இகபரமென – கவிதை

இசையின் விரல் பிடித்து

இகபரமென

இருபெரு வெளியில் மிகுந்து

தன்னை விரித்துக் கொள்கிறது

பிரபஞ்சம்

நுனி காணா எல்லையற்று

நீண்டு நெளிந்துழாவி

மகிழ்விக்கிறது

இசை

பனித்துளி முகத்தில்

தெறிக்கும் மின்னொளியின்

அதிர்விலெழும் ஒலியில்

ராக பாவங்கள்

அனிச்சையிலும் மென்மையாய்

தூரிகையாகித்

தென்றலின் மேனி

வரையும் மெல்லிசை

யௌவன வெளியில்

மோகனத்தின் விளிம்பில் சுரக்கும்

இசை நுனி பெருகிப் பாயும்

வெள்ளத்தில் நீராடும்

உயிர்

நவரசத்தின்

உள்நுழைந்து துழாவும் நூதன

கலவையில் நவீனப்படும்

இராக இழை மெத்தையிட

மனத்தில்

புலன்களின் ஆடல் நிகழ வசமாகும்

பொறிகள்

வசித்து வாழும் இசையில்

சுவாசிக்க வாழும்

வெளி பரவிய உயிரினங்களின்

வாழ்க்கை

கா.அமீர்ஜான்

கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.