ஆலய தரிசனம் – சிறுகதை

“இன்னிக்காவது போறோமே… அய்யா! சூப்பர்…செம ஜாலி” என்று மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல், அவசர அவசரமாக அங்கும் இங்கும் ஓடி சீவி சிங்காரித்து கிளம்பிக் கொண்டிருந்தான் அருள்.

“ஐய்யோ ஆண்டவா!.. டேய், இருடா போலாம்.. சும்மா அரக்க பறக்க குதிக்காத. வெளக்கேத்த விடுறியா?” என்று அவனை அதட்டியவாறே விளக்கினை ஏற்றிக் கொண்டிருந்தாள் அருளின் தாய். ஆனால், அருளுக்கோ இருப்பு
கொள்ளவில்லை.

நீண்ட நாட்களாக அவனுடைய வாளிப் பட்டியலில் அடிகோடிடப்படாமல் இருக்கும் அவனுடைய ஆசை இன்று நிறைவேறப் போகிறது.

ஒன்பதாவது வகுப்பு படிக்கும் அருளைப் போன்ற சிறுவர்கள், ஏன் அருளின் நண்பர்களிடம் கூட துளிர் விட வாய்ப்பே இல்லாத ஒரு ஆசை அருளிடம் வருவானேன்.

எல்லாம் அவருடைய தந்தையினால் வந்தது தான். அருள் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னில் இருந்தே அவர் நிறைய பிரம்மோபதேசங்களை புரிந்துள்ளார்.

அறிவியல், அரசியல், புராணங்கள், வரலாறு, நாட்டு நடப்பு என்று எல்லாம் அவனுக்கு போதிப்பார். இவைகளை கதையாக்கி இரவில் கூறுவார்.

சிறு வயது முதல் இவைகளை கேட்டே வளர்ந்த அருளுக்கு இது
போன்ற சரித்திர சிறப்பு மிக்க இடங்களுக்கு செல்வது அலாதி பிரியம்.

அருள் கொரோனா காரணமாக பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். காலுக்கெட்டும் தூரத்தில் இருந்தும், அந்த ஆலயத்திற்கு செல்லும் திட்டம் வெகு நாட்களாக தடைப்பட்டே வந்தது என்பதுதான் நிதர்சனம். இன்று தான் வாய்ப்பு கிட்டியது.

அருள் அந்த பிரம்மாண்டமான கோயில் ராஜகோபுரத்தை எட்டிப் பார்த்தான். பளிச்சென்று அடிக்கும் சூரிய வெளிச்சம் மேல் கலசங்களில் பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது.

கோயிலில் ராஜகோபுரத்தை தாண்டி ஒரு மூடப்பட்ட ஒரு முகப்பு இருக்கும். இங்கே தான் காலணிகளை கழட்டுவது, சுவாமி படங்களை விற்பது மற்றும் தாயத்து கட்டுவது நடைபெறும்.

அதனை தாண்டி சென்றால், ஒரு மண்டபம் இருக்கும். இங்கே தான் கொடி மரம் அமைந்திருக்கும்.

கோயில் நிர்வாகம், தேர் இருக்கும் அறை, அமர்வு கூடம், தியான மண்டபம் எல்லாம் அமைந்திருக்கும். இதனையெல்லாம் பார்த்து அருளுக்கு உடம்பு சிலிர்த்தது.

இதனை தாண்டி சென்றால் தான் உற்சவ மண்டபம். கல்யாண உற்சவம் நடக்கும் இடம். இந்த முகப்பின் இருபுறமும் திறந்திருந்தது.

இந்த வழியாக தான் மற்ற சிறிய சன்னிதிகளுக்கு சென்று ஆலயத்தினை வலம் வருதல் வேண்டும் என்று அருளுக்கு தோன்றியது. இந்த முகப்பினை தாண்டி, இரு முகப்பு உள்ளது.

அதனைக் கடந்தால் தான் மூலவர் சன்னிதானம்.

ஆனால் இந்த மண்டபத்தினை நேர் வழியே கடக்க இயலாதவாறு லிஃப்ட்களில் வரும் ஸ்லைடிங்க் கிரில் கதவுகளால் மூடப்பட்டிருந்ததைப் பார்த்த அருளுக்கு பயம் வந்துவிட்டது. ‘ஒருவேளை நடை சாத்தப்பட்டதோ என்று.’

ஆனால், மூல கர்பகிருஹம் மூடப்படவில்லை. நிறைய பேர் அந்த கதவின் துவாரங்களில் இருந்து கடவுளை பிரார்த்தனை செய்வதை அருள் பார்த்தான்.

‘ஒருவேளை க்யூ வரிசை உண்டோ?’ என்று யூகித்த அருள், அவனுடைய அன்னையை அழைத்து க்யூ வரிசை தேடிச் சென்றான்.

ஒருவாறு க்யூவின் முகப்பினை அடைந்தனர். அங்கே உள்ள பலகையில் ‘சிறப்பு தரிசனம் – 75 ரூபாய்‘ என்று போட்டிருந்தது. ஆனால் இருந்ததோ ஒரே ஒரு க்யூ தான்.

அருள் அங்கிருந்த அதிகாரியிடம் “சார், ஃப்ரீ தரிசனம் க்யூ எங்க இருக்கு?” என்று வினவினான்.

அவரோ, “ஃப்ரீ தரிசனம் எல்லாம் இல்ல. ஒரே தரிசனம். 75 ரூவா. வர்ற‌தா இருந்தா நில்லு. இல்லனா அங்க கேட் வழியா நின்னு பாரு” என்று ஒரே போடாக போட்டு விட்டார்.

இதனைக் கேட்ட இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

’75 ரூவா தான போயிடலாம், இவ்ளோ தூரம் வந்தாச்சு, சரி’ என்று மனம் கூறினாலும், ‘அய்யோ, 75 ரூவா வா, அத வச்சி பையனுக்கு எதாவது வாங்கித் தரலாம். காய் பழம் வாங்கிட்டு போலாம். பஸ்ல டிக்கட் எடுக்கலாம்” என்று அருளின் அம்மாவுடைய புத்தி அவளுக்கு அறிவுரை சொல்ல தொடங்கியது.

மனதுக்கும் புத்திக்கும் நடந்த சண்டையில் புத்தி வென்றது. அருளுக்கு இதை ஜீரணிக்க இயலவில்லை.

அருளின் அம்மாவை ஒரு சிறந்த தெய்வ பக்தை என்று சொல்வதைக் காட்டிலும் வெறி பிடித்த பக்தை என்று தான் சொல்ல வேண்டும்.

அவளுக்கு கணவன், மகன், கடவுள் இவ்வளவு தான் தெரியும். நிதானமாக, அந்த கிரில் கதவின் முன் அமர்ந்து தியானம் செய்ய தொடங்கினாள்.

அருள் துவாரத்தின் வழியே பார்த்தபோது, காசு கொடுத்து சென்றவர்கள் கருவறையின் முன் வரிசையாக அமர்ந்து பூஜையை கண் முழுவதும் கண்டு களித்தனர்.

அருளுக்கு தன் அம்மா அமர்ந்திருக்கும் இடத்தையும், க்யூ வரிசையில் சென்றவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தையும் கண்டு கோவம் தாங்கவில்லை.

அவன் கோவம் அதிகாரிகளிடம் மட்டும் முடியாமல், கடவுளிடமே திரும்பியது. மனதுக்குள்ளே கடவுளை சரமாரியாக திட்டினான்.

‘உங்க பக்கத்துல உக்காந்துட்டு இருக்குறவங்க பக்திய விட, என் அம்மாவோட பக்தி எந்த அளவு கொறச்சல்? எந்நேர‌மும் உன்ன பத்தி தான நெனச்சிகிட்டு இருப்பா, அவள இப்படி ஏமாத்திட்ட, அவ உங்கிட்ட என்ன அப்டி கேட்டுட்டா, உன்னோட அருள் தான கேட்டா?” என்று புலம்பி தள்ளினான்.

அதே சமயம், மற்றொருவர், “என்னடா இப்டி பண்ணுரானுங்க… ஒரு ஃப்ரீ தரிசனம் கூட இல்லையாம்…. காசு இருந்தா பக்கத்துல பாக்கலாம் இல்லனா இப்டி ஓட்ட வழியா பாக்கனுமாம்.” என்றார்.

அவருடன் வந்தவர், “ஆமாம், இங்க பக்திக்கெல்லாம் மதிப்பே இல்ல… காசுக்கு தான், பின்ன, அந்த கடவுளுக்கும் நிறைய அலங்காரம் பண்ணிக்கனும், நக போட்டுக்கனும்முன்னு ஆசையெல்லாம் இருக்குமுல… அதனால தான் அவருடைய அருள காசுக்கு விக்கிறாரு” என்றார்.

உடனே ஒரு பெரியவருக்கு கோவம் வந்துவிட்டது.

“தம்பி, அப்டியெல்லாம் கோவில்ல வந்து தெய்வத்த நிந்திக்க கூடாது; காரணமே இல்லாம இப்டியெல்லாம் பன்ற இந்த கோயில்ல இருக்குற பாவிகள் பன்றதுக்கெல்லாம் கடவுள் எப்டி பொறுப்பாக முடியும்? அவங்க ஊருக்கே படி அள‌ப்பவங்க…. அவுங்க எதுக்கு உன்னோட காச வாங்கிட்டு அருள விக்கனும்” என்று வியாக்யானமாக பேசினார்.

தியானத்தில் இருந்த அருளின் அம்மாவுடைய வாயோரத்தில் சிரிப்பு தெரிந்தது.

அதனை கவனித்த அருள் உடனே அந்த பெரியவரை நோக்கி, “ஐயா, சாமி படி அளக்குறாரு சொன்னீங்களே, அவங்க அள‌க்குறது பத்தாம தான், இன்னும் கேட்டு இங்க வர்றோம்… ஆனா அதக்கேக்க வர்றதுக்காகவே இவங்க அள‌ந்ததுலயே பங்கு கேட்டா நியாயமா? என்னோட அம்மா எவ்வளவு பாவம் தெரியுமா?” என்று சொல்லி முடிப்பதற்குள் அருளின் அம்மா அவனை அதட்ட, அந்த இடத்தினை விட்டு இருவரும் நகர்ந்தனர்.

அடுத்தடுத்த சன்னதிகளுக்கு செல்லத் தொடங்கினர்.

அருளுக்கு கோவம் இன்னும் போகவில்லை. ‘ஏன் ஃப்ரீ தரிசனம் இல்லை?’ என்பது அவனுக்கு இன்று வரை புரியாத புதிர் தான்.

அவன் அம்மாவிடம், “கடவுளுக்கு பணமா? இல்ல பணத்துக்கு கடவுளா? கடவுள் பாக்க காசு வேணுமா? இல்ல காச பாக்க கடவுள் வேணுமா?” என்று கேட்டான்.

அடுத்த சன்னதியில், இவர்களுக்கு முன், ஒரு பெரிய வட்டார பழக்கமுடையவர் போன்ற ஒரு நபர் நின்றிருந்தார்.

அவருக்கு விசேஷமாக ஒரு கடவுள் மீது சாத்தப்பட்டிருந்த ஒரு மலரினை பிரித்து வழங்கினார் பூசாரி.

அதற்கு பின், அருளின் அம்மா நின்றிருந்ததை கவனித்தும், அவர் கையில் இருந்த மீதி மலரினை வழங்க மனமில்லாமல், உள்ளே வைத்து விட்டார்.

அவளும் நீட்டிய கையினை பட்டென்று இழுத்துக் கொண்டாள். ஏற்கனவே, கோப‌த்தில் இருந்த அருளுக்கு இது இன்னமும் எரிச்சல் ஊட்டியது.

விறுவிறுவென்று பிரகாரத்தினை சுற்றி வந்து வெளியே செருப்பினை மாட்டிக் கொண்டிருந்தான் அருள். இன்னமும் அவன் அம்மா கோயிலில் தியான மண்டபத்தில் அமர்ந்துதான் இருந்தாள்.

“ச்சே,, இந்த அம்மாவ திருத்தவே முடியாது… போ…” என்று திட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில், இரண்டு ரூபாய் பிச்சை போட்ட ஒரு தாத்தாவினை ஏசிக் கொண்டிருந்த தன் அம்மா வயதினையொத்த ஒரு பெண்மணியைப் பார்த்து இவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.

அவள் இவனை நோக்கினாள். இவனோ, தன்னையும் இவள் திட்டுவாள் என்று எண்ணி ஒரு இருபது ரூபாய் நோட்டினை தட்டில் போட்டான்.

அவளும், “மகராசனா இருக்கனும் தம்பி நீ” என்று வாழ்த்தினாள்.

இதனை கேட்ட அருள், திரும்பி எதேச்சையாக மேலே பார்த்தான். சூரியனை மேகம் முழுவதுமாக மூடியிருந்தது. கோபுர கலசம் பொலிவினை இழந்து காணப்பட்டது.

அருளின் முகத்தில் இருந்த கோப‌ம் மெதுவாக குறைந்து சிரிப்பினை வெளிப்படுத்த தொடங்கியிருந்தது.

கவின்ராஜ் கிருஷ்ணமூர்த்தி
கைபேசி: 8667865549 (வாட்சப்)

2 Replies to “ஆலய தரிசனம் – சிறுகதை”

  1. நான் எழுதாமல் சோம்பி கிடக்கிறேன்; என் மாணவன் களத்திற்கு வந்து விட்டான்.

    கதையின் சாராம்சம் மிக அருமை.

    அரைக்கிழமாகி விட்டேன்; இன்னுமும் எனக்கு கடவுள் பற்றிய தெளிவு வரவில்லை. காசு கொடுத்துதான் கடவுளை காண வேண்டுமா? என்று அருள் கேட்பது போல் எனக்கும் கேள்விகள் ஆயிரம்…

    இந்த கதையில், பேசாத சிலைகளை விட பேசும் பிச்சைக்காரியின் வார்த்தைகள் அருளுக்கு நிம்மதியை தந்திருக்கிறது…

    சிலைகளை கர்ப்பக்கிரகத்தை மனிதன் படைத்து பாதுகாக்கிறான். மனிதர்களை யார் படைத்தார்கள்? யார் பாதுகாக்கிறார்கள் என்ற கேள்வி இந்தக்கதையின் மையப்புள்ளி…

    இந்தக் கதையை எழுதிய என் அன்பினிய மாணவன் கவின் கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்த்துக்கள்.
    .
    பிரசுரித்த இனிது இதழுக்கு எப்போதும் நன்றி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.