ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் என்ற பழமொழியை மரத்தின் அடியில் இருந்த கூட்டத்தில் பெண் ஒருத்தி கூறுவதை பட்டாம்பூச்சி பார்வதி கேட்டது.

பழமொழி குறித்த விளக்கம் ஏதும் கிடைக்கிறதா என தேனை உறிஞ்சுவதை விட்டுவிட்டு பட்டாம்பூச்சி பார்வதி உற்சாகத்துடன் கவனிக்கலானது.

அப்பொழுது கூட்டத்தில் இருந்த மற்றொரு பெண் “இந்தப் பழமொழி ஏதோ திருமணம் செய்வதற்கு பொய் சொல்வது தவறல்ல; அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரம் பொய் சொல்வது கூட தவறல்ல என்ற பொருளை அல்லவா தருகிறது?” என்று கேட்டாள்.

கூட்டத்தில் இருந்த பெண்களில் வயதான பெண்மணி ஒருவர் “திருமணத்தையும் அதனால் உருவாகும் பந்தத்தையும் நமது நாட்டில் உயர்வாகக் கருதுகிறோம்.” என்றார்.

எனவே தான் ‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’, ‘திருமணம் என்பது ஆயிரங் காலத்து பயிர்’ போன்ற, திருமணம் பற்றிய வாக்கியங்கள் கூறப்படுகின்றன” என்றார் அவர்.

“ஆகையால் திருமணம் செய்வதற்காக பொய் சொல்வதில் தவறில்லை என்று கூறும் பழமொழி எப்படி உருவாகியிருக்க முடியும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்” என்றார் அவர்.

ஒரு திருமணம் என்றால் முதலில் பெண் கேட்டுச் செல்ல வேண்டும். பின்னர் வீடு பார்ப்பது விசாரிக்க வேண்டும்.

அதன்பின் நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும்.

திருமணத்திற்கான நகை மற்றும் துணிமணி வாங்க வேண்டும்.

பின் முகூர்த்தம் பார்த்து திருமணம் முடிக்க வேண்டும்.

இவ்வாறு, திருமணம் நடக்க பல்வேறு காரியங்களுக்காக இரு வீட்டாரும் போய் வந்து இருப்பது அவசியமாகிறது. இதனை வலியுறுத்தவே “ஆயிரம் முறை போய் சொல்லிக் கல்யாணம் செய்ய வேண்டும்” என்ற பழமொழி உருவானது.

ஆனால் இன்றோ உண்மையான பழமொழியில் உள்ள ‘ஆயிரம் முறை போய் சொல்லி’ என்ற சொல் மருவி ‘ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம’ என்று ஆகிவிட்டது.” என்று கூறினார் அந்த வயதான பெண்மணி.

இதனைக் கேட்டவுடன் பட்டாம்பூச்சி பார்வதி மிக்க மகிழ்ச்சியுடன் காட்டினை நோக்கி புறப்பட்டது.

அது காட்டினை அடையும் நேரம் மாலை வேளை ஆகிவிட்டது. வட்டப்பாறையில் எல்லோரும் வழக்கமாகக் கூடியிருந்தனர்.

காக்கை கருங்காலன் கூட்டத்தினரைப் பார்த்து “என் அருமை குஞ்சிகளே, குட்டிகளே, இன்றைக்கான பழமொழியைக் கூறப்போவது யார்?” என கேட்டுக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு அவசரமாக வந்த பட்டாம்பூச்சி “தாத்தா நான் இன்றைக்கான பழமொழியைக் கூறுகிறேன்” என்றது.

“சரி பார்வதி நிதானமாக நீ கேட்டறிந்த பழமொழி பற்றிக் கூறு” என்றது காக்கை கருங்காலன்.

“கூட்டத்தினர் எல்லோருக்கும் வணக்கம். நான் இன்று மலரில் தேனைக் குடித்துக் கொண்டிருக்கும்போது பெண் ஒருத்தி ‘ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்’ என்ற பழமொழியைக் கூறுவதைக் கேட்டேன்.” என்றது.

மயில் மங்கம்மா “பரவாயில்லையே பட்டாம்பூச்சி பார்வதிகூட ஏதோ பழமொழியைக் கேட்டு வந்து சொல்கிறாள். அவள் சொல்வதை தொடர்ந்து கேட்போம்” என்றது.

பட்டாம்பூச்சியும் பழமொழிக்கான விளக்கத்தை வயதான பெண்மணி கூறியவாறே கூறியது.

அதனை கேட்ட முயல் முத்தண்ணன் “ஆயிரம் முறைபோய் சொல்லி கல்யாணம் என்பது ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் என நடைமுறையில் உள்ளது. இதனால் பழமொழியின் அர்த்தமும் மாறிவிட்டது.” என்றது.

காக்கை கருங்காலன் “சபாஷ். பழமொழியும் அதற்கான விளக்கமும் அருமை. உங்களில் பழமொழி கூறாத யாரேனும் ஒருவர் நாளை பழமொழி பற்றிக் கூறுங்கள். இப்பொழுது செல்லுங்கள்” என்று கூறி எல்லோரையும் வழி அனுப்பியது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.