ஆலய வழிபாடு – ஒரு பார்வை

நாம் அன்றாடம் இறைவனை மனதிலும் இல்லங்களிலும் வணங்கி வந்தாலும் ஆலய வழிபாடு என்பது அவசியமானது ஆகும். அதனைப் பற்றிப் பார்ப்போம். 

ஆலய வழிபாட்டுக்கு செல்பவர்கள் குளித்து தூய்மையான ஆடை உடுத்தி திருநீறு,  திருமண் என அவரவருக்கு ஏற்றவாறு உள்ளவற்றை அணிந்து ஆலயம் செல்ல வேண்டும்.

திருகோவிலினை அடைந்தவுடன் கோவிலின் முன்பு அமைந்துள்ள திருகுளத்தில் (தெப்பத்தில்) கைகால்களை கழுவிக் கொள்ள வேண்டும்.

ஆலய கோபுரத்தின் முன் நின்று இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து அண்ணாந்து நோக்கி கோபுர தரிசனம் செய்ய வேண்டும். 

கோபுரத்தை தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் நினைத்து வணங்கி வழிபட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

 

கோபுர தரிசனத்திற்கான காரணம்

ஆலயங்களில் கோபுரத்துக்கு எதிரில் நாம் நிற்கும்போது இறைவனான பரம்பொருள் எங்கும் நிறைந்து காணும்படியாக இருக்கிறார். அவருக்கு எதிரில் நாம் மிகவும் சிறியவர்கள் என்ற அடக்க உணர்வு ஏற்படும்.

மனத்தில் அகங்காரம் அழிந்து பணிவு தோன்றும். எனவே கோபுரத்தை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும்.

மேலும் கோபுர உச்சியில் அமைக்கப்பட்டுள்ள செம்பு கலசங்கள் இடி, மின்னல் ஆகியவை தாக்கும் போது அதனை ஈர்த்து பூமிக்கு செலுத்தி விடும்.

 

கோபுரத்தின் சிறப்பு

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது பழமொழி ஆகும். கோவில் வழிபட முடியாதவர்கள் (தூரத்தில் இருக்கும்போது) கோபுர வழிபாடு செய்யலாம். இது கருவரையில் இருக்கும் இறைவனை வழிபட்டதற்கு சமமாகக் கருதப்படுகிறது. 

 

ஆலயத்தை உடலோடு ஒப்பிடும் முறை

கோவில்கள் நமது உடம்பின் வடிவத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. 

பாதங்கள்  – முன்கோபுரம்

முழங்கால் – ஆஸ்தான மண்டபம்

தொடை – நிருத்த மண்டபம்

தொப்புள் – பலி பீடம்

மார்பு – மஹா மண்டபம் (நடராசர்)

கழுத்து – அர்த்த மண்டபம் (நந்தி)

சிரம் – கருவறை

வலது செவி – தட்சிணாமூர்த்தி

இடது செவி – சண்டிகேசுவரர்

வாய் – ஸ்நபந மண்டப வாசல்

மூக்கு – ஸ்நபந மண்டபம்

புருவ மத்தி – இறைவன் (லிங்கம்)

தலையின் உச்சி – விமானம் 

 

தினசரி ஆலய தரிசனம் செய்வோர் வாயால் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.

ஆலயத்தில் நெஞ்சில் இறைவன் நினைவை நிறுத்தி கண்களை மூடி தியானம் செய்வது மிகச்சிறந்தது.

நமது ஆலயங்களில் காணப்படும் அமைதி மனதிற்கும் ஊடுருவி தெய்வ சக்தியை நமக்கு வழங்கும். ஆகையால் ஆலய வழிபாடு செய்வோம். வாழ்வின் உன்ன நிலையை அடைவோம்.

 

 

One Reply to “ஆலய வழிபாடு – ஒரு பார்வை”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.