ஆலங்கட்டி – சிறுகதை

அதிகாலை 3 மணி.

“நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது; இந்த வீட்டுக்கு நல்ல காலம் பொறக்குது.

இத்தனை காலம் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு காலம் வரப்போகுது. ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா.

இந்த வீட்டம்மா மனசுல நினைச்சதெல்லாம் நடக்க போகுது.
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது.”

சத்தம் கேட்டு எழுந்தாள் மாலதி.

சத்தம் இல்லாமல் கோடாங்கி சொல்வதை உன்னிப்பாக காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

“இந்த வீட்டில கண்ணனே வந்து அவதரிக்க போறான் தாயி. அவதரிக்க போறான். இத நான் சொல்லல தாயி. ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா” என்று சொல்லிக் கொண்டு நகர,

அதற்கு மேல் மாலதிக்கு உறக்கம் பிடிக்கவில்லை.

தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக அலை அலையாய் வந்து வந்து சென்றன.

இதில் நேற்று இரவு வேறு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிட, ரவி மாலதியை அறைந்தே விட்டான்.

இருவரும் மன வருத்தத்தில் சாப்பிடாமல் படுத்து விட்டனர்.

இதில் கோடாங்கி வேறு இப்படி சொல்லிவிட, மாலதிக்கு அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை.

மாலதி எழுந்து அடுக்களைக்குள் சென்று தன் கணவனுக்கு காப்பியை போட்டு கொண்டு வந்து வைத்துவிட்டு, டேப் ரெக்கார்டரை ஆன் பண்ணி சுப்ரபாதத்தை மெலிதாய் ஒலிக்க விட்டு விட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள்.

ரவி எப்போதும் போல் எழுந்து அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தான்.

அவனுடைய மனைவி மாலதி இன்றும் அவனுக்கு பிடித்த உணவை வேக வேகமாக தயார் செய்து கொண்டு இருந்தாள்.

மாலதிக்கு தன் கணவன் மேல் பிரியம் அதிகம். கணவனுக்கு அடுத்தபடியாக தன் கணவன் வாங்கித் தந்த புல்லாங்குழலுடன் இருக்கும் கிருஷ்ணன் சிலை தான் அவளுக்கு ஆதரவு.

அன்று தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாகவே புறப்பட்டான் ரவி.

இதைப் பார்த்த மனைவி மாலதி “ஏன் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா கிளம்புறீங்க? சமைச்சு முடிச்சிட்டேன். சாப்பிட்டுவிட்டு போங்க” என்றாள்.

“ஆபீசில் கொஞ்சம் வேலை இருக்கு” என்று கூறிவிட்டு கிளம்பினான் ரவி.

“பரவாயில்ல சமைச்சு முடிச்சுட்டேன். கொஞ்சமாவது சாப்பிட்டு விட்டு போங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே வேலை இருக்குதுன்னு சொல்லி இருந்தால் நான் அப்போதே சாப்பாடு வைச்சிருப்பேன்ல்ல. அப்படி என்ன சாப்பிட கூட நேரம் இல்லாத வேலை?”

“எல்லாம் உன்னிடம் சொல்லிட்டு தான் செய்யணுமா? ஆபீஸ்ல ஆயிரம் வேலை இருக்கும். எனக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை.

இதையெல்லாம் உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஒருவேளை சாப்பிடாமல் போனால் ஒன்னும் செத்து விட மாட்டேன்.

நீ போய் சாப்பிட்டுவிட்டு நன்றாக ரெஸ்ட் எடு. நான் போய் ஆபீசுக்கு பக்கத்தில் உள்ள கடையில் ஏதாவது சாப்பிட்டு கொள்கிறேன்” என்று கடுகடுத்த குரலில் சொல்லிவிட்டு விருட்டென்று பைக்கின் ஆக்சிலேட்டரை கொடுக்க, சென்றது பைக்.

மாலதி அதற்கு மேல் நில்லாமல், ரவியின் அறைக்கு சென்றாள். அங்கு டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்த காபி அப்படியே மூடி இருந்தது.

அதைப் பார்த்த மாலதிக்கு கண்கள் கலங்கின. அழுகை பீறிட்டது.

முந்தானை தலைப்பில் கண்களை துடைத்துக்கொண்டு ‘நான் என்ன தவறு செய்தேன். எல்லாம் அந்த கடவுள் செய்த தவறு தானே?

கல்யாணம் முடிச்சு எட்டு வருஷம் ஆச்சு. குழந்தை இல்லை என்பதால் நான் எப்படி என் தவறு என்று ஏற்றுக் கொள்ள முடியும்?

எப்போ பார்த்தாலும் என் மீது கடுகடுவென்று பேசி விழுக வேண்டியது. சரி ஆபீஸில் ஏதேனும் பிரச்சனையாக இருக்கும்.

வெளியிலிருந்து வரும் ஆம்பளை அவங்க கோபத்தை யார் மீது காண்பிப்பாங்க. நம்ம மீது தான் காண்பிப்பாங்க.

அவங்க கோபத்திற்கு நாமே வடிகாலாக இருந்துவிட்டு போவோம் என்று நினைச்சா இவருக்கு காலை வரை கோபம் குறையலையே.

நான் அப்படி என்ன தவறு செய்து விட்டேன்’ என்று நினைத்தபடி டேப் ரெக்கார்டரை ஆப் செய்து விட்டு காப்பியை எடுத்துக் கொண்டு அடுப்படிக்குள் நுழைந்து தானும் சாப்பிடாமல் அப்படியே வைத்துவிட்டு மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

ரவி அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.

அவன் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் தபால் மீது முத்திரை பதிப்பதில் காட்டிக் கொண்டிருந்தான்.

ஆம் அவன் தபால் அலுவலகத்தில் வேலை செய்கிறான். அவனுடைய மனைவி இல்லத்தரசியாக இருக்கிறாள்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். வீட்டில் பெற்றோர்களிடம் காதலுக்கு மரியாதை கிடைக்கவில்லை.

அதனால் பெற்றவரிடம் சண்டை போட்டுவிட்டு தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து வாங்கிக் கொண்டு தனியாக வந்து விட்டான்.

இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் வீட்டில் நிம்மதி சீர்குலைந்து போயிற்று.

ரவியின் மனதில் எண்ண அலைகள் வீசிக் கொண்டிருக்கும் பொழுது, வயதான பெரியவர் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்து அலுவலகத்தின் வாசற்படியில் நிப்பாட்டினார்.

பாத்திர வியாபாரி போல் இருந்தார். வியர்வை சொட்ட சொட்ட தன் மேல் துண்டில் முகத்தை துடைத்தபடி உள்ளே வந்து தனது சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்து மீசையின் மீது வைத்தார். பணம் அவரது வியர்வையில் குளித்திருந்தது.

இதை கண்ட ரவிக்கு ஒரே ஆச்சரியம். ‘இவ்வளவு வயதான காலத்தில் யாருக்காக இப்படி உழைக்கிறார்?’ என்று மனதில் நினைத்தான்.

பின்னர் அவரிடம் “உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் ஐயா? என்று கேட்டான்.

அந்த முதியவர் கடந்த மாதம் பணம் அனுப்பிய ரசீதை காண்பித்து “இதோ இந்த முகவரிக்கு பணம் அனுப்ப வேண்டும்.” என்று கூறி ஒரு கடிதத்தையும் கொடுத்தார்.

அந்த ரசீதை கண்ட ரவிக்கு ஒரே அதிர்ச்சி. அது ஒரு முதியோர் இல்லத்தின் முகவரி.

“நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள்? அங்கு உங்கள் உறவினர் யாரேனும் இருக்கிறார்களா? இல்லை உங்கள் மனைவிக்காகவா?” என்று ரவி பெரியவரிடம் கேட்டான்.

“தம்பி நான் இருக்கும் போது என் மனைவியை அப்படி விட்டு விடுவேனா?” என்று சற்று கம்பீரமாக அந்த முதியவர் சொன்னார்.

“நான் இந்த முதியோர் இல்லத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக பணம் அனுப்புகிறேன். இன்று வரை யாரும் என்னிடம் இந்த கேள்வியை கேட்டதில்லை. முதல் முறையாக நீங்கள் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” என்று சற்று உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவி இன்னமும் என கூடத்தான் இருக்கிறாள். எங்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லை.

என் மனைவிக்கு வாய் பேச முடியாது. அவளுடைய குறையை பார்த்த யாருக்கும் அவளின் அன்பு தெரியாது.

அவளுக்கு எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கும். ஆனால் யாரும் பேச தான் மாட்டார்கள்.

அவளின் தந்தை இறந்ததற்கு பிறகு உறவுகளும் கைவிட்டன. அவளுக்கு திருமண வயதும் வந்தது. ஆனால் பேச முடியாத காரணத்தினால் அவளை திருமணம் செய்து கொள்ள யாரும் முன் வரவில்லை.

பிறகு என் பெற்றோர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது. காலங்கள் கடந்தன. எங்களுக்கும் வயதாகி விட்டது.

அவளுக்கு நான்தான் உலகம். என்னைத் தவிர அவளுக்கு வேறு யாரையும் தெரியாது.

அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒருவேளை அவளுக்கு முன்பாக நான் இறந்து விட்டால் அவளின் நிலை என்ன?

எனக்கு முன்பு அவள் இறந்து விட்டால் பரவாயில்லை. கடைசி வரை அவளை பார்த்துக்கொண்ட நிறைவாவது இருக்கும்.

ஆனால் அவளுக்கு முன்பே எனக்கு இறப்பு வந்தால்?

யோசித்தேன். அதற்காகத்தான் இந்த பணம்.

ஒவ்வொரு மாதமும் என்னால் இயன்ற ஒரு தொகையை அனுப்பி விடுவேன்.

நான் அனுப்பி விடுவதில் பாதி அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கும், மீதி தோகையை என் மனைவிக்காகவும் சேர்த்து வைத்துக் கொண்டு வருகிறேன்.

அந்த பணத்தோடு ஒரு கடிதத்தை கொடுத்தேன் அல்லவா …
அதை திறந்து படித்துப் பாருங்கள் தம்பி” என்றார்.

ரவியின் மனதில் ஒரு உறுத்தல். கைகள் நடுங்கியபடி கடிதத்தை பிரித்து படிக்க, படிக்க. அவன் கண்கள் இரண்டும் குளமானது.

‘கடிதத்தில் நானும் என் மனைவியும் நலமாக இருக்கிறோம்.
இந்த மாதம் என்னால் இயன்ற தொகையை அனுப்பி உள்ளேன்.

அடுத்த மாதம் இதே போல் பணமும் கடிதமும் வந்து சேரவில்லை என்றால் நான் இறந்து போயிருப்பேன் …

நீங்கள் வந்து என் மனைவியை அழைத்து சென்று குழந்தையைப் போல் பத்திரமாக கடைசி வரை பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே என் கடைசி ஆசை.’

அதை படித்து முடித்த ரவிக்கு முகமெல்லாம் வேர்த்து கொட்டியது. மனதில் பாரம் கூடியது. கைகள் நடுங்கின. கலங்கிய கண்களோடு அந்த முதியவரை பார்த்தான்.

“ஐயா உங்கள் மனைவி மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குழந்தையும் கொஞ்சம் சொத்தும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். நீங்கள் உங்கள் மனைவிக்காக இவ்வளவு கஷ்டப்பட தேவை இல்லை.” என்றான் ரவி.

இதைக் கேட்ட முதியவர் சிரித்துக் கொண்டே, “என் மனைவி நம்பி வந்தது என்னைத் தானே தவிர, சொத்தையோ அல்லது பிள்ளைகளையோ நம்பி அல்ல.” என்று சொல்லிக் கொண்டு உச்சி வெயிலில் உற்சாகமாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

ரவியின் கண்களில் தேங்கி நின்ற நீர், ஆலங்கட்டி மழையாய் தரையில் விழுந்து சிதறியது.

ரவி அலுவலக வேலையை முடித்துவிட்டு தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்று, தன் தாய் தந்தை காலில் இருவருமாக விழுந்தனர்.

ரவியின் தாய் தந்தை இருவரும், “கோழி மிதிச்சி குஞ்சு ஒருபோதும் முடமாகாது. தாய், தந்தை புத்திமதி சொல்வதெல்லாம் தன் குழந்தைகள் நல்லா இருக்கணும்னு தான். நல்லா இருங்க. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! வாழ்க வளமுடன்!” என்று வாழ்த்தினர்.

இருவரும் எழுந்து நின்றனர்.

மாலதி மயங்கி கீழே சரிந்தாள். மாலதி வயிற்றில் கரு ஊறத் தொடங்கியது.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.