்து இருக்கிறது. அதனால்தான் நகர்வது போல் தோன்றியிருக்கிறது.

‘சரி நமக்குப் பின்னால் ‘தொப்’ என்று சத்தம் கேட்டதே’ என்று எண்ணியபடி திரும்பினான். பின்னால் ஒற்றை பனை மரம் நின்று கொண்டிருந்தது.

அதனை சுற்றி நோட்டமிட்டான். பனை மரத்தின் அடியில் பனம்பழங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை .

‘ஓ! இதுதான் நேற்று இரவு கீழே விழுந்ததா?’ என்று எண்ணியபடி அதையும் கையில் எடுத்துக் கொண்டு நடக்க, குமரனின் அப்பா எதிர்ப்பட்டார்.

அவர் சைக்கிளை நிறுத்திவிட்டு “என்னப்பா. இங்க என்ன செய்யற?” என்று கேட்டார்.

“ஒன்னும் இல்லப்பா. அம்மா நீங்க வயலுக்கு போய் இருக்கிறதா சொன்னாங்க. அதான் வயலை பார்த்துட்டு போறப்போ குளிச்சிட்டு போகலாம் என்று வந்தேன்.”

“சரி சரிப்பா. நீ படிச்ச புள்ள. ரொம்ப நேரம் வயல்ல நிக்காம நீ உன் வேலையை போய் பாரு. நான் வயலை பார்த்துக்கிறேன். காலையில களை பறிக்க ஆளுங்க எல்லாம் வந்தாங்க. இன்னும் அவங்களுக்கு ஒரு டீ வாங்கி கொடுக்கல. நான் போய் டீ வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறி சென்றார்.

குமரன் சிறிது நேரம் வயலை நோட்டமிட்டான்.

காலை வெயில் ‘சுள்’ என்று உரைக்க, அங்கிருந்து கிளம்பி குளக்கரைக்கு வந்தான்.

குளத்தில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

குமரன் அருகில் இருந்த ஒரு மரத்தின் அடியில் போய் உட்கார்ந்தான். இளம் வயது பெண்கள் சிட்டுகளாய் பறந்து குதித்து கும்மாளம் போட்டு கொண்டு இருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் அல்லிபூக்களுக்கு நடுவே ஒரு தாமரைப் பூவை போல மலர்ந்து இருந்தாள் ஊர்வசி.

நல்ல அழகு. மா நிறம். கூட்டுப் புருவம். மெலிந்த தேகம். கார்முகிலை போல் கரும் கூந்தல். தண்ணீரில் இருந்து எழுகின்ற நிலவைப் போல் அவள் முகம். காந்த கருவிழிகள்.

இதுவரையில் அப்படி ஒரு அழகை இந்த ஊரில் கண்டதே இல்லை. அதற்கு மேல் குமரனால் அவள் அழகை வர்ணிக்கவே முடியவில்லை.

அவள் கண்களைப் பார்த்த இவன் விழிகள் தடுமாறின. இவனால் மேற்கொண்டு பார்க்க முடியவில்லை.

தன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு செல்போனை வெளியே எடுத்து உயிர்பித்து, அவளின் உருவத்தை கண்ட அவன் கற்பனையை கலந்து கவிதை எழுத ஆரம்பித்து விட்டான்.

சிறிது நேரம் கழித்து “அக்கா வா போகலாம். ரொம்ப நேரம் ஆயிடுச்சு. அப்படியே வரப்போ எனக்கு ரெண்டு அல்லிப்பூ பிச்சிட்டு வந்து தறியா” என்று ரோகிணி அக்கா ஊர்வசியிடம் கேட்டாள்.

“ம்…ம் .இதோ வந்துட்டேன்” என்று அல்லி பூவுடன் வந்தாள் ஊர்வசி.

இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர்.

கொலுசின் சத்தம் கேட்டு சுய உணர்வுக்கு வந்த குமரன் குளத்தில் இறங்கினான்.

சாயந்தரம் நான்கு மணி.

குமரன் தன் ஊர் நண்பர்களுடன் தன் வீட்டிற்கு எதிரில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது “அக்கா சீக்கிரம் வா. பஸ் போயிட போகுது” என்று சொல்லிக் கொண்டு ரோகிணி தன் அக்கா ஊர்வசி, பெரியம்மா இருவரையும் அழைத்துக் கொண்டு வேகமாக சாலையில் இறங்கி நடந்தாள்.

ஊர்வசி குனிந்த தலை நிமிராமல் பின்னே நடந்தாள். குமரனுக்கு அதற்கு மேல் விளையாட பிடிக்கவில்லை. தன் கையில் உள்ள பேட்டைநண்பர்கள் கையில் கொடுத்துவிட்டு ஊர்வசியின் கால் கொலுசின் சத்தத்தை பின் தொடர்ந்தான்.

குளம் வரை பின் தொடர்ந்து வந்தவன் அதற்கு மேல் பின் தொடராமல் குளத்தின் மதகில் ஏறி உட்கார்ந்து, ஊர்வசி சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தான்.

கொலுசின் சத்தம் மெலிதாய் தேய்ந்து மறைய, குமரன் தன் செல்போனில் கவிதை எழுதத் தொடங்கினான்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.