ஆட்டுக் கறிக் குழம்பு செய்வது எப்படி?

ஆட்டுக் கறிக் குழம்பு அசைவப் பிரியர்களின் பட்டியலில் முதன்மையானது. மேலும் ஆட்டுக் கறியிலிருந்து சுக்கா, வறுவல் எனப் பல வகைகளைத் தயார் செய்யலாம்.

எளிதான முறையில் சுவையான ஆட்டுக் கறிக் குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி – ½ கிலோ கிராம்

நல்ல எண்ணெய் – 50 மில்லி லிட்டர்

உப்பு – தேவையான அளவு

 

வறுத்து அரைக்க

மல்லி விதை – 4 ஸ்பூன்

சீரகம் – 2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 7 முதல் 8 வரை (எண்ணிக்கையில்)

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

 

தாளிக்க

கடுகு – 1ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

 

செய்முறை

முதலில் ஆட்டுக்கறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பின் அதனை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது நல்ல எண்ணெய் ஊற்றி அதில் மல்லி விதை, சீரகம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு வறுத்துக் கொள்ளவும். பின் மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள மல்லி விதை, சீரகம், மிளகாய் வற்றல், மஞ்சள் பொடி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். தேவையான மசாலா தயார்.

 

ஆட்டுக் கறிக் குழம்பு மசாலா
ஆட்டுக் கறிக் குழம்பு மசாலா

 

பின் குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் வெட்டி வைத்துள்ள ஆட்டுக் கறியைச் சேர்த்து இரண்டு நிமிட நேரம் வதக்கவும்.

பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மீதமுள்ள நல்ல எண்ணெய் ஆகியவற்றைக் கலவையுடன் சேர்க்கவும். பின் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலவை விரவினாற் போல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குக்கரை மூடி விடவும்.

 

அடுப்பில் வேக வைக்கும் போது
அடுப்பில் வேக வைக்கும் போது

 

ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும். இருபது நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். குக்கரிலிருந்து ஆவி வெளியேறியவுடன் குக்கரைத் திறந்து குழம்பை வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். சுவையான ஆட்டுக் கறிக் குழம்பு தயார்.

 

சுவையான ஆட்டுக் கறிக் குழம்பு
சுவையான ஆட்டுக் கறிக் குழம்பு

 

இந்த ஆட்டுக் கறிக் குழம்பை சாதம், சப்பாத்தி, இட்லி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லி விதை, மிளகாய் வற்றல், சீரகம், மஞ்சள்  ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து ஆட்டுக் கறிக் குழம்பிற்கான மசாலா தயார் செய்யலாம்.

காரம் விரும்புபவர்கள் மிளகாய் வற்றலை காரத்திற்கு தக்கவாறு கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆட்டுக்கறி தண்ணீர் விடும் என்பதால் குழம்புக் கலவையை விரவினாற் போல் இருக்கும் அளவிற்கு (அடுப்பில் வைக்கும் முன்) தண்ணீர் சேர்த்தல் போதுமானது.

ஜான்சிராணி வேலாயுதம்

 

 

Comments are closed.