அவளின் நினைவு

கோடை மழை கோபத்தோடு குமுறிப்பெய்யுது – இங்க
கோழிகூட சேவலோட கொஞ்சம் ஒதுங்குது
வாடையில மனுசஉசுரு கோழிபோல அடையுது – இப்ப
வஞ்சி உன்னைத் தேடித்தேடி என்மனசு வாடுது

ஊரையெல்லாம் மழைவிரட்டி ஓடஓட வைக்குது – தன்
உறவுக்கென்று ஒரு துணையை அதுவும் தேடுது
கூரைவழி விழும்மழையும் குடத்துக்குள்ள விழுகுது – அது
கொஞ்சும்ஒலி என்மனசில் உன்நெனப்பை தூண்டுது

தரையிலதான் மழைநீரும் தேங்கிக் கிடக்குது – அந்த
தண்ணியில நான்விட்ட கப்பல் மிதக்குது
கரைசேர வழியைத்தேடி அதுவும் அலையுது – அதை
கரைசேர்க்க வேணுமின்னு கண்ணுஉன்னை தேடுது

தேரைதவளை எல்லாமிங்கு தெம்மாங்கு பாடுது – அது
தேடுகின்ற இசையைத்தான் ராக்கோழி கொடுக்குது
பாறைகூட இளகிப்போகும் இந்தப்பாட்டைக் கேட்டு – ஆனா
பாவிமக உன்மனசு இளகுமான்னு தெரியல!

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.