அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?

அவரைக்காய் பொரியல் அருமையான தொட்டுக் கறி ஆகும்.

அவரைக்காய் இதயத்திற்கு நலமானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.

இனி சுவையான அவரைக்காய் பொரியல் பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

அவரைக்காய் – 200 கிராம்

தேங்காய் – 1/4 மூடி (மீடியம் சைஸ்)

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 1 1/2 குழிக்கரண்டி அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 4 எண்ணம்

உளுந்தம் பருப்பு – 1 1/2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 2 எண்ணம்

கடுகு – 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

அவரைக்காய் பொரியல் செய்முறை

முதலில் அவரைக் காயை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் அவரைக் காயை படத்தில் காட்டியபடி பொடியாக நறுக்கவும்.

 

நறுக்கிய அவரைக்காய் துண்டுகள்
நறுக்கிய அவரைக்காய் துண்டுகள்

 

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அவரைக்காய் துண்டுகள், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.

பாத்திரத்தை மூடி போட்டு மூடி வைக்கவும்.

 

தண்ணீர், உப்பு சேர்த்த அவரைக்காய் கலவை
தண்ணீர், உப்பு சேர்த்த அவரைக்காய் கலவை

 

அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.

தண்ணீர் முழுவதும் வற்றியதும் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

 

 அடுப்பில் இருந்து அவரைக்காய் இறக்கியதும்
அடுப்பில் இருந்து அவரைக்காய் இறக்கியதும்

 

வாணலியை அடுப்பில் ஏற்றி நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்க்கவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

கடுகு வெடித்ததும் அதில் வேக வைத்த அவரைக் காயை கொட்டி நன்கு கிளறவும்.

 

தாளிதத்துடன் அவரைக்காயைச் சேர்த்ததும்
தாளிதத்துடன் அவரைக்காயைச் சேர்த்ததும்

 

அவரைக் காயின் தண்ணீர் வற்றியதும் அடுப்பினை அணைத்து விடவும்.

 

தேங்காய் சேர்க்க தயார் நிலையில் அவரைக்காய்
தேங்காய் சேர்க்க தயார் நிலையில் அவரைக்காய்

 

பின்னர்  துருவிய‌ தேங்காயைச் சேர்த்து ஒருசேர கிளறவும்.

 

தேங்காய் சேர்க்கும்போது
தேங்காய் சேர்க்கும்போது

 

தேங்காய் சேர்த்து ஒருசேரக் கிளறியதும்
தேங்காய் சேர்த்து ஒருசேரக் கிளறியதும்

 

சுவையான அவரைக்காய் பொரியல் தயார்.

 

சுவையான அவரைக்காய் பொரியல்
சுவையான அவரைக்காய் பொரியல்

 

இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட சாத வகைகளுடன் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தேங்காய் துருவல் சேர்க்காமலும் பொரியல் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்து பொரியல் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.