ஆடம்பரத் திருமணங்கள் அவசியமா?

ஆடம்பரத் திருமணங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை சிதைக்கக் கூடியவை. அன்பே இல்வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும்; ஆடம்பரம் அல்ல.

சமீபத்தில் ஒரு நண்பரின் மகளுடைய‌ திருமண வரவேற்பில் கலந்து கொண்டேன்.

நண்பர் ஒரு மருத்துவர். கல்யாண மாப்பிள்ளையும், மணமகளும் மருத்துவர்களே.

பெரிய மண்டபம், பிரமாண்ட மேடை அலங்காரம் மற்றும் பஃபே வகை உணவு முறை.

சிறுவர்களுக்கு பீட்ஸா, ஸ்மைலி, பிரெஞ்ச் ஃப்ரை உள்ளிட்ட சிறப்பு உணவு வகைகள் என தனி கவுண்டர்கள்.

பெரியவர்களுக்கு அசைவத்தில் இறால் பிரியாணி, மட்டன் பிரியாணி, சிக்கன் டிக்கா, கிரில்டு சிக்கன், புல்கா, தோசை என நீளும் உணவு வகைகள். சைவத்திலும் இதற்கு ஈடான உணவு வகைகள் இருந்தன.

ஆறு, ஏழு வயதுக் குழந்தைகள்கூட பீங்கான் தட்டுகளில் நிறைய உணவு வகைகளை வாங்கி நிரப்பி, சிரமப்பட்டு இருக்கைகளுக்கு சுமந்து சென்றனர்.

சிலவற்றை மட்டும் கொரித்துவிட்டு, தட்டுக்களை மேஜை மேல் அப்படியே வைத்துவிட்டு, சிறப்பு உணவு வகைகள் இருந்த கவுண்டரை மொய்த்தனர்.

சுற்றிலும் பார்வையை ஓட விட்டேன்.

பெரியவர்களால் கூட பாதிக்கு மேல் உண்ண முடியாத நிலை. நிறைய தட்டுகளில் வீணான உணவு வகைகளைப் பார்க்க முடிந்தது.

இத்தனை ஐட்டம் இருக்கு. ஆனால் ஒண்ணு கூட சாப்பிடற மாதிரி இல்லை. கறியெல்லாம் கருக்கி, குச்சியில குத்தி சாப்பிடறது நல்லாவா இருக்கு?முகச்சுளிப்புடன் நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் சற்று சத்தமாகவே கூறி விட மனம் துணுக்குற்றது.

இந்த வகை உணவுகள் அவருக்குப் பழக்கமில்லை போலும். எத்தனை பொருட்செலவு, வீணான உணவு வகைகள் எத்தனை என வருத்தமேற்பட்டது எனக்கு.

பொதுவாக பப்பே வகை உணவு முறையில் தட்டு (பிளேட்) கணக்குதான் அளவிடப்படும். எப்படியும் ஒரு பிளேட் ஆயிரம் ரூபாயாவது பெறும் என நினைத்தேன்.

எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி தட்டு வாங்காமல் தங்கள் தட்டிலேயே உணவு வாங்கித் தரலாமே பெற்றோர் என்ற எண்ணம் எழுந்தது என்னுள்.

வந்திருக்கும் விருந்தினர் ‘யாரோ செலவு செய்கிறார்கள்; நாம ஏன் தட்டுக் கணக்கு பார்க்கவேண்டும்’ என நினைத்திருக்கலாம் அல்லது இதைப் பற்றி தெரியாமல் கூட இருக்கலாம்.

மேலும் செலவைப் பற்றி அவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்? அது திருமண வீட்டார் சம்பந்தப்பட்டதல்லவா?

இந்தியத் திருமணங்கள் பணத்தை வாரி இறைத்து நடத்தப்படுகின்றன. ஒருநாள் கூத்துக்கு இத்தனை அமர்க்களம் தேவையா?

கோடிகளை வாரி இறைத்து பெரும் செல்வந்தர்கள் வீட்டுத் திருமணங்கள் நடைபெறுகின்றன. அவர்களுக்கு செலவு ஒரு பொருட்டே அல்ல.

ஏழை எளியோரும் எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி முடித்து விடுகின்றனர். மிடில் கிளாஸ் எனப்படும் மத்தியதர வர்க்கமே நடுவில் கிடந்து அல்லாடுகின்றது.

நான்கு பக்கங்களுக்கு பெரிய காஸ்ட்லியான கல்யாண பத்திரிக்கை, மெகா அலங்கார மண்டபம், ஏகப்பட்ட உணவு வகைகள், ஆபரணங்கள், ஆடை வகைகள், ஈவன்ட் மேனேஜ்மென்ட்காரர்களின் பங்களிப்பு, வந்தவர்களுக்கு பரிசுகள், இசைக் கச்சேரிகள், நடனம் என தடபுடல்படும் உயர்மட்ட மத்திய வர்க்கத் திருமணங்கள்.

திருமணத்தை சிறப்பாக பெரிய அளவில் நடத்தாவிட்டால் உறவினர் நண்பர்கள் முன் கௌரவக் குறைச்சலாக போய்விடும் என்று தீர்மானித்துக் கொண்டு இந்த மத்திய தர வர்க்கம் தன் சக்திக்கு மீறி கடன் வாங்கி அவஸ்தைப்பட்டு திருமணம் நடத்துவது தான் வேதனைக்குரிய விஷயம்.

‘காசுள்ள மகராசன் அள்ளி விடுகிறான். நாம ஏன் கையை சுட்டுக்கணும்?’ எனத் தோன்றாதா அவர்களுக்கு…?

பிள்ளைகள் திருமணத்திற்கு பிஎஃப் லோன் போட்டு, வட்டிக்கு கடன் வாங்கி, திருப்பி கட்ட முடியாமல் தவிக்கும் போது நடந்த ஆடம்பரத் திருமணத்தை நினைத்துப் பார்த்தால் மனம் இனிக்கவா செய்யும்?

‘மற்றவர்கள் தன்னைப் பற்றி குறைவாக நினைத்து விடக்கூடாது. அவர்கள் மதிப்பில் நாம் தரம் தாழ்ந்து போகக் கூடாது’ என்ற நினைப்பு தான் ஆடம்பரத் திருமணங்கள் நடைபெறக் காரணம்.

அதிலும் தேடிப்பிடித்து குற்றம் குறை கண்டுபிடித்து மனம் நோக பேசுபவர்கள் இருக்கும் போது, பிறர் மதிப்பைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

ஆடம்பரத் திருமணங்கள் அவசியம் இல்லை.

பெரிய பொருட்செலவில் திருமணம் நடத்த ஆசைப்படுபவர்கள் அந்தப் பணத்தை அப்படியே மகள் பெயரிலோ மகன் பெயரிலோ வங்கியிலோ, அல்லது நிலையான வைப்பு நிதியிலோ, அஞ்சலகத்திலோ போட்டு வைத்து அவர்களுக்கு வருங்காலத்தில் தேவைப்பட்டால் கொடுத்து உதவலாம். திருமணத்தை எளிமையாக நடத்தலாம்.

கடந்த இரண்டு வருடங்களாக பெருந்தொற்று காரணமாக அரசு விதித்த கட்டுப்பாட்டுக்கிணங்க, பல திருமணங்கள் மிக எளிமையாக குறைந்த பொருட்செலவில் நடத்தப்பட்டது பாராட்டுக்குரிய விஷயம்.

பெருந்தொற்றினால் ஏராளமான தொழில்கள் பாதிப்படைந்து, உற்பத்தி நலிந்து, வேலையிழப்பு, நோய்க்கான சிகிச்சை செலவுகள், குடும்பத்து உறுப்பினர் உயிரிழப்பு என பாதிக்கப்பட்டவர் அனேகம் பேர்.

பெரும் பொருளாதார சிக்கலுக்கு ஆட்பட்டவர்கள் ஏராளம். இதில் முதலாளி, தொழிலாளி என்ற கணக்கில்லை. இது போன்ற எதிர்பாரா சந்தர்ப்பங்களில் கை கொடுப்பது சேமித்து வைத்திருக்கும் பணம் தான்.

தன் வாழ்நாள் சேமிப்பை ஒரு தகப்பன் தன் மகனுக்கோ, மகளுக்கோ ஆடம்பரத் திருமணம் நடத்தி செலவழித்து விட்ட பின், கொரானா காலங்களில் எப்படி தன் குடும்பத்தை நடத்துவார்?

இன்றைய இளைய தலைமுறைக்கு வாழ்கையை இன்றே வாழ்ந்து தீர்த்திட ஆசை; நாளையைப் பற்றி எண்ணம் இல்லை; கவலையும் இல்லை.

எதுவானாலும் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிச்சல் தான் மேலோங்கி நிற்கிறது. எதையும் எதிர்கொள்ள பணம் என்ற பெரிய துணை வேண்டும் என மூத்தவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

பணம் ஒரு பெரிய பக்கபலம் என உணர்த்த வேண்டும். அதற்கு தாங்கள் முன்மாதிரியாக செயல்பட வேண்டும். முக்கியமாக திருமணங்களை எளிமையாக நடத்த வேண்டும்.

திருமணத்தில் இணையப் போகும் இரு உள்ளங்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் இனிய இல்லறத்தை நடத்த வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லித் தர வேண்டுமே அல்லாமல் ஆடம்பரத் திருமணங்களை ஆதரிக்கக் கூடாது.

ஒவ்வொரு முறையும் கொரோனா வந்து தான் நமது நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டுமா என்ன?

மாற்றம் வரவேண்டியது நமது மனதில் அல்லவா?

விஜி ரவி
ஈரோடு

One Reply to “ஆடம்பரத் திருமணங்கள் அவசியமா?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.